மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் விவகாரம்: பாதுகாப்பு தரப்புடன் பேசி தீர்த்துக்கொள்ள முடியும்
ஜனாதிபதி ரணில் உறுதியளிப்பு
(எஸ்.என்.எம்.சுஹைல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் தொடர்பான ஆவணங்களை தந்தால், அது குறித்து பாதுகாப்பு தரப்புடன் பேசி தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இது விடயமாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியபோதே, அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இங்கு கருத்து வெளியிட்ட மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து பல்வேறு அநாவசிய கைதுகள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு, பல பள்ளிவாசல்களும் பொது நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இவை குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, காத்தான்குடி தாருல் அதர் அமைப்பின் பள்ளிவாசல் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் கோரிக்கையொன்றைவிடுத்துள்ளது. (இதன் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளருக்கும் கையளிக்கப்பட்டது) அந்த பள்ளிவாசலை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவிடம் ஒப்படைத்தால் அதை மக்களது பாவனைக்கு கையளிப்பார்கள். இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட இடமல்ல. சந்தேகத்தின் பேரில் இதனை அரசாங்கம் பறிமுதல் செய்வதற்கு பொலிஸாரை ஈடுபடுத்தியிருக்கிறது.
இது ஊர் நடுவில் இருக்கின்ற மக்களின் வணக்கஸ்தலமாகும். இதற்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்புகள் இல்லை. எனவே, அந்த பள்ளிவாசல் விடுவிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்துப்பேசிய ஜனாதிபதி, இந்த விடயம் தொடர்பான தகவல்கைளை எமக்கு தாருங்கள், பாதுகாப்பு தரப்புடன் கதைத்து இதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என உறுதியளித்தார். – Vidivelli