இறுதி மூச்சு இருக்கும் வரை மு.கா.வை பலப்படுத்துவேன்
முஸ்லிம் காங்கிரஸில் இணைந்த ஹிஸ்புல்லாஹ் உறுதியளிப்பு
(எச்.எம்.எம்.பர்ஸான், எம்.எஸ்.எம்.நூர்தீன்)
எனது இறுதி மூச்சு இருக்கும்வரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து கட்சியை பலப்படுத்தி கட்சிக்காக எனது முழு பங்களிப்பையும், எனது அனுபவத்திலிருந்து வழங்குவேன் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனரும் முன்னாள் அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் செவ்வாய்க்கிழமை இரவு மு. கா. தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் மீள இணைந்து கொண்டார். இந்த நிகழ்வு ஓட்டமாவடி காவத்தமுனையில் இடம் பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம். முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் காங்கிரஸ் என்பது எமது தாய் வீடு ஆகவே, அந்த தாய் வீட்டிலேதான் மீண்டும் போக வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்து வந்துள்ளேன். எப்பொழுதுமே இன்னுமொரு கட்சியை தொடங்க வேண்டும் என்று பலர் என்னிடத்தில் சொல்லுகின்ற போதெல்லாம் நான் ஒருபோதும் அதற்கு அனுமதித்தது கிடையாது. ஏனென்றால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிளவுபட்டு கட்சிகளை உருவாக்கி முஸ்லிம் சமூகத்துக்கிடையில் ஒரு பிளவை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம்.
அந்த அடிப்படையில், தலைவரின் கரங்களை முழுமையாக பலப்படுத்தி கட்சியை பலப்படுத்தி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மூன்று முஸ்லிம் பிரதேச சபைகளையும் நூறு வீதம் கைப்பற்றி அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேச சபைகளை கைப்பற்ற தலைவரும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அனைவரும் எடுக்கும் முழுப் பணிக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவேன். தலைவரோடு இணைந்து இந்தக் கட்சியை முழுமையாக பலப்படுத்தி இந்த மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்தின் பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக முஸ்லிம் காங்கிரஸை ஒரு குறுகிய காலத்துக்குள் மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தை நான் எடுத்துள்ளேன் என்றார்.
இங்கு மு.கா. தலைவர் கருத்து தெரிவிக்கையில், ஹிஸ்புல்லாஹ்வின் மீள் இணைவு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் பலமடங்கு வெற்றிகளை ஈட்டுவதற்கான ஒரு நல்ல ஆரம்பமாக அமைகிறது.
இந்த கட்சியிடம் ஹிஸ்புல்லாஹ் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. அதேபோன்று ஹிஸ்புல்லாஹ்விடம் எமது கட்சி எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. இந்தக் கட்சியில் சகலரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தக் கட்சியின் வெற்றியே ஒற்றுமையில் தான் தங்கி இருக்கிறது. அந்த ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான சகல முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடலை செய்தோம் அது மிக உன்னதமாக நடந்திருக்கிறது.
அதில் மிகப்பெரிய விட்டுக் கொடுப்புகளை செய்து கட்சிக்குள் ஹிஸ்புல்லாஹ் இணைக்கப்பட்டுள்ளார் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அலி ஸாஹிர் மௌலானா
ஒரு வாக்குப் பலமுள்ள ஒருவரான ஹிஸ்புல்லாஹ் கட்சியில் சேர்ந்தால் எனக்கு அது பாதிப்பு வருமே என்று நான் நினைக்க வில்லை. கட்சியின் வளத்தை, பலத்தை கூட்டுவதற்காக நல்லெண்ணத்துடன் இணைகின்றார் என்ற அடிப்படையில் சந்தோசமாக மனமார அவரின் இணைவை ஏற்றுக் கொண்டுள்ளேன்.மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமையான முறையில் எங்களது வெற்றியை நோக்கி செல்லவுள்ளோம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாகிர் மௌலானா தனது கருத்தினை தெரிவித்தார்.- Vidivelli