ஏ.ஆர்.ஏ.பரீல்
அன்று கொழும்பு 14 கிரேண்ட்பாஸ் வீதியில் கம்பீரமாக காட்சியளித்த பழைமைவாய்ந்த சுலைமான் வைத்தியசாலைக் கட்டிடத்தை இன்று காணவில்லை. அந்தக் காணி மாத்திரமே இன்று எஞ்சியிருக்கிறது. அங்கே புதிய கட்டிடமொன்று அவசர அவசரமாக எழுப்பப்பட்டு வருகிறது.
முஸ்லிம் மாணவர்களின் கல்விமேம்பாட்டுக்கான நிதியுதவியினைப் பெற்றுக்கொள்வதற்காக வக்பு செய்யப்பட்ட சுலைமான் வைத்தியசாலைக் கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. என்றாலும் சுலைமான் என்ற பெயரும் அதனை வக்பு செய்த அப்துல் கபூர் ஹாஜியாரின் பெயரும் ஒருபோதும் மக்கள் மனங்களிலிருந்தும் அகன்று விடப்போவதில்லை.
மர்ஹூம் என்.டி.எச்.அப்துல் கபூர் என்ற பெருந்தகையின் வக்பு சொத்துக்களுக்கு அவரது குடும்பத்திலிருந்தே சவால்கள் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் நாம் அந்தப் பெருந்தகைக்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம். அவரது அன்றைய கனவுகள் சிதைந்துவிடாமல் இருப்பதற்காக இறைவனிடம் கையேந்துவோம்.
கபூரியாவும் வக்பு சொத்தும்
கொடைவள்ளல் மர்ஹூம் என்.டீ.எச். அப்துல் கபூரின் முயற்சியினால் 1931ஆம் ஆண்டு ‘மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி உருவாக்கப்பட்டது. இக்கல்லூரிக்கென அப்துல் கபூர் தனது சொத்தில் 17.5 ஏக்கர் நிலம் ஒதுக்கினார். அத்தோடு இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர் கிரேண்ட்பாஸ் வீதியில் தனது 2.5 ஏக்கர் (சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த) காணியை வக்பு செய்தார். இக்காணி மூலம் பெறப்பட்டு வந்த வருமானம் கல்லூரி செயற்பாடுகளுக்காக செலவிடப்பட்டு வந்தது.
என்றாலும் 1995க்குப் பிற்பட்ட காலத்தில் கல்லூரி அதிபர் முபாரக் ஹஸரத்திற்கும் நம்பிக்கையாளர்களுக்குமிடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நம்பிக்கையாளர்களால் சுலைமான் வைத்தியசாலை மூலம் பெறப்பட்டு வந்த உதவித் தொகை எவ்வித முன்னறிவித்தலுமின்றி 2013 வரை நிறுத்தப்பட்டது. கல்லூரியை மேலும் தரமுயர்த்தும் நோக்கில் நம்பிக்கையாளர்களுக்கும் முகாமைத்துவ சபைக்குமிடையில் 2018.05.09ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டாலும் ந ம்பிக்கையாளர் சபை பின்பு எவ்வித காரணமுமின்றி அவ்வொப்பந்தத்தை ரத்துச் செய்தது.
அத்தோடு நம்பிக்கையாளர்களில் ஒருவர் கபூரிய்யாவும், சொத்துகளும் குடும்பச் சொத்து என அறிவித்தார். கபூரிய்யாவுக்கு சொந்தமான காணிகள் வக்பு செய்யப்படவில்லை. அது எமது தனியார் உடமை, பழைய மாணவர்கள் இதனை அத்துமீறி கையகப்படுத்திக் கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்ததுடன் பழைய மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டது.
வக்பு நியாய சபையில் வழக்கு
கபூரிய்யா அரபுக்கல்லூரி அதன் நம்பிக்கையாளர்களால் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்வதற்காக பழைய மாணவர் சங்கம் வக்பு நியாய சபையில் வழக்கு தாக்கல் செய்தது. சுலைமான் வைத்தியசாலை காணி குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வக்பு நியாய சபை கல்லூரியை நிர்வகிப்பதற்கு 11 பேர் கொண்ட முகாமைத்துவ குழுவொன்றினை நியமித்தது. இந்நிலையில் இவ்வழக்குகளுக்கு எதிராக நம்பிக்கையாளர் சபை மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. மனுவில் கபூரிய்யா கல்லூரியும், சொத்துகளும் தர்ம நம்பிக்கை நிதியத்தின் கீழ் உள்ளடங்காது. இது குடும்ப நம்பிக்கை நிதியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வக்பு நியாய சபை நியமித்த பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட முகாமைத்துவ குழுவுக்கு இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளது. இந்த இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக முகாமைத்துவ குழு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
இவ்வாறான நிலையில் நம்பிக்கை பொறுப்பாளர்களினால் அதிபர் ஒருவர் பதவியில் இருக்கின்ற நிலையில் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு நிர்வாகத்தினால் பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம் பறிக்கப்பட்டுள்ளது. நூலகம் மூடப்பட்டுள்ளது. தொழிற் பயிற்சி நிலையம் , தகவல் தொழில் நுட்ப அறை மூடப்பட்டுள்ளது.
இந்த கெடுபிடிகளையடுத்தே கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினையடுத்து சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த காணிக்கு முன்னால் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டின் கீழ் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் கல்லூரியின் மாணவர்கள், பழைய மாணவர்கள், அரசியல்வாதிகள், உலமாக்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் பங்கு கொண்டிருந்தனர்.
போராட்டக்காரர்கள், கபூரிய்யாவையும் அதன் வளங்களையும் பாதுகாப்போம், 90 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கபூரிய்யாவை பாதுகாப்போம், வக்பு சொத்துக்களைப் பாதுகாப்போம், மாணவர்களைத் துன்புறுத்தாதே, நெருப்பை உண்ணாதே, வக்பு சொத்தை உண்ணாதே என்ற வாசகங்கள் பொருந்திய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி
கவனயீர்ப்பு போராட்டத்தில் அசாத்சாலி உரையாற்றுகையில், ‘நாட்டு மக்களுக்கு கபூரியா அரபுக் கல்லூரியின் இன்றைய நிலை தெரியாது. மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறுகிறது. கபூரிய்யா அரபுக் கல்லூரியில் 88 மாணவர்கள் பயில்கிறார்கள். அவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது. என்.டி.எச். கபூர் மஹரகமயில் கபூரிய்யா அரபுக்கல்லூரி அமைந்திருக்கும் இடத்தை 1931இல் கொள்வனவு செய்தார். முழுக்காணி 35 ஏக்கரையும் 90 ஆயிரம் ரூபாவுக்கே கொள்வனவு செய்தார். இப்போது கபூர் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்துள்ளார். இன்று அவரது குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அன்று அவர் வக்பு செய்த சொத்துக்கள் தேவைப்பட்டுள்ளது.
காணியை துண்டாடி விற்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அதுதான் அவருக்குத் தேவைப்படுகிறது. சொத்துகளை துண்டாடி விற்பதே அவரது இலக்கு. நாம் கேட்கிறோம் கபூர் குடும்பத்தினரிடம் இந்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு நீங்கள் அனைவரும் இணக்கமா? ஏற்றுக்கொள்கிறீர்களா? எல்லோரும் ஒன்று சேர்ந்தா இந்த வக்பு சொத்தை சூறையாடப்போகிறீர்கள்?
இந்நாட்டில் கபூர் தனது பாரிய சொத்துகளை மக்களுக்காக தியாகம் செய்தவர். 90 ஆயிரம் ரூபாவுக்கு கபூரிய்யா காணியை வாங்கியது நாட்டிலுள்ள மாணவர்களை இங்கு அழைத்து வந்து கல்வி புகட்டி அவர்களை நற்பிரஜைகளாக்க வேண்டும் என்பதற்காகும்.
இங்கு மாணவர்களும், அவர்களது பெற்றோரும், புத்திஜீவிகளும் வந்திருக்கிறார்கள். மக்களுக்காக வழங்கப்பட்ட பொது நிதிய சொத்தினைப் பாதுகாப்பதற்காகவே இங்கு வந்திருக்கிறார்கள். இது தனிப்பட்ட சொத்து என்று நிரூபிக்க ஒருவர் முயற்சிக்கிறார். முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் இது பற்றி சிந்தியுங்கள். உடனடியாக செயலில் இறங்கி இதனைப் பாதுகாருங்கள். இவ்வாறு வக்பு சொத்துக்களை அபகரிப்பதற்காகவே சிலர் முயற்சித்து வருகிறார்கள்.
இங்குள்ள வறிய மக்களிடம் நீதிமன்றங்களில் வழக்காடுவதற்கு கோடிக்கணக்கான பணம் இல்லை. கபூரிய்யா நிர்வாகிகளிடம் பணம் இருக்கிறது.
சுலைமான் வைத்தியசாலை கட்டிடத்தை முதலில் நோலிமிட் ஹாஜியாருக்கு லீசிங் செய்தார்கள். நோலிமிட் ஹாஜியார் அறிந்து கொண்டார். இதில் சட்ட விரோத செயல்கள் இடம் பெறுகின்றன என்று பின்பு இந்த திருட்டு வேலைகளில் நான் தொடர்புபட விரும்பவில்லை என்று கூறி லீசிங் எடுக்க அவர் தயாராக இருக்கவில்லை. 10.7 மில்லியன் ரூபா முற்பணமாக வழங்கியிருந்தார். அந்தப் பணமும் வேண்டாமென அவர் கூறிவிட்டார். ஒப்பந்தத்தையும் ரத்துச் செய்து கொண்டார்.
பின்பு ஒரே நாளில் கபூரிய்யா ட்ரஸ்ட் ஆசியா ஜெம்ஸ், ஓடேல் பின்பு சொப்ட்லொஜிக் என இச்சொத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் நான்கு லீசிங் ஒப்பந்தங்கள். இது சட்டவிரோத செயல் இல்லையா? அவர்களது செயற்பாடுகள் சரியானது என நிரூபிக்க 9 நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். நீதிமன்றங்கள் மீது எமக்கு நம்பிக்கை இருக்கிறது. நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இந்த கபூரிய்யா ட்ரஸ்ட் தனியார் ட்ரஸ்ட் அல்ல. பொது ட்ரஸ்ட் ஆகும்.
வக்பு சொத்தைத்தான் கபூரின் குடும்பத்தில் ஒருவர் சூறையாடுவதற்குத் தயாராக இருக்கிறார்.
ட்ரஸ்ட்கள் மீது சிலருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. பொது ட்ரஸ்ட்களை தனியார் சொத்துக்களாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இதே நிலைமைதான் மாகொல அநாதை இல்ல சொத்துகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
கபூரிய்யா வக்பு சொத்து தொடர்பில் 9 வழக்குகள் தற்போது விசாரணையின் கீழ் உள்ளன. உச்ச நீதமன்றம் வரை வழக்கு உள்ளது. வறிய மக்களிடம் நீதிமன்றங்களில் வாதாட பணம் இல்லை. எனவே இந்நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும்நம்பிக்கைப் பொறுப்பாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
சுலைமான் வைத்தியசாலை கபூரிய்யா மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவே வக்பு செய்யப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கபூரிய்யா நம்பிக்கை பொறுப்பாளர் சபையில் இரு பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள். கபூரிய்யா மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். பழைய அதிபர் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் பொலிஸார் நிர்வாகத்துக்கு சாதகமாக செயற்படுகிறார்கள்.மஹரகம பொலிஸார் உடனடியாக இது தொடர்பில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பொலிஸ் திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்றார்.
பழைய மாணவர் சங்க செயலாளர் டில்சாட் மொஹமட்
கபூரிய்யா பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் டில்சாட் மொஹமட் உரையாற்றுகையில்,
கபூரிய்யா அரபுக்கல்லூரி மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. மாணவர்களின் பெற்றோரினால் இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம்பிக்கை பொறுப்பாளர் அஸ்மத் கபூரின் வருகைக்குப் பின்னால் மாணவர்களின் விளையாட்டு மைதானம் பறிக்கப்பட்டுள்ளது. நீர்வசதி கட்டமைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நூல் நிலையம் மூடப்பட்டுள்ளது. தகவல் தொழினுட்ப அறை மூடப்பட்டுள்ளது. தொழிற்கல்வி நிலையமும் மூடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு க.பொ.த சா/த உயர்தர கல்வி வழங்கப்படுவது சட்டத்துக்கு முரணானது என நம்பிக்கைப் பொறுப்பாளரில் ஒருவர் தெரிவிக்கிறார்.
இவர் இக்கல்லூரிக்கு வக்பு செய்யப்பட்ட சுலைமான் வைத்தியசாலையை சொப்ட்லொஜிக் நிறுவனத்துக்கு 116 கோடி ரூபாய்களுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார்.
ஆனால் இந்நிதியில் ஒரு சதமேனும் கல்லூரி கல்வி நடவடிக்கைகளுக்குவழங்கப்படவில்லை என்பது கவலையானவிடயமாகும். சுலைமான் வைத்தியசாலை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கு கபூரியா மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று கபூரிய்யா காணியை விற்பதற்காக அக்காணி மதிலிட்டு இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதனால் 17 ½ ஏக்கரில் நடைபெற்று வந்த கல்லூரி செயற்பாடுகள் தற்போது 2 ½ ஏக்கருக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்களே இது உங்கள் சொத்து. இச்சொத்தினைப் பாதுகாக்க நீங்கள் முன்வர வேண்டும். பழைய மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கல்லூரி நம்பிக்கை பொறுப்பாளர்களில் சிலர் நாங்கள் வஹாபிகள், அடிப்படை வாதிகள், தீவிரவாதிகள், நாங்கள் ஸஹ்ரானுடைய ஆட்கள் என்று எங்கள் மீது மோசமான குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
91 வருடகால வரலாற்றினைக் கொண்ட கபூரிய்யாவின் எந்தவொரு மாணவனும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும், தீவிர வாதத்துக்கும் உள்ளாகவில்லை என்பதை நாங்கள் பெருமையுடன் கூறிக்கொள்கிறோம் என்றார்.– Vidivelli