தம்புள்ளை பள்ளியின் அபிவிருத்திக்கு நான் தொடர்ந்து நிதி உதவியளிப்பேன்
இனாமலுவே சுமங்கல தேரர் தெரிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘தம்புள்ளையில் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை தொடர்ந்தும் எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்வதற்கு அரச காணி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நானே முன்னெடுத்தேன். புதிய காணியில் பள்ளிவாசலை நிறுவ நானும் நிதியுதவி வழங்கியுள்ளேன். பள்ளிவாசலின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவுவேன்.’ என தம்புள்ளை ரங்கிரி ரஜமகாவிகாரை சங்க சபாவின் தலைவர் இனாமலுவே சுமங்கல தேரர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவில் இனாமலுவே சுமங்கல தேரரும் கலந்து கொண்டிருந்தார். இது தொடர்பில் வினவிய போதே அவர் விடிவெள்ளிக்கு மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் ‘இந்நாட்டின் மக்களனைவரும் இலங்கையர்கள் எமக்குள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களென்ற பாகுபாடு தேவையில்லை. எமக்குள் சகோதரத்துவம் பலம் பெறவேண்டும். நல்லிணக்கம் உருவாக வேண்டும். சிலரின் அடிப்படை வாத கொள்கைகளை முரண்பாடுகளை உருவாக்குகின்றன. இது களையப்படவேண்டும்.
தம்புள்ளை பள்ளிவாசல் A9 பாதை அபிவிருத்தி பணிகளுக்குத் தடையாக இருந்தால் முஸ்லிம்கள் பள்ளியை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்திக்கொண்டால் புதிய பள்ளி நிர்மாணத்துக்கு நானும் பங்களிப்பு செய்வேன் என 10 வருடங்களுக்கு முன்பு நான் கூறியிருந்தேன். அந்த வாக்குறுதியினை நான் நிறைவேற்றி விட்டேன்.
முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். அவர்களது வணக்க வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அதனாலேயே நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடி பள்ளிவாசலுக்கு புதிய காணியைப் பெற்றுக்கொடுத் தேன். தற்போது A9 வீதி அபிவிருத்தியின் தடையும் நீங்கியுள்ளது.
தற்போது பள்ளி வாசலுக்கு வழங்கப்பட்டுள்ள காணி முன்பு தம்புள்ளை விகாரைக்குச் சொந்தமானதாகும். நரக அபிவிருத்தி திட்டத்துக்காக இக்காணியை அரசு சுவீகரித்தது, அக்காணியில் ஒரு பகுதியே முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்காக வழங்கப்பட்டது.
இப்போது முஸ்லிம்களிடம் நான் மகிழ்ச்சியைக் காணுகிறேன். எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கையர்கள் நாம் இன மத ரீதியில் முரண்பட்டுக்கொள்ளாது நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றார்.
இதேவேளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் (திட்டமிடல்) எல்.எம்.சமந்த குமார ஹைரியா பள்ளிவாசல் தலைவருக்கு கடித மொன்றினை கடந்த 8 ஆம் திகதி அனுப்பி வைத்திருந்தார்.
அக்கடிதத்தில் பின்வருமாறு தெரிவித்தார். ‘A’ 9 பாதை அபிவிருத்தியை விரைவாக தடைகளின்றி மேற்கொள்வதற்கு தற்காலிக தகர நிர்மாணத்தை விரைவாக அகற்றிக் கொள்ளுமாறு கோருகிறேன். புதிதாக வணக்க ஸ்தலத்தை நிர்மாணித்துக் கொள்ள 20 பேர்ச் காணி வழங்கத் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
காணியின் உரிமை எதிர்காலத்தில் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும். நகர அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளூராட்சி மன்றம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் அனுமதியின்றி நிரந்தர கட்டிடம் அமைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விரைவாக செயற்பட்ட பள்ளிவாசல் நிர்வாகம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் வழங்கப்பட்ட காணியில் பள்ளிவாசலை புதிதாக நிர்மாணித்துக் கொண்டுள்ளது. அத்தோடு பழைய பள்ளிவாசல் நிர்வாகத்தினால் அகற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. – Vidivelli