பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை கண்டிக்குமாறும் பலஸ்தீன் மீதான அதன் ஆக்கிரமிப்பு, அடக்குமுறைக் கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலை நிர்ப்பந்திக்க உலக சமூகம் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கொழும்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டுக்கான இலங்கைக் குழு மற்றும் பலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒருமைப்பட்டுத் தினத்ஐத முன்னிட்டு நவம்பர் 29 ஆம் திகதி சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, காலனித்துவத்தை அதன் அனைத்து வெளிப்பாடுகளிலும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதற்குமான தார்மீகப் பொறுப்பை இலங்கை மக்களுக்கும் பரந்த சர்வதேச சமூகத்திற்கும் நினைவூட்டுகிறோம்.
பலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்கான தீவிர ஏக்கத்தை மற்றும் அவர்களின் சுதந்திரத்திற்காக போராடுவதற்கான உரிமையை அங்கீகரிக்கிறோம்.
ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டங்களை சர்வதேச சட்டம் அங்கீகரிப்பதை மீள வலியுறுத்துகிறோம்.
ஐக்கிய நாடுகள் சபையும் அதனுடன் இணைந்த அமைப்புக்களும் 754 க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பதையும் அவற்றில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச சபையின் 97 தீர்மானங்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களின் 96 தீர்மானங்களும் அடங்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
1917 ஆம் ஆண்டின் மிகவும் கண்டிக்கத்தக்கதான பால்போர் பிரகடனத்தின் மூலம் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் பலஸ்தீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் நிலைநிறுத்தப்பட்ட இஸ்ரேல் ஒரு சட்டவிரோத நிறுவனம் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் தொடர்பான பல்வேறு ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுக்களின் கண்டுடறிதல்களை ஆமோதிப்பதோடு, குறிப்பாக கிழக்கு ஜெருசலேம் மற்றும் இஸ்ரேல் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசத்தில் ஐக்கிய நாடுகளின் சுதந்திர சர்வதேச விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அக்டோபர் 20, 2022 அறிக்கையை ஏற்றுக்கொள்கிறோம்.
அத்துடன் பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டுக்கான இலங்கைக் குழு, ஐ.நா தீர்மானங்களைத் தொடர்ந்து மீறும் இஸ்ரேல் மீது சர்வதேச சமூகம் கடுமையான தடைகளை விதிக்கத் தவறியது குறித்து அதனது கவலையை வெளிப்படுத்துகிறது.
பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
பலஸ்தீன் மீதான அதன் ஆக்கிரமிப்பு, அடக்குமுறைக் கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலை நிர்பந்திக்க உலக சமூகம் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறது.
இலங்கை அரசாங்கம் அதன் முன்முயற்சி மற்றும் முற்போக்கான அணிசேரா கொள்கைக்கு இணங்க பலஸ்தீன பிரச்சினைக்கு தனது ஆதரவை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா சைத், இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், சர்வதேச உறவுகள் தொடர்பான நிபுணர் குசும் விஜேதிலக, சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் இஸ்ஸதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரஊப் ஹக்கீம், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், இஷாக் ரஹ்மான், எஸ்.எம்.எம். முஸர்ரப் உட்பட மேலும் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.– Vidivelli