முஸ்லிம் சமூகத்தின் முதன்மைக் குரலாக ஒலிக்கும் உங்கள் அபிமான விடிவெள்ளி பத்திரிகை தனது பயணத்தில் இன்றுடன் 14 வருடங்களைப் பூர்த்தி செய்து 15 ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
விடிவெள்ளி வார பத்திரிகையின் முதலாவது இதழ் 2008 நவம்பர் 06 ஆம் திகதி பிரசுரமானது. அன்று முதல் இன்று வரை வார இதழ் தனது பயணத்தை சுமார் 660 வாரங்களுக்கும் மேலாக இடையறாது தொடர்ந்து வருகின்றது. விடிவெள்ளியினால் கவரப்பட்ட அதன் வாசகர்கள் அதனை தினசரி பத்திரிகையாகவும் வெளிக் கொணருமாறு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க 2015 பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் விடிவெள்ளி தினசரி பத்திரிகையும் தனது பயணத்தை ஆரம்பித்தது. சுமார் 5 வருடங்கள் தொடர்ச்சியாக தினசரி பத்திரிகை வெளிவந்த நிலையில், உலகையே முடக்கிய கொவிட் 19 பேரனர்த்தம் காரணமாக 2020 பெப்ரவரி மாதத்துடன் விடிவெள்ளியின் தினசரி பத்திரிகையை இடைநிறுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் இந்த நெருக்கடியான கால கட்டத்தில்கூட விடிவெள்ளி மின்னிதழாக தனது பயணத்தை தொடர்ந்ததையும் அக் காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு சவால்களை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியதையும் வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
நாட்டில் கொவிட் அனர்த்தம், பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு சவால்கள் தோற்றம் பெற்ற போதிலும் விடிவெள்ளி வார இதழ் தனது பயணத்தை தொடர்ந்து இன்று 15 ஆவது ஆண்டில் கால் பதிக்கின்றமை அதன் வரலாற்றில் ஒரு மைல் கல் எனலாம்.
மூன்று தசாப்தங்களாக நீடித்த இன வன்முறைகள் மற்றும் போர் காரணமாக இலங்கை முஸ்லிம் சமூகமும் பாரிய இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டமை, பள்ளிவாசல் படுகொலைகள், இடப்பெயர்வுகளால் ஏற்பட்ட மீள்குடியேற்ற சவால்கள் என அக் காலப்பகுதியில் முஸ்லிம்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளின் பட்டியல்கள் நீளமானவை. இனப் பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்கும் நியாயமான பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இக் காலப்பகுதியிலேயே வீரியம் பெற்றிருந்தன.
இந் நிலையில் இவற்றை வெளிக் கொணர்ந்து முஸ்லிம் சமூகத்தின் அரசியல், சமூக, கல்வி, பொருளாதார வாழ்வை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டே இலங்கையின் தமிழ் பத்திரிகை வரலாற்றில் நீண்ட அனுபவம்வாய்ந்த எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால் 2008 இல் விடிவெள்ளி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.
2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்தபோதிலும் 2012 முதல் முஸ்லிம்களுக்கு எதிராக தோன்றிய இனவாத பிரசாரங்கள் மற்றும் வன்முறைகளின் போதும் சமூகத்தின் குரலாக ஒலிப்பதில் விடிவெள்ளி தனது காத்திரமான பங்களிப்பை வழங்கியது. அதேபோன்று கொவிட் 19 அனர்த்தத்தின் போது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த பலவந்த ஜனாஸா எரிப்பு கொள்கையை கைவிடுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதிலும் விடிவெள்ளி தனது பங்களிப்பை வழங்கியது.
துரதிஷ்வடசமாக , 2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மிகப் பாரிய சவால்களை எதிர்நோக்கினர். இக் காலப் பகுதியில் முஸ்லிம் சமூகத்தில் தோற்றம் பெற்ற வன்முறைத் தீவிரவாதத்தை விடிவெள்ளி வெகுவாகக் கண்டித்ததுடன் மார்க்கத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் தீவிரப் போக்குக்கு எதிராகவும் தனது பேனா முனையைக் கூர்மையாகப் பயன்படுத்தியது. அதுமாத்திரமன்றி இத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியதுடன் இதனுடன் எந்தவித சம்பந்தமுமின்றி அநியாயமாக கைது செய்யப்பட்டு வருடக் கணக்கில் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தி வருகிறது.
இவை மாத்திரமன்றி, முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளிட்ட காலத்திற்கு காலம் தோற்றம் பெறும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பிலும் விடிவெள்ளி தனது வாசர்களை அறிவூட்டி விழிப்பூட்டி வருகிறது.
இவ்வாறு பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் சமூகத்தின் முதன்மைக் குரலாக ஒலிக்கும் விடிவெள்ளிக்கு தொடர்ச்சியாக பேராதரவளித்துவரும் அதன் வாசகர்கள் என்றென்றும் நன்றிக்குரியவர்கள். அதேபோன்று எமது பத்திரிகை முகவர்கள், விநியோகஸ்தர்கள்,விளம்பரதாரர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என சகல தரப்புகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் எவ்வாறான சவால்கள் தோற்றம் பெறுகின்ற போதிலும் அவற்றையும் தாண்டி இப் பயணம் தொடர்வதற்கு வாசகர்களாகிய உங்கள் ஆதரவை என்றென்றும் எதிர்பார்க்கிறோம்.
எதிர்காலத்தில் பக்கங்களை அதிகரித்து மேலும் பல விடயங்களை உள்ளடக்கியதாக விடிவெள்ளி வார இதழை கனதியாக முன்கொண்டு செல்வதற்கான திட்டங்களை நாம் வகுத்துள்ளோம் என்ற நற்செய்தியையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரதும் தூய பணிகளை அங்கீகரிப்பானாக.- Vidivelli