கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
நச்சு விருட்சம்
இலங்கையின் இன்றைய இனப்பிரச்சினை அரசியல் அதிகார நலனுக்காக அரசியல்வாதிகளால் ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் விதைக்கப்பட்டு நீரூற்றி வளர்க்கப்பட்ட ஒரு நச்சு விருட்சம். இப்பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அத்தனையும் அந்த விருட்சத்தின் ஒரு சில கிளைகளை மட்டும் நறுக்கி வீசிவிட்டு மரத்தைக் காப்பாற்றும் நோக்கமாகவேதான் அமைந்தன என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் எண்ணத்தில் எழுந்த போராட்டங்கள் சாத்வீகமாக ஆரம்பித்து, இனக்கலவரங்களை உருவாக்கி, ஆயுதப்போர்வரை நீடித்து, பல்லாயிரக்கணக்காண அப்பாவி உயிர்களையும் பலகோடிக்கணக்கான உடமைகளையும் பலிகொண்டு இன்று நாட்டையே வங்குரோத்தாக்கியுள்ளன. பல்லினங்களை உள்ளடக்கிய ஒரு நாட்டில் இனவாதத்தை வளர்த்துவிட்டால் அது எங்கேபோய் முடியும் என்பதற்கு இலங்கை மிகச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.
பசி புகட்டும் பாடம்
“பசிவந்திடப் பத்தும் பறந்துபோம்”என்றாள் ஒளவை. அவள் கூறிய பத்தினுள் இனப்பற்று அடங்கவில்லை. ஏனென்றால் அப்படியொரு பற்றே மனிதப்பற்றை வளர்த்த அன்றைய சமூகத்தில் இருக்கவில்லை. ஆனால் பத்தோடு பதினொன்றாக இனவாதத்தையும் மறந்துவிடக்கூடிய ஒரு சூழல் இப்போது பசியின் கொடுமையால் உருவாகியுள்ளது. அதற்குக் காரணம் உள்நாட்டு இளஞ்சந்ததியின் விழிப்புணர்வு ஒரு புறமிருக்க, சர்வதேசத்தின் அழுத்தமே முக்கியமானதெனக் கூறலாம். வெளிநாட்டுப் பிச்சை இல்லாமல் உள்நாட்டுப் பசியைத் தீர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கையின் அரசியல் தலைமைப்பீடம் தள்ளப்பட்டுள்ளது. இனவாதத் தீயை வளர்த்து, அந்த வெப்பத்திலே குளிர் காய்ந்துகொண்டு, அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டின் செல்வத்தையே திட்டமிட்டுச் சூறையாடிச் சுயலாபம் சம்பாதித்த அரசியல் தலைமைகள், இதுவரை நாடுபட்ட கடனையே இறுக்க முடியாத நிலையில் இனியும் கடன்படாமலும் பசியை ஓட்டமுடியாது என்பதையும் உணர்ந்துள்ளதற்கு அறிகுறியாகவே ஜனாதிபதி விக்கிரமசிங்ஹவின் இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான அறிவிப்புகளைக் கருதுதல் வேண்டும். பசியே! நீ வாழ்க.
உணரவேண்டிய ஓர் உண்மை
சர்வதேச அரங்கின் அழுத்தங்களே இத்திருப்பத்துக்கான ஒரு முக்கிய காரணம் எனினும் இப்பிரச்சினைக்கான தீர்வினை சர்வதேசமோ அல்லது வேறு எந்தவொரு நாடோ இலங்கையின்மேல் திணிக்க முடியாது. இலங்கையின் நலன்கருதி ஆக்கபூர்வமான பல ஆலோசனைகளை அவை முன்வைக்கலாம், ஆனால் அவற்றை ஏற்பதும் விடுவதும் இலங்கையின் உரிமை. எனவே இப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு இலங்கைக்குள் இருந்தே இலங்கை மக்களின் ஆதரவுடன் உருவாக வேண்டும். அதனை உருவாக்கக்கூடிய சாணக்கியமுள்ள தலைவர்கள் எங்கே என்பதுதான் இன்றையப் பிரச்சினை.
ஜனாதிபதியின் தவறான ஆரம்பம்
ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ, எதிர்வரும் சுதந்திரதின விழாவுக்கு முன்னராக இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமென்ற அவசரத்தினால் மூவினங்களின் அரசியல் தலைவர்களை முதலில் வரவழைத்துப்பேச எடுத்த முடிவு தவறான ஓர் ஆரம்பம் என்பதே இக்கட்டுரையின் நிலைப்பாடு. அரசியல்வாதிகளால் அதிகார நலனுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினையொன்றிற்கு அரசியல்வாதிகளிடமிருந்தே அதற்கான பரிகாரத்தையும் கோருவது திருடனிடம்போய் திருட்டை ஒழிக்க ஆலோசனை கேட்பது போல் இல்லையா?
அவருடன் சந்தித்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே ஒவ்வோர் அரசியல்வாதியும் அவ்வவர்களின் வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் தொகுதிகளிலும் கண்களை வைத்துக்கொண்டு அவர்களின் வாக்காளர்களை கவரக்கூடிய தீர்வுகளையே முன்வைத்து உரையாடினார்களே ஒழிய இந்த நாட்டின் சபீட்சத்தை கருத்திற்கொண்டு இனவாதத்தின் முழுவடிவத்தையும் முன்வைத்து அந்த உரையாடலை ஆரம்பித்ததாகத் தெரியவில்லை. எடுத்த எடுப்பிலேயே அரசியல் சட்டத்தில் பதின்மூன்றாம் திருத்தத்தை கொண்டுவர வேண்டுமென்று சில பிரபலங்களும், கிழக்கையும் வடக்கையும் இணைப்பதா இல்லையா என்ற பிரச்சினைபற்றி இன்னும் சில பிரபலங்களும், அதிகாரப் பங்கீடுபற்றி மேலும் சில தலைமைகளும், தமிழரினதும் முஸ்லிம்களினதும் இழப்புகளைப்பற்றி ஒன்றிரண்டு தலைமைகளும் என்றவாறு பிரச்சினைகளையே முன்வைத்துப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தமை அத்தலைமைகளிடமும் ஜனாதிபதியைப் போன்று அரசியல் சாணக்கியத் திறன் இல்லை என்பதையே தெளிவு படுத்துகிறது.
இவ்வாறு கூறுவதனால் இப்பிரச்சினைகளை நிராகரிப்பதாகக் கருதக் கூடாது. அற்றை எதிர்கொண்டு தீர்க்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் அவற்றைச் சூழ்ந்துள்ள சில தப்பான சிந்தனைகளை முதலில் போக்க வேண்டும். உதாரணமாக, பதின்மூன்றாம் திருத்தத்திலும் வடக்குக் கிழக்கு இணைதலிலும் இந்தியாவின் முத்திரை பதிந்துள்ளதை யார்தான் மறுப்பர்? ஆகவே அவை இந்தியாவின் திணிப்பு என்ற கருத்து சிங்கள மக்களிடையே அதுவும் தென்னிலங்கைப் பொது ஜனங்களிடையே புதைந்து கிடக்கிறது. அவர்களின் இந்திய வெறுப்புக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. அதனை இங்கே விபரிப்பது பொருத்தமற்றது.
ஏற்கனவே கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகியபோது, அவர் முதன் முதலில் புது தில்லிக்குப் பயணமாகி, அங்கே இந்தியாவிடமிருந்து கடன் பெறுவதற்காக பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல் நடத்துவதாகப் பிரதமர் மோடிக்கு வாக்குறுதியளித்து, இலங்கை திரும்பியதும் தென்னிலங்கையின் சீற்றத்தை உணர்ந்த ஜனாதிபதி இரவோடிரவாக அந்த வாக்குறுதியைப் பின்வாங்கியமை வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். இப்போதும்கூட ஜனாதிபதி விக்கிரமசிங்ஹவுடன் சிறுபான்மையினரின் தளபதிகள் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் கசியத் தொடங்கவே சில சிங்கள இனவாதிகள் அவர்களின் வழமையான எதிர்ப்பை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு மத்தியில் அவ் இனவாதிகளுக்கு ஆதரவு திரட்டுவதுபோன்று ஒரு முஸ்லிம் பிரபலம் வடக்கையும் கிழக்கையும் இணைவதை முஸ்லிம்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்ற பல்லவியை மீண்டும் பாடத் தொடங்கியுள்ளார். பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்ட இவ்வாறான முஸ்லிம் பிரபலங்களின் ஆதரவினாலேதானே 20ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டு அதன்விளைவாக ஏற்பட்ட இத்தனை அரசியல் அமளி துமளிகளும் பொருளாதாரக் கஷ்டங்களும் நாட்டின் வங்குரோத்தும் என்பதை மக்கள் மறப்பார்களா? எனவேதான் இவ்வாறான பிரபலங்கள் வாய் மூடி இருந்தாலே இப்பிரச்சினை தீர்வதற்குப் போதுமானது என்பதை இங்கே வலியுறுத்த வேண்டியுள்ளது.
இந்தப்பிரச்சினையை உண்மையிலேயே தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஜனாதிபதிக்கு இருந்திருந்தால் முதலில் அவர் செய்யவேண்டியது என்னவெனில், இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சொந்தமானது என்ற உண்மையையும் சகல இனங்களினதும் ஒத்துழைப்பின்றி இந்த நாட்டை இனிமேல் கட்டியெழுப்ப முடியாது என்ற உண்மையையும் தென்னிலங்கைச் சிங்கள பௌத்த சமூகத்தினரிடம் துணிவுடன் வெளிப்படுத்தி அவர்களின் ஆதரவைப் பெற்றபின்னர் சிறுபான்மை இனங்களின் தலைமைகளுடனான உரையாடலை ஆரம்பித்திருக்க வேண்டும். அவ்வாறான ஒரு முயற்சிக்கு நிச்சயமாக இன்றைய இளஞ்சந்ததி அவருடன் இணைந்து செயற்பட்டிருக்கும் என்பதை அவ்விளவல்களின் அரகலய போராட்டம் எடுத்துக்காட்டியது.
தவறவிட்ட சந்தர்ப்பம்
இளைஞர்களின் அந்த அரகலயப் போராட்டம் சகல இனங்களையும் உள்ளடக்கியதாகவும் எந்தவோர் அரசியல் கட்சியையும் சாராததாகவும் ஆரம்பித்தமை இன ஒற்றுமையின் அவசியம் பற்றிய அவர்களின் தாகத்தையும் விழிப்புணர்வையும் எடுத்துக்காட்டவில்லையா? இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிங்கள பௌத்த மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு இந்த இளம் படையையே ஜனாதிபதி ஓர் ஆயுதமாகக் கொண்டிருக்கலாம். ஆனால் நடந்ததென்ன? அந்த இளைஞர்களையே தீவிரவாதிகளெனப் பட்டம் சூட்டி அவர்களின் தலைவர்களையும் சிறையிலடைத்து அரசபடைகளின் ஆதரவுடன் அவர்களின் மறு எழுச்சிக்கும் தடைவகுத்திருக்கும் இந்த ஜனாதிபதியின் அரசியல் மடமையை என்ன சொல்லி அழைப்பதோ? அரியதொரு சந்தர்ப்பத்தை தனது அரசியல் அதிகார நலனுக்காக நழுவவிட்டபின்னர் இப்போது அவர் மேற்கொள்ளும் முயற்சி நிச்சயம் தோல்வியுறும் என்பதை இனியும் வலியுறுத்த வேண்டுமா?
ஒரே வழி
ஏற்கனவே கூறியதுபோன்று அரசியல்வாதிகளால் அரசியல் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட இப்பிரச்சினையை அரசியல்வாதிகளே தீர்த்துவைப்பர் என்று யாராவது எதிர்பார்த்தால் அது ஒரு பகற்கனவாகவே முடியும். அதேபோன்று அன்னியரின் தலையீடும் இதனைத் தீர்க்க உதவாது. அவ்வாறாயின் இதற்கு வழி என்ன? இந்தப்பிரச்சினை பற்றிய தீர்வை அரசியல்வாதிகளின் கைகளிலிருந்து பிடுங்கியெடுத்து நாட்டுப்பற்றும் மனிதநேயமும் அரசியல் சாணக்கிய நிபுணத்துவமும் கொண்ட ஒரு குழுவிடம் (a committee of statespersons) சமர்ப்பித்து அக்குழுவினை இளந்தலைமுறையினருடன் இணைந்து செயற்படுமாறு சமூகம் பணிக்கவேண்டும். அவ்வாறான ஒரு குழுவில் எல்லா இனங்களும் அங்கத்துவப் படுத்தப்படவேண்டும் என்பதும் அவசியமில்லை. ஏனெனில் அக்;குழுவினர் மேலே வரையறை செய்யப்பட்ட இலக்கணங்களுக்குள் அடங்குவர். ஆனால் முக்கிய பிரச்சினை என்னவெனில் அப்படிப்பட்ட நிபுணத்துவர்களை எங்கே தேடுவது என்பதே.
இனவாதச் சூழலிலேயே பிறந்து வளர்ந்து முதிர்ச்சி அடைந்து இனவாத நிழலிலேயே தூங்கியெழும் ஒரு சந்ததிக்கும் அந்த இனவாதத்தின் தீய விளைவுகளால் தங்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்க முடியாமல் துடிக்கும் ஓர் இளம் சந்ததிக்கும் இடையே ஒரு பாரிய இடைவெளி உண்டு. இந்த இளஞ்சந்ததி வாழும் உலகையும் அவர்களின் சிந்தனையையும் செயற்பாடுகளையும் முதுமையடையும் சந்ததியால் விளங்குவது கடினம். இளவல்களை வெறும் கனவுலகில் வாழும் பதின்மவயதினர் என்று எடைபோட்டு அவர்களை சமூக விவகாரங்களிலிருந்து ஒதுக்க முனைவது மடமை. அதையேதான் ஜனாதிபதி இப்பொழுது செய்துள்ளார். மேற்கூறப்பட்ட குழுவினரை அடையாளம் காண்பதற்கு இந்த இளவல்களின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் அவசியம். அந்தக் குழுவிலே அங்கத்துவம் பெறும் தகுதி இளம் தலைமுறையினரிடம் இல்லையென்றாலும் அந்தத் தகுதியடையோர் யார் என்பதை அவர்களால் சுட்டிக்காட்ட முடியும். ஆகவேதான் இனப்பிரச்சினைக்கான தீர்வினை இன்றைய அரசியல்வாதிகளிடமிருந்து நீக்கி இளந்தலைமுறையினரை அணைத்துச் செயற்படக்கூடிய சாணக்கியத் திறனாளிகளிடம் ஒப்படைத்தல் வேண்டும். அவ்வாறான அனுபவமுள்ள திறனாளிகள் இலைமறை காய்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.- Vidivelli