சாராவை தேடிக்கண்டுபிடிக்கச் சென்ற அதிகாரி சமன்வீரசிங்கவின் மரணம் மர்மமாகவே உள்ளது
பிரதான சாட்சியான சஹ்ரானின் மனைவிக்கும் இதே நிலைமை ஏற்படலாம் என்று முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சாராபுலஸ்தினியை தேடிக்கண்டுபிடிக்கச் சென்ற சமன்வீரசிங்க என்ற அதிகாரியின் மரணம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இவர் ஓர் முக்கியசாட்சி. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சாட்சியாக இருக்கும் ஸஹ்ரானின் மனைவிக்குக் கூட இந்நிலைமை ஏற்படலாம். அதனால் ஜனாதிபதி ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரை விரைவில் அழைத்து வந்து தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இனங்கண்டு சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்டிக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற நீதிமற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது; இப்போது உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்-குதல் தொடர்பில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. வழக்கு விசாரணையில் சாட்சிகளாக சிலர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். முதலாவது சாட்சியாக பேராசிரியர் ரொஹான் குணரத்ன என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். இரண்டாவது நிலந்த ஜயவர்தன இருக்கிறார்.
நிலந்த ஜயவர்தன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றவாளி எனக் குறிப்பிட்டுள்ளது. அவர் கணினியில் தரவுகளை அழித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தும் அவர் அதனை வெளிப்படுத்தவில்லை. குற்றவாளியாக்கப்பட்டவரை சட்டமா அதிபர் திணைக்களம் சாட்சியாளராக மாற்றியுள்ளது. ஏன் சாட்சியாளராக அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் இதுதான் எமக்குள்ள பிரச்சினை.
அடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சில விடயங்களை நாம் கேட்க வேண்டியேற்பட்டுள்ளது. பேராசிரியர் ரொஹான் குணரத்ன என்பவர் ஒவ்வோர் இடங்களுக்குச் சென்று பணத்துக்காக ஆலோசனை வழங்குபவர். அவர் எவ்வாறு சாட்சியாளராக பெயர் குறிப்பிடப்படலாம்.அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் என்ன தொடர்பு இருக்கிறது. அவர் விசாரணை அதிகாரியா? அவர் ஒரு நிபுணர் மாத்திரமே. அவர்போன்ற நிபுணர்கள் நாட்டில் ஏராளமானோர் இருக்கின்றனர். கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதியேற்றதும் அவரை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமித்து அவரை சாட்சியாளராக மாற்றியிருக்கிறார். அவர் சாட்சியாளராக நியமிக்கப்பட்டது வேறு ஒன்றுக்குமில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அந்த விடயங்களை மறைப்பதற்காகவே பேராசிரியர் ரொஹான் குணரத்ன சாட்சியாளராக மாற்றப்பட்டு இத்தாக்குதல் சம்பவத்தை திசை திருப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.
அதாவது இது அடிப்படைவாத செயற்பாடு என்று உறுதி செய்ய முயற்சிக்கிறார்கள். இது அடிப்படைவாத செயற்பாடு என்பதை அனைவரும் அறிவார்கள். இத்தாக்குதல் ஸஹ்ரான் நடத்தினார் என்பதும் அனைவரும் அறிவார்கள். என்றாலும் ஸஹ்ரான் இத்தாக்குதலை நடத்த அரசியல் பின்னணி வழங்கிய, இத்தாக்குதலை பின்னாலிருந்து நடத்திய, உதவி ஒத்தாசைகள் வழங்கிய மற்றும் குண்டு தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் வழங்கியவர்கள் அனைவரையும் இனங்காண வேண்டும். தொழில் நுட்ப வசதிகளை செய்து கொடுத்த அனைவரையும் கண்டு பிடிக்க வேண்டும். இதற்காகத்தான் இந்தத் தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறோம். தாக்குதலின் சூத்திரதாரியை இனங்காணாது ஸஹ்ரானின் இந்த திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள்.
பேராசிரியர் ரொஹான் குணரத்னவை இந்தச் சம்பவத்தில் இணைத்துக் கொண்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திசைதிருப்புவதற்காகும். இவரைவிட சாட்சியாளர்கள் இல்லையா? ஏராளமானோர் இருக்கிறார்கள். சானி அபேசேகர இருக்கிறார். ஏன் அவரை சாட்சியாளராக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அதிகமான தகவல்களைத் திரட்டியவர்கள். சானி அபேசேகரவும் ரவிசெனவிரத்னவின் குழுவினருமாகும். என்றாலும் சட்டமா அதிபர் திணைக்களம் சாட்சியாளர்களாக இந்தக் குழுவினரை முன்வைக்கவில்லை. இந்தச் செய்ற்பாட்டின் இரகசியம் என்ன? சானி அபேசேகரவின் சத்தியக்கடதாசியைப்பார்த்தீர்கள் அல்லவா? அதில் இத்தாக்குதல் தொடர்பில் முழுவிபரங்களையும் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த தகவல்களை மையப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டால் இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இனங்கண்டு கொள்ளலாம். சட்டமா அதிபர் திணைக்களம் இவ்விபரங்களை அறிந்து கொண்டே இத்தாக்குதலை வேறுபக்கத்துக்கு திசைதிருப்புவதற்கு விசாரணை நடாத்திய அதிகாரிகளை சாட்சியாளராக முன்னிலைப்படுத்தவில்லை. இதுவோர் பாரிய குற்றமாகும்.
தொடரப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுக்கள் 23000 உள்ளன. இதில் விசாரணைகள் நிறைவுபெறாத குற்றச்சாட்டுகளும் உள்ளடங்கியுள்ளன. சாரா தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறவில்லை. விசாரணையை நிறைவு செய்ய முயற்சித்தார்கள். சாரா இறந்து விட்டார் என்று கூறினார்கள். இது தொடர்பாக டீ.என்.ஏ பரிசோதனை மூன்றினை மேற்கொண்டார்கள். சாரா இறந்துவிட்டதாகக்கூறி விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். என்றாலும் சாரா தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுறுத்தப்படவில்லை. விசாரணைகள் நடைபெறுவதில்லை.
ஹரீன் பெர்ணான்டோ சொனிக் சொனிக் என்று கூறி உயிர் அச்சுறுத்தல்களை சந்தித்தார். இப்போது ஹரீன் பெர்ணான்டோ சொனிக்குகளின் பக்கமே ஒன்றாக இருக்கிறார். எமது பக்கம் இருக்கும்போது அவர் சொனிக் சொனிக் என்று கோஷமிட்டார். சொனிக் சொனிக்கின் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வந்தார்களா? சபாநாயகர்கள் அவர்களே அதையும் முடிவுக்குக் கொண்டு வரவில்லை.
மேலும் விசேடமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு தெரணிகம வெளியேறும் (EXIT) பகுதியில் லொறியொன்று நிறுத்தப்படுகிறது. லொறியை சோதனைக்கு உட்படுத்தவே நிறுத்தப்பட்டது. என்றாலும் அந்த லொறி பின்பு விடுவிக்கப்பட்டது. பொலிஸ் உயர் அதிகாரியொருவர் செக் பொயின்ட்டில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விடுத்த உத்தரவினையடுத்தே அந்த லொறி விடுவிக்கப்பட்டது.
லொறியை விடுவிக்குமாறு உயர் அதிகாரியொருவர் உத்தரவிட்டார் என்று அந்த பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த லொறியின் முன்னால் வி.ஐ.பி வாகனம் ஒன்று இருந்தது. அந்த வாகனத்திலிருந்தே பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொடர்பு கொண்டு இந்த உத்தரவினை வழங்கியுள்ளார்கள். மேலும் ஒரு லொறி நிறுத்தப்படவில்லை. அந்த லொறி சென்றுவிட்டது. இந்த லொறிகளில் தான் ஸஹ்ரானின் பாணந்துறை பாதுகாப்பு இல்லத்துக்கு வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுதான் உண்மைக்கதை. என்றாலும் இந்த விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வந்தார்களா? இல்லை. இந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டன.
விசாரணைகளை நிறுத்திவிட்டு ஸஹ்ரானுடன் தொடர்பிலிருந்த சிலரை கைது செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இப்போது இருக்கும் பிரதான சாட்சிதான் ஸஹ்ரானின் மனைவியாகும். அவரை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைத்து வந்து ஒரு சில தினங்களே விசாரணை செய்தார்கள். அவரிடமிருந்து பெற்ற சாட்சியங்கள் முன் நோக்கி கொண்டு செல்லப்படவில்லை. ஏனென்றால் அவரிடமிருந்து உண்மையான தகவல்கள் வெளிவந்துவிடும் என எண்ணினார்கள். அதனால் அவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பதாகக்கூறி விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். ஸஹ்ரானின் மனைவியை சாட்சியாக ஏன் முன்னிலைப்படுத்தவில்லை. ஸஹ்ரானின் மனைவிக்கு தாக்குதல் தொடர்பான பல விடயங்கள் தெரியும். ஆணைக்குழு முன்னிலையில் அவர் வழங்கிய வாக்கு மூலத்தில் பல முக்கியமான விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர்அவர்களே இவ்வாறான நிலையில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இப்போது ஜனாபதிபதியாகவும் அப்போது பிரதமராகவும் இருந்தவரின் காலத்திலே இந்த தாக்குதல் இடம் பெற்றது. தாக்குதலின் பின்பு எம்மீது குற்றம் சுமத்தினார்கள். இச்சபையிலுள்ள சில உறுப்பினர்கள் எம்மை குற்றம் சுமத்தினர். சிலர் எம் அருகில் அமருவதற்கும் விரும்பவில்லை. முழு முஸ்லிம் சமூகத்துக்கும் வீதியில் இறங்கி பயணிப்பதற்கு இயலாத மோசமான நிலைமை ஏற்பட்டது.
எனது மகனின் பாடசாலையை மாற்றிக்கொள்ளும் நிலைமை எனக்கேற்பட்டது. தந்தையே என்னால் பாடசாலைக்குச் செல்ல முடியாது. மாணவ நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள் என்று மகன் என்னிடம் கூறினார். அதனாலேயே நாம் கூறுகிறோம்; இத்தாக்குதலின் பின்னணி கண்டறியப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும். இதனை மூடி மறைக்க முடியாது.
சட்டமா அதிபர் திணைக்களமும் இதனுடன் தொடர்புடைய சில பிரிவினரும் சேர்ந்து மேற்கொண்ட செயற்பாடே இது. சட்டமா அதிபர் திணைக்களம் உண்மையான சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்தாது ரொஹான் குணரத்ன போன்றவர்களை சாட்சியாளர்களாக முன்னிலைப்படுத்தியுள்ளது.
ஏனென்றால் ஸஹ்ரானின் மீது இதனைச் சுமத்திவிட்டு விசாரணைகளை முடிவுறுத்தவே சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி தான் பதவிக்கு வந்ததும் ஸ்கொட்லாந்து பொலிசாரைக்கொண்டு வருவதாகக்கூறினார். ஜனாதிபதியவர்களே உங்கள் மீதும் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் எல்லோரும் அரசாங்கத்தில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்தோம்.
நாங்கள் தோல்வியடைவதற்கும் காரணமாக இருந்தது உயிர்த்த ஞாயிறு தாக்குதலே. அன்று எதிர்கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையமாகக் கொண்டே மேற்கொண்டது.
இன்று நீங்கள் ஜனாதிபதியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு பொறுப்பு உள்ளது. நீங்கள் தாக்குதலின் உண்மையான பின்னணியைக் கண்டறிய வேண்டும். இத்தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். நாம் அரசாங்கத்தில் ஒன்றாக இருக்கும் போது சில விடயங்களை உங்களுடன் கலந்துரையாடியிருக்கிறோம். ஜனாதிபதியவர்களே இந்த விடயத்தை பின்தள்ளிவிட வேண்டாம். இதனை நாம் தேடிப்பார்க்கவேண்டும். ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரை விரைவில் கொண்டுவாருங்கள் இல்லையேல் முக்கியமான சாட்சிகள் எமக்கு கிடைக்காமல் போகலாம்.
சாராபுலஸ்தினியை சமன் வீரசிங்க என்ற அதிகாரி தேடிச்சென்றார். இறுதியில் அவர் எப்படி இறந்தார் என்பது இன்று வரை இரகசியமாகவே உள்ளது.
இறுதியில் அவரை கொழும்புக் கொண்டு வந்து அவர் கொவிட் 19 தொற்றினால் இறந்துவிட்டார் எனக்கூறி அவரது சடலத்தை எரித்து விட்டார்கள்.
அந்த அதிகாரி இத்தாக்குதல் தொடர்பில் நிறைய விபரங்களைத் தேடியிருந்தார். இன்று இருக்கும் பிரதான சாட்சிகளை இவரைப்போல் நாம் இழந்து விடலாம். ஸஹ்ரானின் மனைவி இன்று பிரதான சாட்சி. அவருக்கே நிறைய விடயங்கள் தெரியும். சிலவேளை இவரைக் கூட நாம் இழந்து விடலாம்.
ஸஹ்ரானின் மனைவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் தாக்குதல் தொடர்பில் நிறையவிடயங்களை அவர் அறிந்துள்ளார் என்பது எமக்கு புரிகிறது. ஸஹ்ரானின் மனைவியை சாட்சியாளர்களில் ஒருவராக முன்னிலைப்படுத்த சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முடியாமற்போயுள்ளது. ஆனால் ரொஹான் குணரத்னவை முதன்மை சாட்சியாளராக்கியுள்ளது.
ஜனாதிபதியவர்களே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக திட்டமிட்டு ஸஹ்ரானைப் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னின்ற பிரதான சூத்திரதாரியை இனங்காணுங்கள். ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாரை அழைத்து வாருங்கள் என்றார்.- Vidivelli