இஸட். ஏ. ஸன்ஹிர்
உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை)
இலங்கை சிவில் சேவையில் (CCS) இணைந்த முதல் முஸ்லிம் என்ற பெருமைக்குரிய அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் 04.10.1911 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அன்னாரின் தந்தை அபூபக்கர் அவர்கள் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் காதி நீதிபதியுமாவார். தாயார் சுல்தான் முஹிதீன் நாச்சியா. யாழ் வைதீஸ்வரா வித்தியாலயம், யாழ்ப்பாணக் கல்லூரி, கொழும்பு சென் ஜோசப் கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம், என்பனவற்றில் பயின்ற எ. எம். எ. அஸீஸ், லத்தீன் மொழியைக் கற்றதுடன் தமிழ், ஆங்கிலம் என்பனவற்றில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
கொழும்பு ஸாஹிறாவின் அதிபராக (1948 – 1961) இருந்த அஸீஸ் அவர்கள், செனற் சபை உறுப்பினராகவும் (1952) பொதுச் சேவை ஆணையாளராகவும் (1963) சேவையாற்றியுள்ளார். 19.05.1945 இல் அகில இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியத்தைத் (The Ceylon Muslim Scholarship Fund) தாபித்த அவர், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் (Y.M.M.A) தந்தையுமாவார்.
அரச சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற நூலான இலங்கையில் இஸ்லாம், மிஸ்ரின் வசியம், தமிழ் யாத்திரை, கிழக்காபிரிக்கக் காட்சிகள், ஆபிரிக்க அனுபவங்கள், அறபுத்தமிழ் எங்கள் அன்புத் தமிழ் உட்படப் பல நூல்களின் ஆசிரியரான அஸீஸ், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். யாழ் பல்கலைக்கழகம் அன்னாருக்கு 1980 இல் கெளரவ இலக்கியக் கலாநிதிப் பட்டத்தை வழங்கியது.
இஸ்லாமியப் புரட்சிகர சிந்தனையாளர்களால் பெரிதும் கவரப்பட்ட அஸீஸ், மேலைத்தேய நாடுகளுடனும் தொடர்புகளைக்கொண்டிருந்தார். கீழைத்தேயத் தத்துவங்கள், மரபுகள் போன்றவற்றுடன் ஒப்பிட்டு ஆராயும் சந்தர்ப்பத்தை அது அவருக்கு வழங்கியது. உலமாப் பெருமக்களுக்கும் மேற்கத்தேய கல்விமுறையில் பயின்றோருக்கும் இடையில் நிலவிய இடைவெளியைக் குறைப்பதற்கும் பழைமை, புதுமை என்பனவற்றை இணைப்பதற்கும் தாம் ஒரு பாலமாக இருக்கவேண்டும் என அறிஞர் அஸீஸ் விரும்பினார்.
ஜாமிஆ நளீமிய்யாவின் தோற்றத்துக்கும் அதன் ஆரம்பகால செயற்பாடுகளுக்கும் பங்களிப்பு செய்தவர்களுள் பிரதானமானவர் எ. எம். எ. அஸீஸ். 1941 இல் ‘முஸ்லிம் மித்திரனில்’ அவர் எழுதிய, ‘மத அறிவைப் புகட்டக்கூடிய ஒரு மத்திய முஸ்லிம் கலாசாலை’ என்ற கட்டுரை 1963 இல் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் இஸ்லாம்’ என்ற நூலில் ‘எமக்கு ஒரு ஜாமியாஹ்’ என்ற தலைப்பில் மீண்டும் இடம்பெற்றது. ‘ இலங்கையில் ஒறாபிபாஷா’, ஜாமிஉல் அஸ்ஹர்’ ‘எமக்கொரு ஜாமியாஹ்’ ஆகிய கட்டுரைகள் அவரது நூலில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. உலகின் முதன்மையான பல்கலைக்கழகம் என்று பெயர்பெற்றது எகிப்திய அல் அஸ்ஹர் ஆகும்.
அக்கட்டுரையில், ஒரு ‘ஜாமிஆ’ எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி அவர் விளக்குகிறார். நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரக்கூடியவர்களை உருவாக்கும் ஒரு கலாநிலையம் அமைக்கப்படல் வேண்டும். மொழி, கணிதம், விஞ்ஞானம் உள்ளடங்கிய பாடங்களில் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் இக் கலாநிலையத்தில் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு மார்க்கக் கல்வியுடன், உலகக் கல்வியும் போதிக்கப்படல் வேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதியுடையோராயிருப்பதுடன் அவர்களில் சிலர் வெளிநாட்டவராகவும் இருக்க வேண்டும்.
இத்தகைய ஒரு கலாசாலை தொடங்கப்படும்வரை விருப்பமுள்ள மாணவர்கள், இவ்வாறான கல்வியைப் போதிக்கும் மிஸ்று (எகிப்து) போன்ற இடங்களுக்குச் சென்று கற்பதற்கான பண உதவிகளையாவது நாம் செய்யவேண்டும் என்ற கருத்துக்களைத் தனது கட்டுரையில் தெரிவிக்கும் அவர், “மத அறிவைப் புகட்டக்கூடிய ஒரு மத்திய முஸ்லிம் கலாசாலை, ஒரு யோசனையாக மாத்திரம் முடிந்துவிடாமல் ஒரு நல்ல காலம் அதை எதிர்பார்த்து நிற்கின்றது என நாம் நம்பிப் பிரார்த்திப்போமாக!” என அக் கட்டுரையை நிறைவு செய்கின்றார்.
இலங்கையில், செல்வந்தராக மட்டுமன்றி கொடைவள்ளலாகவும் அன்று அனைவராலும் அறியப்பெற்றிருந்தவர் பேருவளை, சீனன்கோட்டையைச் சேர்ந்த நளீம் ஹாஜியாராவார். மார்க்கக் கல்வியுடன், உலகக் கல்வியையும் போதிக்கும் கலாநிலையம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என்ற எண்ணம் அன்னார் மனதிலும் உதித்தது. தனது சொத்து, செல்வம் முழுவதனையும் அதற்காக அர்ப்பணிக்க ஹாஜியார் தயாராக இருந்தார். படித்த, பட்டம் பெற்ற அறிஞர்களினதும் சிந்தனையாளர்களினதும் தொடர்பும் நளீம் ஹாஜியாருக்குக் கிடைத்தது.
எ. எம். எ. அஸீஸ் மருதானை ஸாஹிறாவின் அதிபராக இருந்து, வெளியாகிய பின்னர் நளீம் ஹாஜியாருடனான தொடர்பு வலுப்பெற்றது. இப்பின்னணியே ஜாமிஆ நளீமிய்யாவின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்தவர் வள்ளல் நளீம் ஹாஜியாராவார்.
ஜாமிஆ நளீமிய்யா 1973 இல் தொடங்கப்பட்டபோது வெளியிடப்பட்ட ஜாமிஆ பற்றிய கையேட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “…………….. இஸ்லாத்தையும் அதன் தத்துவம், கோட்பாடு, கொள்கைகளையும் ஆழ்ந்து கற்று, அதே நேரத்தில் நல்ல சிந்தனைகள், தத்துவங்கள் என்பனவற்றிலும் சிறந்த அறிவு படைத்த உலமாக்களை உருவாக்க வேண்டிய ஓர் அவசரத் தேவை இன்று தோன்றியுள்ளது. இத்தகைய உலமாப் பெருமக்களின் வழிகாட்டுதலும் தலைமையுமே மிக அவசியமாகத் தேவைப்படுகின்றன…………’’ இத்தகைய உலமாக்களை உருவாக்குவதன் மூலம் சமுதாயத்தின் இன்றைய ஒரு முக்கிய தேவையைப் பூர்த்திசெய்யும் அடிப்படை நோக்கத்துடனேயே ஜாமிஆ நளீமிய்யா (நளீமிய்யா இஸ்லாமிய கலாநிலையம்) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஜாமிஆ நளீமிய்யாவின் பாடத்திட்டம் பற்றியும் அக்கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமியக் கல்வியோடு பொதுக் கல்வியையும் பயிலக்கூடிய விதத்தில் பாடத்திட்டம் அமையுமென்றும் குர்ஆன், ஹதீது, இஸ்லாமிய சட்டக்கலை, இஸ்லாமியப் பண்பாடு, தத்துவஞானம், நாகரீகம், மதங்கள், நவீன சிந்தனைகள் தத்துவங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு என்பன பாடத்திட்டத்தில் இடம்பெறுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாடத்திட்டத்தை அமைப்பதிலும் காலத்துக்குக் காலம் அதனைப் புதுப்பிப்பதிலும் இஸ்லாமிய உலகின் புகழ்பெற்ற ஜாமிஆக்களின் படிப்பினைகளும் அனுபவங்களும் கருத்திற்கொள்ளப்படுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எ.எம்.எ. அஸீஸ் மஸ்ஜிதுகளால் கவரப்பட்டிருந்தார். பள்ளிவாசல்களின் கட்டிடக் கலையம்சங்கள் மட்டுமல்லாது, அதன் சமூகப் பங்களிப்புக்கள் பற்றியும் உலக நாடுகளில் தாம் சென்ற இடங்களிலெல்லாம் அவர் ஆய்ந்து அறிந்தார். ‘மிஸ்றின் வசியம்’ என்ற நூலில் ‘மிஸ்றின் மசூதிகள்’ என்ற ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
ஜாமிஆ நளீமிய்யாவின் கையேடு பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “வளாகத்தின் மத்தியில் கண்ணைக் கவரும் வகையில், இஸ்லாமியக் கட்டிடக் கலைச் சிறப்பை உணரத்தக்க கூடிய வகையில் ஒரு மஸ்ஜித் கட்டப்படுகின்றது. அமைப்பிலும் வனப்பிலும் ஜாமிஆவின் சிறப்பம்சமாக இப்பள்ளிவாசல் அமையும். இந்த ஜாமிஆவில் பயிலும் மாணவர்களுக்குப் பரந்த இஸ்லாமிய அறிவைப் புகட்டுவதோடு இஸ்லாமிய வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் என்பனவற்றில் பயிற்சியளிக்கும் நோக்கத்துடனேயே இம்மஸ்ஜித் எழுப்பப்படுகின்றது. ……. இஸ்லாமிய அறிவின் சின்னமாக ஜாமிஆவும் இஸ்லாமிய வாழ்க்கை முறைப் பயிற்சியின் சின்னமாக மஸ்ஜிதும் அமையும்”.
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கான, முதல் தொகுதி மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக, 16.07.1973 இல் மருதானை ஸாஹிறாக் கல்லூரியில் நுழைவுத்தேர்வொன்று மொழி, கணிதம், இஸ்லாம், பொது அறிவு ஆகிய பாடங்களில் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் அதற்குத் தோற்றினர். அதில் சித்திபெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோருக்கான நேர்முகப் பரீட்சை, வெள்ளவத்தை நளீம் ஹாஜியாரின் இல்லத்தில் 1973 ஜூலை மாதம் 9, 10, 11,16,17,18 ஆகிய ஆறு நாட்கள் இடம்பெற்றன.
நேர்முகப் பரீட்சையை நடத்தியோரில் அறிஞர் எ. எம். எ. அஸீஸ், ஜாமிஆவின் முதல் அதிபர் மெளலவி யூ.எம். தாஸீன், அறிஞர் அஸீஸின் ஸாஹிராக் கல்லூரி மாணவன் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி, மெளலவி தாஸீன் அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஜாமிஆவைப் பொறுப்பேற்று வக்கீலுல் ஜாமிஆவாகப் பணியாற்றிய ஷாகுல் ஹமீத் பஹ்ஜி, நீதிபதி ஏ. எம். அமீன், மசூத் ஆலிம் சாஹிப், இலங்கை முஸ்லிம் மிஷனரி சங்க செயலாளர் அல்ஹாஜ் ஏ.சீ.ஏ.வதூத், மெளலவி ஏ.எல்.எம். இப்ராஹிம், சீனன்கோட்டையைச் சேர்ந்த ஹிபதுல்லாஹ் ஹாஜியார் போன்றோர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியோராவர். நளீம் ஹாஜியார் அவர்களும் அங்கு சமுகமளித்திருந்தார். நேர்முகத் தேர்வுக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் அஸீஸ் அவர்களே. நேர்முகப்பரீட்சையின் எல்லா நாட்களும் அஸீஸ் பிரசன்னமாயிருந்தார். அங்கு அவர் ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் வினாக்களைத் தொடுத்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிட்ட அல்லது தொலைத்துவிட்ட ஒரு பொக்கிஷம் ‘அறபுத்தமிழ்’. அறிஞர் அஸீஸ், அறபுத்தமிழைப் பாதுகாப்பதில் அதிக கரிசனை செலுத்தினார். ஒலிக்குறி ஒருமைப்பாடு, அறபுத்தமிழ் அகராதி, அறபுத்தமிழ் இலக்கியக்கோவை என்பன எமது அத்தியாவசியத் தேவை என வலியுறுத்தியவர் அவர். நளீமிய்யா தொடங்கப்பட்ட சில நாட்களின் பின்னர், ஜாமிஆவின் தாபக அதிபரும் ஜாமிஆவில் சேவையாற்றிய இலங்கையைச் சேர்ந்த ஒரேயொரு அதிபருமான, மெளலவி யூ. எம். தாஸீன் (நத்வி, அல் அஸ்ஹரி) அவர்களுடன் அறிஞர் அஸீஸ் அவர்கள், வகுப்பறைக்கு வந்து ‘அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்’ என்ற அவரின் நூலை, ஜாமிஆவின் முதற் தொகுதி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஸலாம்கொடுத்துத், தனது கரங்களினால் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
ஜாமிஆ நளீமிய்யாவின் நூலகத்திற்கு அஸீஸ் சிறப்பிடம் அளித்ததாக, அஸீஸ் காலத்து ஸாஹிறாவின் ஆசிரியரும், எழுத்தாளரும், நூலகருமான எஸ்.எம். கமால்தீன் குறிப்பிடுகின்றார். நளீமிய்யா நூலகத்தைத் திட்டமிடும் வாய்ப்பு அஸீஸ் அவர்களினால் கமால்தீனுக்கு வழங்கப்பட்டிருந்தது. எ.எம். எ. அஸீஸ் அவர்கள் தனது மரணத்தின் பின்னர், விலைமதிக்க முடியாத, பெரும்பாலும் அவரது அனைத்து நூல்களையும் ஜாமிஆவுக்கு வழங்கிய வள்ளலாவார். அவரது நூல்கள் ஜாமிஆவுக்கு லொறியில் வந்து சேர்ந்தன. அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஏ. நூர் அமீன் அவர்கள் அப்போது ஜாமிஆவின் நூலகராக இருந்தார்.
அறிஞர் அஸீஸ் அவர்கள், ‘எமக்கு ஒரு ஜாமியாஹ்’ என்ற தனது கட்டுரையில் சொல்வதுபோல, ‘விரிவுரையாளர்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சேர்த்துக்கொள்ளப்படுவர்’ என ஜாமிஆ பற்றிய அறிமுகக் கையேட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வசித்துவந்த எகிப்தியரான அப்துல் கலீல் அயாத் என்பவர் 1975 காலப்பகுதியில் ஜாமிஆவுக்கு வருகைதரு விரிவுரையாளராக சேவையாற்றினார். மேலும் 1977 காலப்பகுதியில் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலிருந்து ஷேய்ஹ் அப்துல் பத்தாஹ், ஷேய்ஹ் இப்ராஹிம் அல் மலீஹ் ஆகிய இரு விரிவுரையாளர்கள் ஜாமிஆவில் கற்பிப்பதற்காக வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
எகிப்தினால் வசீகரிக்கப்பட்டவர் அஸீஸ். முஸ்லிம்கள் அந்நாட்டுடன் தொடர்புகொண்டவர்களாக இருக்கவேண்டுமென்பது அவரது அவா. ஜாமிஆ நளீமிய்யாவின் அங்குரார்ப்பணமன்று, இலங்கைக்கான எகிப்து நாட்டுத் தூதுவர் கலீபா அப்துல் அஸீஸ் முஸ்தபா அவர்கள் அங்கு சமுகமளித்திருந்தார். அவர் இலங்கையிலிருந்து நாடு திரும்பும்போது, பிரியாவிடை நிகழ்வொன்றும் நளீம் ஹாஜியாரின் தலைமையில் ஜாமிஆவில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய எ.எம்.எ. அஸீஸ் அவர்கள், இந்த நிகழ்வு 1901 இல் இலங்கை முஸ்லிம்கள் ஒறாபி பாஷாவுக்கு அளித்த பிரியாவிடையைத் தமக்கு நினைவூட்டுவதாகத் தெரிவித்தார். அதில் உரையாற்றிய தூதுவர் அவர்கள், இந்த ஜாமிஆவில் பயின்ற சிறந்த மாணவர்கள் சிலருக்கு, எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தமது மேற்படிப்புக்காக வசதிகள் செய்து கொடுக்கப்படுமெனக் குறிப்பிட்டார்.
1978 இல் நளீமியாவின் முதல் தொகுதி மாணவர்களான ஜே.எம். உவைஸ் (கொழும்பு), ஏ.எம். அபுவர்தீன் (மாத்தளை), வை. அபுல்பஷர் (புத்தளம்) எம்.ஐ.எம். நியாஸ் (பொல்கஹவெல) ஆகியோருடன் ஜாமிஆவின் உப அதிபர் மெளலவி ஏ.எம்.சீ.எம்.புஹாரி (மன்பஈ), விரிவுரையாளர் எஸ்.எல்.எம். ஹசன் ஆகியோரும் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்துக்கு, வக்ப் அமைச்சின் புலமைப்பரிசில் பெற்றுச் சென்றனர். ஜாமிஆவே அவர்களை அங்கு அனுப்பிவைத்தது. அபுல்பஷர், எம். ஐ. அப்துர் றஹீம் (மூதூர்) ஆகியோர் ஜாமிஆவின் கற்கையைப் பூர்த்திசெய்து பட்டத்தையும் பெற்றனர். அஸ்ஹர் சென்றோர் கலைமானிப் பட்டத்தைப் பெற்றனர். அபுவர்தீன், கலாநிதிப் பட்டம்பெற்ற நளீமிய்யாவின் முதலாவது மாணவராவார்.
ஜாமிஆ நளீமிய்யாவின் கலைத்திட்ட முன்னோடியும் வழிகாட்டியும் அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் அவர்களே. ஜாமிஆவில் அறிஞர் அஸீஸை சந்தித்த மாணவர்கள், முதல் தொகுதி மாணவர்கள் மட்டுமே. ஏனெனில் ஜாமிஆ நளீமிய்யா ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்களில், 24 நவம்பர் 1973 இல், நளீமிய்யாவைத் தரிசிக்க ஆவலாக இருந்த நிலையில் அன்னார் இறையடிசேர்ந்தார்கள்.
ஜாமிஆ மாணவர்கள் மார்க்கக் கல்வியையும் உலகக் கல்வியையும் சமசந்தர்ப்பத்தில் பெறவேண்டும். அரசாங்க அதிபர்கள் போன்ற உயர் பதவிகளை வகித்து, பள்ளிவாசல்களில் கொத்பாப் பேருரைகளையும் நிகழ்த்தவேண்டும் போன்ற சிந்தனைகளை ஜாமிஆவில் விதைத்தவர்கள் அறிஞர் அஸீஸ் அவர்களும் அதிபர் தாஸீன் அவர்களுமாவர். இச்சிந்தனைகளால் உருப்பெற்ற செயல், இன்று வளர்ச்சியடைந்து வியாபித்துள்ளது. ஜாமிஆவின் இரண்டாம் தொகுதி மாணவர்களில் ஒருவரான கனேவல்பொலயை சேர்ந்த ஹபீப் முஹம்மத், இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து, மூதூர் உதவி அரச அதிபராக சேவையாற்றியபோது, அதிகாலை சுபஹ் தொழுகையை நடத்துவதற்கு, பள்ளிவாசலுக்கு நடந்துவரும்போது சுடப்பட்டார். சமூகத்துக்காகத் தனது உயிரை தியாகம்செய்த நளீமியை இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.
பாகிஸ்தான் நாட்டின் சட்டம், நீதித் துறைகளுக்கான அமைச்சரும் அந்நாட்டு அரசியலமைப்பை வரைந்தவர்களுள் ஒருவரும் சட்டமா அதிபரும் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் தூதுவராகப் பணியாற்றியவரும் எழுத்தாளருமான ஏ.கே. புரோஹி அவர்கள் எ. எம். எ. அஸீஸின் மறைவின்போது பின்வருமாறு குறிப்பிட்டார். “முஸ்லிம்களின் அறிவுத்துறையில், வளர்ச்சிக்காகவும் அவர்தம் சமூக வாழ்வு வளம்பெறவும் அஸீஸ் அளித்த புத்தூக்கம் அளப்பரியதாயுள்ளது. உண்மையில் அஸீஸ் போன்றோர் மரணிப்பதில்லை. மக்களின் உள்ளங்களிலே ஒளியேற்றி வைப்பதற்காக ஓயாது உழைப்பவர்கள், மக்களுக்காகப் பணிபுரிவதாகப் பாசாங்கு செய்பவர்களைப்போலன்றி, அதி உன்னத வாழ்வுநிலையை எய்துகிறார்கள்”.
ஏ.கே. புரோஹி அவர்கள், 07.01.1976 அன்று ஜாமிஆவுக்கு சமுகமளித்து, நிருவாகத் தொகுதிக் கட்டிடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்தார். அவ்வமயம் ஆற்றிய உரையின்போது கூறிய கதை இது. “ஒரு மாணவன் ஓர் ஆசிரியரிடம் கற்றான். அவரே அம்மாணவனின் முதல் ஆசிரியருமாவார். கற்றல் நடவடிக்கைகளின் இறுதிநாளன்று அவ்வாசிரியர், ஒரு காகிதத்தில் ‘ஒன்று’ என்ற இலக்கமிட்டு அதனை அவனுக்கு வழங்கினார். அம்மாணவன் இரண்டாவது ஆசிரியரிடம் பயின்று முடிந்தபோது இரண்டாவது ஆசிரியர் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒரு பூச்சியத்தைப் போட்டு அக்காகிதத்தை அவனிடம் கொடுத்தார். இவ்வாறு ஒவ்வொரு ஆசிரியர்களும் தமது கற்பித்தலின் இறுதியில் ஒவ்வொரு பூச்சியம் போட்டனர். பெறுமதி அதிகரித்துச் சென்றது. ஒரு நாள் அம்மாணவன் தனது முதலாவது ஆசிரியரை சந்தித்தபோது, தொகை அதிகரித்திருப்பதை பெருமையோடு கூறினான். அவர் அந்த காகிதத்தைப் பெற்று, தான் முதலாவதாக எழுதிய ஒன்று என்ற இலக்கத்தை அழித்துவிட்டு அம்மாணவனிடம் அக்காகிதத்தை மீளக்கையளித்தார்”.
ஜாமிஆ நளீமிய்யா மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஓர் ஆளுமை எ. எம். எ. அஸீஸ் ஆவார். –Vidivelli