உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு திகதி அறிவிப்பு : முஸ்லிம் கட்சிகள் கூட்டாகவும் தனித்தும் களமிறங்க வாய்ப்பு
ஐக்கிய மக்கள் சக்தியுடன் மு.கா., அ.இ.ம.கா., ந.தே.மு. பேச்சு
(எஸ்.என்.எம்.சுஹைல்)
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை முதல் 21ஆம் திகதி சனிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
இந்நிலையில், உள்ளூராட்சி தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணியமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என முஸ்லிம் கட்சிகள் உள்ளக ரீதியாகவும் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
வேட்புமனு தாக்கல்
அறிவிப்பு
24 மாநகர சபைகள்,41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கான நகரபிதா,பிரதி நகர பிதா, தலைவர், பிரதி தலைவர் மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தேர்தலுக்கான வைப்பு பணத்தை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானதுடன், 20 ஆம் திகதி பணம் வைப்பிடல் நிறைவு பெறும் (நாளை 06 போயா விடுமுறை,எதிர்வரும் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தவிர).
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்களை பொறுப்பேற்பது நிறைவு பெறும்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் தனித்துப்போட்டியிடுவதற்கான முஸ்தீபுகளையே மேற்கொண்டு வருவதாகவும் நேசக் கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் தீர்மானங்கள் எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டத்தில் உள்ளூராட்சி தேர்தல் குறித்த பேச்சுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. பெரும்பாலும் நாம் தனித்து போட்டியிடுவதற்கான தீர்மானங்களையே எடுத்து வருகின்றோம். கூடுதலான இடங்களில் தனித்தே போட்டியிடவுள்ளோம். அத்தோடு, கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது நாம் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட இடங்களில் இம்முறையும் கூட்டணி அமைக்க எதிர்பார்க்கிறோம்.
நாம் இப்போது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில்தான் இருக்கிறோம். பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதாயின் அக்கட்சியுடனேயே கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. என்றாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மலையகக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தினால் அவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. எனினும் நாம் கூட்டணியமைப்பதற்காக விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கும்பட்சத்தில் அவர்களுடன் கூட்டணியமைப்போம்.
முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்தும் சிலர் எம்மோடு பேசி வருகின்றனர். கட்சிகள் பேசும்பட்சத்தில் இந்த விடயம் தொடர்பாகவும் நாம் ஆராய்ந்து தீர்மானத்துக்கு வருவோம் என்றார்.
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையிலும் திருகோணமலையிலும் தனித்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பதற்கு சாத்தியம் இருப்பதாகவும் அக்கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் தலைவர் தற்போது வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் நாடு திரும்பியதும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான பேச்சுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனினும் நாம் ஏற்கனவே எடுத்த நிலைப்பாடுகளுக்கு அமைய கிழக்கு மாகாணத்தில் கூடுதலாக தனித்து போட்டியிடுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. அத்தோடு, வடக்கு, கிழக்குக்கு வெளியே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. எனினும் கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தியே இறுதி தீர்மானத்திற்கு வருவோம். மேலும், ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளோம் என்றார்.
தேசிய காங்கிரஸ்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, கடந்த உள்ளூராட்சி தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தாம் தனித்தே போட்டியிட்டு அம்பாறை மாவட்டத்தில் இரண்டு சபைகளை கைப்பற்றியதாகவும் இம்முறையும் பெரும்பாலும் அதே தீர்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கிழக்கு மாகாணத்துக்கு வெளியே தேர்தலில் போட்டியிடுவது குறித்த எந்தவித உத்தேசமும் இல்லை எனவும் அவர் கூறினார்.
நல்லாட்சிக்கான
தேசிய முன்னணி
இது தேர்தலுக்கான காலம் அல்ல, சகலரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும். எனினும் தேர்தல் வேட்புமனுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தயாராக உள்ளதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பீ.எம்.முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கட்சி மட்டத்தில் தனித்து போட்டியிடுவது குறித்தும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்ததுமான நிலைப்பாடுகள் இருக்கின்றன. எனினும், நாம் இன்னும் இறுதி தீர்மானங்களுக்கு வரவில்லை. தொடர்ந்து கட்சி மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தியோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த பேச்சுவார்த்தையொன்று தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும், ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்தும் நாம் கலந்துரையாடியிருக்கிறோம். எனினும் இன்னும் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை என ந.தே.மு.வின் தேசிய அமைப்பாளர் தெரிவித்தார்.
ஐக்கிய சமாதான
கூட்டமைப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
ஒவ்வொரு உள்ளூராட்சி பிரதேசங்களிலும் உள்ள சமூக நலன் பேணும் அமைப்புகள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், இளைஞர்கள் இணைந்து இந்த மாற்றத்திற்கான பாதையை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தேர்தலில் ஊழலற்ற, நேர்மையான வேட்பாளர்களை ஊர் கூடி ஒற்றுமையாக களமிறக்கி துணிவான செய்தியை வருங்கால சந்ததியினருக்கு சொல்ல முன்வருமாறு ஹசன் அலி கோரிக்கை விடுத்தார்.– Vidivelli