(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டின் சில பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் அண்மைக் காலமாக இடம் பெற்றுவரும் குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவங்கள், முரண்பாடுகளையடுத்து அரச புலனாய்வுப் பிரிவு அவ்வாறான பள்ளிவாசல்களின் விபரங்களைச் சேகரித்து வரும் நிலையில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை இவ்வாறான மோதல் சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.
இது தொடர்பாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் நிர்வாகக் குழு பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இவ்வாறான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ‘விடிவெள்ளி’ உலமா சபையின் உயர்பதவி நிலை உலமாக்களைத் தொடர்பு கொண்டு வினவியது.
‘பள்ளிவாசல்களில் இடம்பெற்று வரும் இவ்வாறான மோதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அரச தரப்பு உலமாசபையின் ஒத்துழைப்பினைக்கோரியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
‘இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் கொள்கை முரண்பாடுகளைக் களைந்து பொது நோக்கத்துக்காக ஒன்று படவேண்டும். அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை இது தொடர்பில் வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்றே வழிகாட்டல்கள் தெரிவிக்கின்றன.
உலமா சபையின் வழிகாட்டல்களை ஏற்றுக்கொள்ளாது செயற்படும் அமைப்புகளின் உறுப்பினர்கள் மோதல் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக உலமா சபையினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது. உலமா சபையின் அங்கத்தவர்களாக இருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும். இந்நிலையில் முஸ்லிம்கள் அனைவரும், அனைத்துஅமைப்புகளும், வேறுபாடுகளை மறந்து உலமா சபையின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட்டு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறான ஒரு நிலைமை உருவானால் மாத்திரமே பள்ளிவாசல்களில் இடம் பெறும் குழுக்களுக்கிடையிலான மோதல்களைத் தவிர்க்க முடியும் என உலமா சபையின் உயர்மட்ட பதவிநிலை உலமாக்கள் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தனர்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வக்பு சபை மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடனும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகத் தெரியவருகிறது.- Vidivelli