எம்.எப்.எம்.பஸீர்
வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். கடந்த 18 ஆம் திகதி இரவு 10.10 மணியளவில், முகத்தை மறைத்துக்கொண்டு தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி, முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் பர்சான் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் சி.சி.ரி.வி. காணொளிகளில் மிகத் தெளிவாக பதிவாகியிருந்த நிலையில், அக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
மொஹம்மது பர்சான் ஹங்வெல்லை பொலிஸ் நிலையத்தின் சிவில் பாதுகாப்புக் குழுவின் அங்கத்தவர். இவரது உடன் பிறந்த இரட்டை சகோதரர்களில் ஒருவர் மீது கடந்த ஒக்டோபர் மாதம் கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. வீடு புகுந்து அத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள போதும் பொலிஸ் புத்தகங்களில், வீட்டுக்குள் திருட வந்தவர்களுடன் போராடியதில் அவர் வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, சந்தேக நபர்களைக் கைது செய்வதில் மொஹம்மது பர்சான் தனது ஒத்துழைப்பை பொலிஸாருக்கு வழங்கியிருந்தார். குறித்த சந்தேக நபர்கள், டுபாயிலிருந்து, ஹங்வெல்லையின் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் பாதாள உலக தலைவன் ஒருவனின் கீழ் செயற்பட்ட நபர்களாவர்.
இவ்வாறான நிலையிலேயே கடந்த 18 ஆம் திகதி மொஹம்மது பர்சான் இலக்கு வைக்கப்படுகின்றார். குறித்த தினம் இரவு, ஹங்வெல்லை நகரின் குறுக்கு வீதியில் அமைந்துள்ள குறித்த உணவகத்தை அவர் மூடுவதற்கு தயாரான போது கடையின் சேவையாளர்கள் இருவர் கடைக்கு முன்பாக இருந்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ‘ சிகரட் ‘ கேட்டுள்ளனர். ஒரு சேவையாளர் வந்து சிகரட் எடுத்துச் சென்று கொடுக்க முற்பட்டு, பணம் கோரியபோது பணம் இல்லை என மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சேவையாளர் சிகரட்டை திருப்பி எடுத்துச் சென்று, காசாளர் மேசையிலிருந்த பர்சானிடமே மீள கொடுத்துள்ளார். அடுத்த கனம், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி கடைக்குள் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி, காசாளர் மேசையிலிருந்தவாறு காசு எண்ணிக் கொண்டிருந்த பர்சானின் நெஞ்சுப் பகுதியை இலக்கு வைத்து தொடர்ச்சியாக நான்கு துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து உணவக ஊழியர்கள் பர்சானை உடனடியாக பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் அறிவித்தன.
இந்நிலையிலேயே ஹங்வெல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, துப்பாக்கிச் சூட்டினை நடாத்த துப்பாக்கிதாரிகள் வருகை தந்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஹங்வெல்லை – பஹத்கம பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அதன் எஞ்ஜின் இலக்கம், செசி இலக்கம் ஆகியன அழிக்கப்பட்டிருந்த நிலையில் இலக்கத்தகடுகளும் இருக்கவில்லை. இதனைவிட மோட்டார் சைக்கிளை சுற்றி மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது.
இந் நிலையில் பொலிஸ் விசாரணைகளில், கொல்லப்பட்ட பர்சானின் சகோதரருக்கு டுபாயிலிருந்து கிடைத்த வட்ஸ் அப் குறுஞ்செய்தி ஒன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. கொலை நடந்த இரவு, தற்போது டுபாயிலிருப்பதாக நம்பப்படும் லலித் எனும் பாதாள உலக குழுத் தலைவன் ‘நடந்துள்ளதை நன்றாக பார்’ என அந்த குறுஞ்ச் செய்தியில் அனுப்பியுள்ளார். இது குறித்து பொலிஸாரின் கவனம் திரும்பியுள்ளது.
ஹங்வெல்லை நகரில் வர்த்தகர்களிடம் அச்சுறுத்தி கப்பம் கோரும் நோக்கில், வர்த்தகர்களை அச்சமடைய செய்ய, டுபாயிலிருந்தவாறு ஹங்வெல்லையில் தம்மை சண்டியர்களாக நிரூபிக்க தடுமாறும் பாதாள உலக தலைவர்களான சமில மற்றும் லலித் ஆகியோரின் உத்தரவின் பிரகாரம், அவர்களது சகாக்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டினை நடாத்தியிருப்பதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய ஹங்வெல்லை பொலிசாரும், மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.- Vidivelli