ஓமான் நாட்டில் விற்பனைக்கு வந்த இலங்கை பெண்கள்: அம்பலமானது ஆட்கடத்தல்!

0 408

வேலை வாங்கி தரு­வ­தாக கூறி, இலங்­கையில் இருந்து பெண்­களை சுற்­றுலா விசாவில் வர­வ­ழைத்து ஓமானில் விப­சார நட­வ­டிக்­கைகள் உள்­ளிட்ட சட்ட விரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் ஆள் கடத்தல் இன்று பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தொழில் பெற்றுத் தரு­வ­தாக கூறி ஐக்­கிய அரபு இராஜ்­ஜி­யத்­திற்கு அழைத்து செல்­லப்­பட்ட இலங்கை பெண்கள் சிலர் கடந்த 15 ஆம் திகதி காலை பல­வந்­த­மாக ஓமா­னிற்கு அழைத்து செல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து இது தொடர்­பான தக­வல்கள் அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.
ஓமானில் இருந்து நாடு திரும்­பிய பெண்­ணொ­ருவர் தான் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க நேரிட்­டது என்றார், ‘கடந்த வருடம் அக்­டோபர் மாதம் டுபாய் ஊடாக ஓமா­னுக்கு தொழி­லுக்­காக சென்றேன். அங்கு நான் கடு­மை­யான பிரச்­சி­னை­களை எதிர் கொண்டேன். எனக்­கான சம்­பளம் வழங்­கப்­ப­ட­வில்லை. குஷான் என்­ப­வ­ரிடம் இது தொடர்பில் முறை­யிட்டேன். என்ன வேண்டும் என்று கேட்டார்? நான் என்னை நாட்­டிற்கு அனுப்­புங்கள் என்றேன். உடனே அவர் என்­னு­டைய தோளில் கை போட்டார் என்னை இழுத்தார். நான் அவரை தள்­ளி­விட்டேன். வேண்டாம் சேர். இத்­த­கைய தொழி­லுக்கு நான் வர­வில்லை என்றேன் அதற்கு அவர் என்­னுடன் இணங்­கினால் நான் நாட்­டிற்கு அனுப்பி வைப்பேன்’ என்று அவர் மேலும் கூறினார்.

பாதிக்­கப்­பட்ட மற்­று­மொரு பெண் அங்கு நடந்த அவ­லங்கள் தொடர்பில் விப­ரிக்­கையில், ‘நாட்­டிற்கு செல்ல வேண்டும் என கூறினோம். உங்­களை நாட்­டிற்கு அழைத்துச் செல்ல 7 முதல் 12 இலட்சம் வரையில் பணம் வேண்டும். அதனை சம்­பா­தி­யுங்கள் என்றார். அவ­ருக்கு விப­சார விடு­திகள், பெண்­களை விற்­பனை செய்­பவர் மற்றும் துன்­பு­றுத்­து­ப­வர்கள் உடன் நேரடி தொடர்பு இருக்­கி­றது. அதை நான் காதால் கேட்டேன். கண்­களால் பார்த்தேன். அவர் வெளியில் சென்று விப­சார விடுதி நடத்­து­ப­வர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­மாறு எம்மை தாக்­கினார்’ என்றார்.

ஓமான் நாட்­டிற்கு சட்­ட­ ரீ­தி­யாக 19,000 பேர் தொழி­லுக்­காக சென்­றுள்­ளனர். தற்­போது நெருக்­க­டிக்கு முகங்கொடுத்துள்ள பெண்கள் ஓமா­னிற்கு சட்­ட­ரீ­தி­யாக சென்­றி­ருக்­க­வில்லை என இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் பொது முகா­மை­யாளர் ஈ.டீ.பீ. சேன­நா­யக்க கூறினார், “ மனித ஆட்­க­டத்­தல்­கா­ரர்­களின் பொய்­யான வார்த்­தை­க­ளுக்கு மயங்கி, இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் பொய்­யான தக­வல்­களை வழங்கி வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றுள்­ளனர். குறித்த பெண்கள் முதலில் ஐக்­கிய அரபு இராஜ்­ஜி­யத்­திற்கு சென்று பின்னர் அங்­கி­ருந்து ஓமான் நாட்­டிற்கு கடத்­தப்­பட்­டுள்­ளனர். முறை­யான விதத்தில், சட்­ட­ரீ­தி­யாக வெளி­நா­டு­க­ளுக்கு செல்­ப­வர்­க­ளுக்கு அங்கு ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்றுக் கொடுப்­ப­தற்­காக பாது­காப்பு மையங்கள் நிறு­வி­யுள்ளோம். இருப்­பினும் தற்­போது அந்த 77 பெண்­களும் இலங்கை பெண்கள் என்ற வகையில் மனி­தா­பி­மான ரீதியில் உதவ வேண்­டி­யுள்­ளது.
சுற்­றுலா விசாவில் வெளி­நா­டு­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்குச் செல்லும் போது அந்த சந்­தர்ப்­பத்தில் சிக்­கல்கள் ஏற்­ப­டு­மாயின் அதன் கார­ண­மாக பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யேற்­படும். இது முறை­யற்ற பய­ண­மாகும். இதற்­காக நாம் பாரி­ய­தொரு தொகையை அப­ரா­த­மாக செலுத்த வேண்டி ஏற்­படும்” என்றார்.

இதே­வேளை குறித்த மனித ஆட்­க­டத்­தல்­கா­ரர்கள் சம்­பந்­த­மான பல்­வேறு விட­யங்­களை நாம் கண்­ட­றிந்­துள்ளோம் என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் புல­னாய்வு அதி­காரி கபில கரு­ணா­ரத்ன குறிப்­பி­டு­கிறார்.

‘இந்த வரு­டத்தில் மாத்­திரம் மனித ஆட்­க­டத்­தல்­கா­ரர்கள் 69 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 25 சுற்­றி­வ­ளைப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக இவ்­வா­றான மனித ஆட்­க­டத்­தல்­கா­ரர்கள் மற்றும் அவர்­களின் உதவி முக­வர்களை கைது செய்­வ­தற்கு நாம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ளோம்.

மனித விற்­பனை, ஆட்­க­டத்தல் ஒழிப்பு, சமுத்­திர குற்­றத்­த­டுப்பு பிரிவு மூலம் கடந்த சில வாரங்­க­ளாக ஓமானில் வாக்­கு­மூ­லங்­களை பதிவு செய்து வரு­கிறோம். மேலும் இந்த சம்­பவம் தொடர்பில் இது­வ­ரையில் இரண்டு ஆண்கள், பெண் ஒருவர் உள்­ளிட்ட மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். குறித்த பெண் மொழி­பெ­யர்ப்­பா­ள­ராக செயற்­பட்டு வந்­துள்ளார். அங்கு அவர் தரகர் ஒரு­வ­ராகவும் செயல்­பட்டு வந்­தமை தெரிய வந்­துள்­ளது’ என்றார்.
இந்­நி­லையில், வேலை பெற்­றுத் தரு­வ­தாக கூறி, இலங்­கையில் இருந்து பெண்­களை சுற்­றுலா விசாவில் வர­வ­ழைத்து ஓமானில் விப­சார நட­வ­டிக்­கைகள் உள்­ளிட்ட சட்டவிரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் ஆள் கடத்தல் சம்­பவ வலை­ய­மைப்­புடன் தொடர்­பு­டைய, இலங்­கையில் இருக்கும் பிர­தான சந்­தேக நபர்­களில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

தம்­புள்ளை பகு­தியைச் சேர்ந்த ஆஷா திஸா­நா­யக்க எனும் பெண்ணே, கடந்த திங்­க­ளன்று சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் செயற்­படும் மனிதக் கடத்தல், கடத்­தல்கள் குறித்த விசா­ரணை மற்றும் கடல்சார் குற்­ற­வியல் புல­னாய்வு பிரிவில் சர­ண­டைந்­ததைத் தொடர்ந்து இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கடந்த சில வாரங்­க­ளாக குறித்த பெண் சந்­தே­க­நபர் தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த நிலையில், இந்த கைது நட­வ­டிக்கை இடம்­பெற்­றுள்­ளது. ஆரம்ப விசா­ர­ணையின் போது குறித்த பெண் வழங்­கிய 4 முக­வ­ரி­க­ளிலும் அவர் வசிக்­காமல், தலை­ம­றை­வாக இருந்த நிலையில், அவரைக் கைது செய்ய தேடு­தல்கள் நடாத்­தப்­பட்டு வந்­தன. இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே அவர் சர­ண­டைந்த பின்னர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இதற்கு முன்னர் இவ்­வி­வ­கா­ரத்தில் இரு சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே, தற்­போது சுற்­றுலா வீசாவில் பெண்­களை ஓமா­னுக்கு அனுப்பி விப­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தி­யமை தொடர்பில் மூன்­றா­வது சந்­தேக நபரும் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

முன்­ன­தாக கடந்த 19 ஆம் திகதி, ஓமான் ஆட்­க­டத்­த­லுடன் தொடர்­பு­டை­ய­தாகக் கூறப்­படும் பிர­தான சந்­தே­க­நபர் கட்­டு­நா­யக்க விமான நிலைய குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டார். மொஹம்மட் றிஸ்மி மொஹம்மட் இன்சாப் எனும் வத்­தளை மற்றும் தெஹி­வளை பகு­தி­களை சேர்ந்த 44 வய­தான குறித்த சந்­தேக நபரை 24 ஆம் திகதி வரை (இன்று) விளக்­க­ம­றி­யலில் வைக்க நீர்­கொ­ழும்பு பதில் நீதிவான் பிரி­யமால் அம­ர­சிங்க உத்­த­ர­விட்­டி­ருந்தார். விசா­ர­ணை­களில் வெளிப்­பட்ட தக­வல்­க­லுக்கு அமைய ஏற்­க­னவே பெறப்­பட்­டி­ருந்த வெளி­நாட்டு பயணத் தடை உத்­த­ர­வுக்கு அமைய அவர் கைது செய்­யப்­பட்டு இவ்­வாறு நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டி­ருந்தார்.

டுபாயில் இருந்து நாட்­டிற்கு வருகை தந்த நிலையில், சந்­தே­க­நபர் கைது செய்­யப்­பட்டார்.

மரு­தா­னையில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிலைய அலு­வ­லகம் ஒன்றை நடத்தி வரும் குறித்த சந்­தே­க­நபர், ஆட்­க­டத்­தலில் ஈடு­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

இந் நிலையில் இந்த கடத்­த­லுடன் தொடர்­பு­டைய தர­கர்­களில் ஒரு­வ­ராக செயற்­பட்­ட­தாக கூறப்­படும் அவி­சா­வளை – புவக்­பிட்­டி­யவைச் சேர்ந்த பால­கி­ருஷ்ணன் குக­னேஷ்­வரன் என்­ப­வ­ரையும் மனிதக் கடத்தல், கடத்­தல்கள் குறித்த விசா­ரணை மற்றும் கடல்சார் குற்­ற­வியல் புல­னாய்வு பிரி­வினர் கைது செய்­தனர். அவரை கடந்த ஞாயி­றன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன்­னி­லையில் விசா­ர­ணை­யா­ளர்கள் ஆஜர் செய்த நிலையில், அவர் எதிர்­வரும் டிசம்பர் முதலாம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.
இலங்கை பெண்­களை ஓமானில் விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்தும் திட்­ட­மிட்ட நட­வ­டிக்கை தொடர்பில் கிடைக்கப் பெற்ற தக­வல்­க­ளுக்கு அமைய விஷேட விசா­ர­ணைகள் மனிதக் கடத்தல், கடத்­தல்கள் குறித்த விசா­ரணை மற்றும் கடல்சார் குற்­ற­வியல் புல­னாய்வு பிரி­வி­னரால் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் டப்­ளியூ. எம். சம­ரகோன் பண்டா தலை­மை­யி­லான குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அரச உளவுச் சேவை, சி.ஐ.டி. மற்றும் மனிதக் கடத்தல், கடத்­தல்கள் குறித்த விசா­ரணை மற்றும் கடல்சார் குற்­ற­வியல் புல­னாய்வு பிரி­வி­னரர் அடங்­கிய சிறப்புக் குழு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சம­ரகோன் பண்டா தலை­மையில் கடந்த ஒக்­டோபர் 3 ஆம் திகதி ஓமான் சென்று விசா­ர­ணை­க­ளுக்­கான வாக்கு மூலங்­களைப் பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது.
சுற்­றுலா விசாவில் ஓமா­னுக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட சில பெண்கள் பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஏலத்தில் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளமை அந்த விசா­ர­ணை­களில் வெளிப்­பட்­டுள்­ளது.

பல்­வேறு துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளான அவ்­வா­றான 45 பெண்­களின் வாக்கு மூலங்கள் இது­வரை பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

தூத­ர­கத்­தினால் வாட­கைக்கு பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட கட்­ட­ட­மொன்றின் வீட்­டி­லேயே இவர்கள் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளி­டமே சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சம­ரகோன் பண்டா தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை நடாத்­தி­யுள்­ளனர். தற்­போது குறித்த ‘ சுரக்ஷா’ எனும் அந்த பாது­காப்பு இல்­லத்தில் 90 பெண்கள் வரை தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

இந் நிலையில் சிறப்பு பொலிஸ் குழு முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களில், தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களை விட மேலும் 8 உப முக­வர்­களைக் கைது செய்­ய­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இத­னை­விட, ஓமானில் உள்ள இலங்கை தர­கர்கள் 7 பேர், இந் நாட்டில் உள்ள 15 தர­கர்கள், டுபாயில் இருக்கும் இலங்கை தர­கர்கள் 7 பேர் குறித்தும் அவ­தானம் செலுத்­தி­யுள்ள விசா­ர­ணை­யா­ளர்கள் அவர்­களை விசா­ரணை வல­யத்­துக்குள் வைத்­துக்­கொண்டு மேல­திக விசா­ர­ணை­களை தொடர்­வ­தாக தக­வல்கள் தெரி­வித்­தன.

வீட்டுப் பணிப் பெண் வேலைக்­காக அழைத்துச் செல்­வ­தாக கூறி, இலங்­கையில் பெண்­களை ஆட்­சேர்பு செய்து, சுற்­றுலா வீசாவில் முதலில் டுபாய் நோக்கி அழைத்து செல்­வதும், பின்னர் அங்­கி­ருந்து அல் புரைமி எல்லை ஊடாக ஓமா­னுக்கு கடத்­தப்­ப­டு­வதும், அங்கு ஏல விற்­ப­னையில் பாலியல் அடி­மை­க­ளாக விற்­கப்­ப­டு­வதும் குறித்த தக­வல்­களும் இதன்­போது வெளி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அவை குறித்த மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக விசா­ர­ணை­யாளர் தரப்பு தக­வல்கள் குறிப்­பிட்­டன.

தற்­போதும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களில், முதலில் கைது செய்­யப்­பட்ட 44 வய­தான நபர், மரு­தானை வெளி­நாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் நடாத்தும் நிலையில், அத­னூ­டாக இந்த நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றுள்­ளமை சாட்­சி­யங்கள் ஊடாக வெளிப்­பட்­டதால் அவரைக் கைது செய்­த­தாக பொலிஸ் தரப்பு கூறு­கின்­றது.

இத­னை­விட, அவி­சா­வ­ளையில் வைத்து கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர், அட்டன் உள்­ளிட்ட மலை­ய­கத்தை சேர்ந்த பெண்­களை வீட்டுப் பணிப் பெண்­க­ளாக வேலை வாய்ப்பு பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறி விப­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அனுப்ப தர­க­ராக செயற்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. டுபாயில் 16 பெண்கள் இவ்­வாறு ஓமா­னுக்கு கடத்­தப்­பட தயா­ராக ஒரு வீட்டில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பாடகர் துஷான் வீரமன் சி.ஐ.டி.யில் செய்த முறைப்­பாட்டில் கூறப்­பட்­டுள்ள சம்­ப­வத்­து­டனும் குறித்த தரகர் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

இதே­வேளை இந்­த சட்­ட­வி­ரோத செயல்­க­­ளுக்கு உடந்­தை­யாக இருந்­த­தாக கூறி ஓமானில் உள்ள இலங்கை தூத­ர­கத்தில் மூன்றாம் செய­ல­ராக பணி­யாற்றும் ஈ. குஷான் எனும் அதி­கா­ரியை உட­ன­டி­யாக பணி இடை நிறுத்தம் செய்ய இலங்கை வெளி­நாட்டு வேலை வாய்ப்பு பணி­யகம் நட­வ­டிக்­கை எடுத்­துள்­ளது.

இத­னி­டையே நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்றில் உரை­யாற்­றிய வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாண­யக்­கார, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் அனு­ம­தி­யில்­லாமல் ஓமா­னுக்கு சென்ற 77 பெண்­களும் டுபாய்க்கு சென்ற 77 பெண்­களும் பாது­காப்பு இல்­லங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களை நாட்­டுக்கு அழைத்து வரு­வ­தற்­கான செலவை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் பொறுப்­பேற்­க­வுள்­ளது என தெரி­வித்தார்.

இவர்­களை நாட்­டுக்கு அழைத்து வரு­வ­தற்­காக ஒரு­வ­ருக்கு சுமார் 10 இலட்சம் ரூபா வரையில் செல­வாகும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்த செலவை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் பொறுப்­பேற்­க­வுள்­ளது. இதற்­கான அனு­மதி அமைச்­ச­ர­வையின் ஊடாக பெறப்­பட்­டுள்­ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.