இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : ஆவணங்கள் எதுவுமே இல்லை எப்படி நிரூபிக்க போகிறீர்கள்?
நீதிபதி அதிர்ச்சி ; மன நல மருத்துவர்களின் அறிக்கை தொடர்பிலும் கேள்வி
(எம்.எப்.எம்.பஸீர்)
‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞருக்கு எதிராக எந்த சான்றுப் பொருட்களையும், ஆவணங்களையும் முன்வைக்க வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் உத்தேசிக்கவில்லை என நேற்று நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
குறித்த வழக்கை கையாளும் சிரேஷ்ட அரச சட்டவாதியின் அறிவுறுத்தல் பிரகாரம், புத்தளம் மேல் நீதிமன்ற அரச சட்டவாதி நிமேஷா டி அல்விஸ் இதனை நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொடவுக்கு அறிவித்தார்.
இதன்போது, ‘சான்றுப் பொருட்கள், ஆவணங்கள் எதுவுமில்லை… வழக்கை எப்படி நிரூபிக்கப் போகின்றீர்கள்?’ என அதிர்ச்சியுடன் நீதிபதி, அரச சட்டவாதியை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரச சட்டவாதி நிமேஷா டி அல்விஸ், வாய் மொழி மூல ஆதாரங்களை மட்டுமே இவ்வழக்கில் பயன்படுத்தவுள்ளதாக கூறினார். இந் நிலையில், எந்த ஆவணங்களையும் முன் வைப்பதில்லை என்பது உறுதியானதா என மீண்டும் நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், இவ்வழக்குடன் தொடர்புபட்டு, பிரதிவாதி எழுதிய ஆக்கம் ஒன்று தொடர்பில் பெற்றுக்கொண்ட சிறுவர் மன நல மருத்துவ விஷேட நிபுணர்களின் நிபுணத்துவ அறிக்கையையும் சான்றாவணமாக முன் வைக்கப் போவதில்லையா என வினவினார்.
அதற்கும் பதிலளித்த அரச சட்டவாதி நிமேஷா டி அல்விஸ், தனக்கு தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பிரகாரம் எந்த சான்றாவணங்களும் முன் வைக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
இதனையடுத்து நீதிவான் நதீ அபர்னா சுவந்துருகொட, குற்றப் பத்திரிகையை திருத்தி குறித்த ஆவணத்தை சான்றாக முன் வைக்க வழக்கு விசாரணை இடையே வழக்குத் தொடுநர் முயன்றால் அதற்கு கண்டிப்பாக அனுமதியளிக்கப்பட மாட்டாது என திறந்த மன்றில் குறிப்பிட்டார்.
அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் தொடர்பிலான வழக்கின், முன் விளக்க மாநாடு நேற்று (16) புத்தளம் மேல் நீதிமன்றில் நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் நடாத்தப்பட்டது.
இதன்போது சுமார் 579 நாட்களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்த, இவ்வழக்கின் பிரதிவாதியான அஹ்னாப் ஜஸீமும் மன்றில் ஆஜராகியிருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அஹ்னாபுக்காக, சட்டத்தரணி ருஸ்னியுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மன்றில் பிரசன்னமானார்.
வழக்குத் தொடுநர் சார்பில், புத்தளம் மேல் நீதிமன்றின் அரச சட்டவாதி நிமேஷா டி அல்விஸ் ஆஜரானார்.
விசாரணையாளர்களான பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் சார்பில் பொலிஸ் பரிசோதகர் விஜேரத்னவும் உப பொலிஸ் பரிசோதகர் நந்தசிறியும் ஆஜராகினர்.
வழக்கின் அனைத்து விடயங்களும் நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர் ஊடாக தமிழ் மொழியில் குற்றம் சாட்டப்பட்ட அஹ்னாப் ஜஸீமுக்கு, நீதிபதியின் உத்தரவின் பேரில் மொழி பெயர்க்கப்பட்டது.
இவ்வழக்கில் எந்த சான்றுப் பொருட்களையும், சான்றாவணங்களையும் முன் வைக்கப் போவதில்லை என வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பு கூறிய நிலையில், விஷேட மருத்துவர்களின் அறிக்கை உள்ளிட்ட சான்றாவணங்கள் உயர் நீதிமன்றில் அஹ்னாப் தொடரப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் உண்மை விம்பங்கள் வெளிப்பட்டுள்ளதால் சட்ட மா அதிபர் சார்பில் அவை தவிர்க்கப்பட்டிருப்பதாக அஹ்னாபுக்காக ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறிப்பிட்டார்.
அத்துடன் அஹ்னாப் எழுதிய, நவரசம் கவிதை தொகுப்பு புத்தகத்தை மன்றில் காட்டி, இப்புத்தகம் தொடர்பிலேயே தனது சேவை பெறுநர் கைது செய்யப்பட்டதாகவும், அப்புத்தகம் கூட சான்றாவணமாக முன் வைக்கப்படவில்லை என்பதை சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் பிரஸ்தாபித்து, பிரதிவாதி சார்பில் அதனை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். எனினும் அது தொடர்பில் தீர்மானிக்க இது மிக முன்னோக்கிய சந்தர்ப்பம் அல்ல என நீதிபதி குறிப்பிட்டார். உரிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதனை செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில், இந்த வழக்கு விசாரணைகளில் வழக்கில் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ள 14 சாட்சியாளர்களினதும் சாட்சியங்களை நெறிப்படுத்த எதிர்பார்ப்பதாக அரச சட்டவாதி, நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்து குறிப்பிட்டார்.
எனினும், பிரதிவாதிக்காக ஆஜரான சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், இந்த 14 பேரில் 8 பேர் மாணவர்கள் என சுட்டிக்காட்டியதுடன், குறித்த மாணவர்களுடன் சேர்ந்து கல்விகற்ற மேலும் 22 மாணவர்கள் இருப்பதாகவும் ஏன் அவர்களை சாட்சியாக அழைக்காமல் குறிப்பிட்ட 8 பேரை மட்டும் அழைக்க வேண்டும் என கேள்ள்வி எழுப்பினார்.
குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக குறிப்பிட்ட பிரதிவாதியின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், பிரதிவாதியின் சார்பிலும் சாட்சியாளர்களை அழைக்கவும் சான்றாவணங்களை முன் வைக்கவும் எதிர்பார்ப்பதாகவும் சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப அதனை தீர்மானிப்பதாகவும் குறிப்பிட்டார். உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில சான்றாவணங்களை , இவ்வழக்கு தொடர்பிலும் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
இந் நிலையில் வேறு விஷேட காரணிகள் இல்லாத நிலையில், வழக்கின் முன் விளக்க விசாரணை மாநாட்டை முடிவுக்கு கொண்டுவந்த நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளை அவசரமாக விசாரித்து முடிக்க வேண்டும் என்ற பிரதம நீதியரசரின் ஆலோசனையையும் ஞாபகப்படுத்தி வழக்கை எதிர்வரும் 2023 பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் வழக்கின் 2,6,8 ஆம் இலக்க சாட்சியாளர்களை மன்றில் ஆஜராக அறிவித்தலும் பிறப்பித்தார்.
கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை , பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்தார். முதலில் கோட்டை நீதிமன்றில் உள்ள பீ 13101/19 வழக்கு தொடர்பில் அஹ்னாப் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், கடந்த 2021 மார்ச் 3 ஆம் திகதி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றின் குறித்த வழக்கில் அஹ்னாப் சந்தேக நபரில்லை என நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
இந் நிலையிலேயே அவருக்கு எதிராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் பீ. 44230/20 எனும் இலக்கத்தின் கீழ் விசாரணை தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதனை மையப்படுத்தி சட்ட மா அதிபர் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli