ஐ.தே.முவின் தனியான அரசாங்கமே உருவாக்கப்படும்

அமைச்சரவையில் சூழ்ச்சிகாரர்களுக்கு இடமில்லை என்கிறார் எரான்

0 799

இருவேறுப்பட்ட கருத்துக்கள் அல்லாத ஒரே கொள்கையுடைய ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கமே உருவாக்கப்படும். சூழ்ச்சிகாரர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் கிடையாது. அதேபோன்று அமைச்சரவையில் 30 அமைச்சுக்கள் மாத்திரமே உருவாக்கப்படும் என குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, அமைச்சர்களின் வாகன கொள்வனவு மற்றம் வெளிநாட்டுப் பிரயாணங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரமர் பதவியேற்றதன் பின்னர் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமர் பதவியை ஏற்றது ஐக்கிய தேசிய முன்னணியின் வெற்றியென்பதை விட மக்களின் வெற்றியாகவே கருதவேண்டும். அதேபோன்று அரசியலமைப்பினை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்ததற்கு நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம்.

இதேவேளை, எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் அமைச்சரவையை நியமிப்பதே முக்கியமான பொறுப்பாகக் காணப்படுகின்றது. தற்போதைய நிலைமைகளில் நிறைவேற்றுத் துறைக்காக அமைச்சர்களை நியமிக்கும்போது இது தேசிய அரசாங்கமா அல்லது தனியான அரசாங்கமா என்ற பாரிய கருத்து வேறுப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. எவ்வாறான அரசாங்கம் உருவாக்கப்பட்டாலும் மக்களின் எதிர்பார்ப்புகளே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே, அமைச்சரவை குழுவில் 30 பேர் மாத்திரமே அங்கீகரிக்கப்பட வேண்டும். அமைச்சரவைக்கென ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்கள், வெளிநாட்டுப் பயணத்துக்கான சலுகைகள் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அதேபோன்று எதிர்வரும் வருடத்தில் அமைச்சர்களுக்கென வாகனங்கள் கொள்வனவிற்கான தேவை எதுவும் இல்லை. இருப்பிலுள்ள வளங்களை பயன்படுத்தி பொறுப்பினை நிறைவேற்றுவது அவசியமாகும். இதுவே மக்களின் எதிர்பார்ப்புமாகும்.

அதேபோன்று எதிர்த்தரப்பில் உள்ளவர்களும் அரசாங்கத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. உறுதியான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு இணைபவர்கள் அனைவருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுக்கின்றது. இருப்பினும் வரப்பிரசாதங்களின் அடிப்படையில் கட்சிதாவ எத்தனிப்பவர்களை ஒருபோதும் இணைத்துக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை. அதேபோன்று கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சிகளுக்குத் துணைபுரிந்தவர்களுக்கும் புதிய அமைச்சரவையில் இடமளிக்கப் போவதில்லை.

இந்த அரசாங்கத்துக்கு இன்னமும் குறுகிய ஒருவருடமே எஞ்சியுள்ளது. ஆகவே கொள்கைகளை துரிதமாக செயற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களும் இடம்பெற்றே வருகின்றன. மக்களின் எதிர்பார்ப்புக்கள் கடந்த மூன்றரை வருடங்களில் முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை. அவ்வாறு மக்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கப்படாமலுள்ள பல்வேறுப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். அமைச்சரவையில் இருந்த சிலரினால் பல்வேறுபட்ட பணிகளை முன்னெடுக்க முடியாமல் பேயிருந்தன. ஆகவே ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் மாத்திரம் அமைச்சரவையில் இருப்பார்களானால் செயற்பாடுகள் குறித்து விவாதங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியமிருக்காது.

ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ளவர்கள் மாத்திரம் அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்களானால் வீண் பேச்சுவார்த்தைகளினூடாக நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து அமைச்சரவை பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியும். இதனூடாக தேசிய மற்றும் சர்வதேச பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் அமையும். இருவேறுபட்ட கொள்கைகளற்ற, ஒரே கொள்கையுடைய பயணமாக இது அமையவேண்டும். ஆகவே ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமையிலான அரசாங்கமொன்றினை அமைத்து ஒரே கொள்கையுடன் பயணிப்போம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.