மர்சூக் அகமட்லெவ்வை
இன்று உலகையே தனது ஆளுமையால் கவர்ந்திருக்கின்றது கிரிக்கெட். கிரிக்கெட்டானது டெஸ்ட் என்ற இடத்திலிருந்து சுருங்கி ஒரு நாள் போட்டியிக இப்போது அது “ டுவென்டி 20” என்று மிகவும் குறுகிய நேரத்திற்கான ஒரு போட்டியாக ஆகியிருக்கின்றது.
எமது இலங்கையும் இந்த சர்வதேச போட்டிகளில் 1980களில் இருந்து பங்குபற்றி வருகின்றது. இவ்வாறு இலங்கை போட்டிகளில் பங்கெடுக்கும் போது பாகிஸ்தானோடு போட்டியிடுகின்ற சந்தர்ப்பங்கள் பல ஏற்படுகின்றன. அவ்வாறு பாகிஸ்தானோடு விளையாடுகின்ற சந்தர்ப்பங்களில் எமது முஸ்லிம்களில் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்படுவதையும், அவ்வாறு செயற்படுவது விசனத்திற்குள்ளாவதையும் நாம் காண்கின்றோம். நாங்கள் இவ்வாறான நிலையில் பாகிஸ்தானை ஆதரிப்பதற்கான பிரதான நோக்கம் இலங்கை கிரிக்கெட் குழாமில் முஸ்லிம்கள் இடம்பெறவில்லை. முஸ்லிம்கள் மீதுள்ள துவேசம் காரணமாக இலங்கை கிரிக்கெட் கட்டுபாட்டு சபை இலங்கை அணியில் விளையாட முஸ்லிம்களை இணைத்துக் கொள்ளவில்லை என்பது தான் எம்மவர்கள் சொல்கின்ற காரணமாகும்.
இலங்கை கிரிக்கெட்டில் எம்மவா;களை இணைத்துக் கொள்வதற்கு துவேசம்தான் காரணமா? என நாம் ஆராய வேண்டும். இலங்கை உதைப்பந்தாட்ட அணியில் 8 முஸ்லிம்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமல்ல இலங்கை கால்பந்தாட்ட அணியில் அமானுல்லாஹ், ஹசீம்தீன், பக்கீர் அலி போன்றவா;கள் அணித் தலைவர்களாக இருந்துள்ளார்கள். இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தற்தோதைய தலைவராக ஜஸ்வர் உமர் இருக்கின்றார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் ஒரு தமிழ் பெண்மனி தலைவியாக செயற்பட்டு ஆசிய கிண்ணத்தை சுவீகரித்திருக்கின்றார். ஏன் இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் என்ற தமிழர் ஒரு கலக்கு கலக்கினார். முத்ததையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்த காலகட்டமானது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உச்ச கட்ட யுத்தம் நடைபெற்ற காலமாகும். தமிழர்களோடு வெறுப்பும், துவேசமும் அதி உச்சத்தில் இருந்த காலம். இவ்வாறான கால கட்டத்தில் இலங்கை அரசு தமிழர்கள் மீதிருந்த துவேசத்தையும் தாண்டி மிகவும் திறமைசாலியாக இருந்த முத்தையா முரளிதரன் என்ற தமிழரை கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொண்டது. முரளிதரன் இணைந்த கால கட்டத்தில் இலங்கை அரசு முஸ்லிம்களோடு கொஞ்சிக் குலாவிய காலகட்டமாகும். முஸ்லிம்களுக்கு அமைச்சரவையில் உயர்ந்த அந்தஸ்துக்களை வழங்கிய கால கட்டமாகும்.
இலங்கை கிரிக்கெட் அணியில் முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பம் வழங்கிய போதும் அவர்கள் பிரகாசிக்காத காரணத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்தார்கள். உதாரணமாக நவீட் நவாஸ், பர்வேஸ் மஹ்றூப் போன்றவா;களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. சுமார் பத்து போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனால் இவா;கள் ஒரு செஞ்சரியாவது அடித்தார்களா? அல்லது ஒரு அரை செஞ்சரியாவது அடிக்க வேண்டாமா? அதுவுமில்லை அணியை வெற்றிப் பாதைக்கும் இட்டுச் செல்லவில்லை. இவா;களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தவில்லை. எங்களிடத்தில் திறமை இருந்தால் எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
நாங்கள் ஒரு சிறுபான்மை இனம் என்றபடியால் எமது திறமைகள் மற்றவர்களை விட ஒரு படிமேல் காட்டினால்தான் இலங்கை அணிக்கு சந்தர்ப்பம் தருவார்கள். உங்களிடத்தில் அசாதாரண திறமை இருந்தால் யாரும் மட்டம் தட்ட முடியாது. சூரியனைக் கையால் மறைக்க முடியுமா? முடியாது. அதேபோல் நாங்கள் அசாதாரண திறமைகளைக் கொண்டு பிரகாசிக்கும் போது யாரும் கையால் மறைக்க முடியாது. அப்படி ஒரு திறமைசாலி இருந்து அவருக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாட சந்தர்ப்பம் வழங்காவிட்டால் அவரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்காக உலகம் முழுவதும் இருந்து குரல் எழும். அவருக்கு இலங்கையில் சந்தர்ப்பம் வழங்கா விட்டால் அவுஸ்திரேலியாவோ, ஐக்கிய இராச்சியமோ சிட்டிசன் கொடுத்து தங்கள் கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்வார்கள். அமெரிக்கா ஒலிம்பிக்கில் தங்கம் குவிப்பது வேறு நாட்டுப் பிரஜைகளை தங்களது நாட்டு பிரஜைகளாக்கித்தான்.
அவ்வாறான நாடுகளில் நாம் எமது திறமையை நிரூபித்தால் பின்னர் இலங்கை அணியே எங்கள் கால்களில் விழுந்து வட்டா வைத்து எம்மை இலங்கைக்கு அழைத்து தங்கள் கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்வார்கள். இன்று இலங்கை அணி எந்தத் திறமைசாலி வந்து எங்களைக் காப்பாற்றுவார் என்ற நிலையில் இருக்கிறது. மேய்ப்பவனாக நாங்கள் சென்றால் எங்களை இணைத்துக் கொள்வார்கள்.
எனவே முதலில் நாம் திறமைகளை வளர்த்து கௌண்டி போட்டிகளில் விளையாடி கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக வேண்டும். நாம் பலவீனமாக ஆட்களாக இருந்து கொண்டு துவேசத்தால் மட்டும் தான் எம்மை இணைத்துக் கொள்ளவில்லை என்று கோபித்துக் கொண்டு பாகிஸ்தானை ஆதரிக்கக் கூடாது.
ஒருமுறை இந்தியாவில் இடம்பெற்ற இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியின்போது முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு பிழையென நடுவர் சொன்னபோது அணித் தலைவர் அர்ஜுனா ரணதுங்க நடுவரை நோக்கி கையை நீட்டி, நீட்டி மிகக் காரசாரமாக தனது ஆட்சேபனையை தெரிவித்தார். அர்ஜுனா துவேசம் உள்ளவர் என்றால் முரளிக்கு எதிராக வந்த இந்தக் குற்றச்சாட்டை வைத்து முரளியை அணியிலிருந்து தூக்கியிருக்க முடியும்.
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களான சங்கக்கார, ஜெயசூரிய, மஹேல போன்றோர் கொவிட்-19 இல் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு கடும் ஆட்சேபனை செய்தார்கள். சங்கக்கார “கொவிட்டில் மரணித்த ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு சகல உரிமைகளும் உண்டு” என்று சொன்னார். இவ்வாறு இவா;கள் பெரும்தன்மையாக முஸ்லிம் சமூகத்திற்கு குரல் கொடுக்கின்ற இந்த சூழலை நாம் நமது துவேசத்தைக் காட்டி கெடுத்துக் கொள்ளக்கூடாது.
மறுபுறம் விளையாட்டை வைத்து தேசப்பற்றை அளவிடக்கூடாது என்று இன்னும் எம்மவா;கள் சிலர் முகநூலில் எழுதுகின்றார்கள். இது விளையாட்டுதானே. இதிலே நாங்கள் பாகிஸ்தானை ஆதரிப்பதால் எங்களது தேசப்பற்று குறையாது என்கின்றார்கள். நாங்கள் என்ன நியாயம் சொன்னாலும் சிங்களவர்கள் எங்களுக்கு தேசப்பற்று இல்லையென்றே சொல்வார்கள். நாங்கள் இலங்கை பிரஜைகள் இல்லையென்று சொல்வதற்கு எங்களில் என்ன பிழை பிடிக்கலாம் என்று திரிபவா;களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்.
நான் பஹ்ரைனில் வேலை வாய்ப்பு பெற்றிருந்தபோது நாங்கள் இலங்கை – பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவா;கள் எங்களை வினோதமாக பார்ப்பார்கள். “ஏன் நீங்கள் பாகிஸ்தானை ஆதரிக்கின்றீர்கள்? நீங்கள் பாகிஸ்தானை ஆதரிக்க வேண்டாம். இனிமேல் நீங்கள் இலங்கையைத்தான் ஆதரிக்க வேண்டும். அதுதான் நாட்டுப்பற்று.” என்று பாகிஸ்தான் பிரஜையே எங்களுக்கு ஆலோசனை வழங்குவார். வெளிநாடுகளில் இருந்தால்தான் தெரியும். நாங்கள் அங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று பிரிந்திருக்க மாட்டோம். இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒருவருக்கொருவா; உதவியாக இருப்போம். எங்களுக்குள் எந்தவித துவேசமும் இருக்காது.
துவேசம் யாரிடத்தில் இருக்கின்றது என்றால், அது எங்களிடத்தில்தான் இருக்கிறது. நாங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை இலங்கையர்கள் விளையாடுகிறார்கள் என்று பார்ப்பதில்லை. சிங்களவர்கள் விளையாடுகிறார்கள் என்றே பார்க்கின்றோம். எனவே சிங்களவர்கள் விளையாடுகின்றார்கள் என்று பார்க்காமல் இலங்கையர்கள் விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம். ஏனெனில் இலங்கையை உலக நாடுகளுக்கு அதிகமாக தெரிய வந்தது கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இலங்கை வென்ற பின்தான். எனவே நாம் இலங்கையராக மீண்டும் எழுவோம்.- Vidivelli