சிறுநீரக கடத்தல் விவகாரம்: ‘திட்டமிட்ட சூழ்ச்சி’
அதிகாரிகளுக்கு எதிராக பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் வழக்கு தாக்கல்
( எம்.எப்.எம்.பஸீர்)
சிறுநீரக மோசடி மற்றும் பணம் பறிப்பு உட்பட முழு குற்றச்சாட்டுகளும் ஒரு திட்டமிட்ட, சூழ்ச்சியான ஊடக நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டது என கொழும்பு – பொரளை வெஸ்டேர்ன் தனியார் வைத்தியசாலை சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தனது மருத்துவமனை பல தடவைகள் பல தவறான குற்றச்சாட்டுகளால் குறிவைக்கப்பட்டதாகவும், பின்னர் அவை போலியானவை என நிரூபிக்கப்பட்டதாகவும் மனுதாரர் மனுவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏழை எளியவர்களை ஏமாற்றி இடம்பெற்றதாக கூறப்படும் சட்ட விரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பிலான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுக்கும் நிலையில், தமது வைத்தியசாலையில் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைகளை தற்காலிகமாக இடை நிறுத்தி சுகாதார அமைச்சு விடுத்துள்ள தடைக்கு எதிராகவே கொழும்பு, பொரளை, கொட்டா வீதியில் அமைந்துள்ள வெஸ்டேர்ன் தனியார் வைத்தியசாலை நீதிமன்றை நாடியுள்ளது.
அதன்படி குறித்த வைத்தியசாலையின் தலைவர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் மேன் முறையீட்டு நீதிமன்றில் கட்டளை நீதிப் பேராணை ( writ of Mandamus) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதியாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த மனுவானது கடந்த 16 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது மனுதாரருக்காக நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் சட்டத்தரணி ஷஹீதா பாரி, புலஸ்தி ரூபசிங்க, ஹபீல் பாரிஸ், ரித்மி பெனரகம உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
இதன்போது முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம் , தற்போது வெஸ்டேர்ன் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் இரு சிறுநீரக நோயாளிகளின் நலன்கள் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உத்தரவிட்டது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், 1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையில் முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வதில் தாம் முக்கிய பங்காற்றியதாகவும், 1000க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை நோயாளிகளுக்கு செய்துள்ளதாகவும் மனுதாரரான பேராசிரியர் றிஸ்வி ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
வெஸ்டர்ன் மருத்துவமனையால் மேற்கொள்ளப்படும் அனைத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் தெளிவான, வெளிப்படையான மற்றும் நிறுவப்பட்ட சட்ட நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படுகின்றன என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுநீரக மோசடி மற்றும் பணம் பறிப்பு உட்பட முழு சம்பவமும் ஒரு திட்டமிட்ட, சூழ்ச்சியான ஊடக நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டது என்று மனுதாரர் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தனது மருத்துவமனை பல தடவைகள் பல தவறான குற்றச்சாட்டுகளால் குறிவைக்கப்பட்டதாகவும், பின்னர் அவை போலியானவை என நிரூபிக்கப்பட்டதாகவும் மனுதாரர் மனுவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவமனையானது எல்லா நேரங்களிலும் சுகாதார அமைச்சினால் வகுக்கப்பட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் நடைமுறைகளையும் பின்பற்றுவதாகவும், அமைச்சின் அனுமதியின் பேரில் மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பரிசீலிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.– Vidivelli