-காதி நீதிபதிகளாக ஆண்களை மட்டும் இணைத்துக்கொள்ளும் வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் – விசாரணைகளுக்கு ஏற்காது நிராகரித்தது உயர் நீதிமன்று
( எம்.எப்.எம்.பஸீர்)
காதி நீதிபதிகளையும், காதி மேன் முறையீட்டு சபை உறுப்பினர்களையும் நியமனம் செய்யும் விதமாக முஸ்லிம் ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்களைக் கோரும் வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்திய இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரணைகளுக்கு ஏற்காமலேயே நிராகரித்தது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை திருத்தி, பெண்களும் குறித்த இரு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க முடியுமான வகையில் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, இரு முஸ்லிம் பெண் செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்த இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.
நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்களை பரிசீலனை செய்தது. பரிசீலனையின் பின்னர், மனுக்களை விசாரணைக்கு ஏற்காது நிராகரிப்பதாக குறித்த நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.
காதி நீதிபதிகளாக பெண்களுக்கு விண்ணப்பிக்க உள்ள தடையை நீக்கி உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்த இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக நீதிச் சேவை ஆணைக் குழுவின் தலைவர், அதன் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்,.
இந் நிலையில், மனுக்களை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், அவற்றை விசாரணைக்கு ஏற்காது நிராகரித்தது.- Vidivelli