(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் கடிதத் தலைப்பு, உத்தியோகப்பூர்வ சின்னம் மற்றும் உலமா சபையின் தலைவரது கையொப்பம் என்பனவற்றை போலியாக தயாரித்து சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி பரப்பப்பட்டு வருகின்றமைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
திகோ நிதி நிறுவனத்தின் நிதிமோசடி தொடர்பில் போலி ஆவணங்களைத் தயாரித்து, உலமா சபைத் தலைவரினது கையொப்பத்தை போலியாக பதிவு செய்து பரப்பப்பட்டுவரும் போலியான செய்தியுடன் தொடர்புபட்டவர்களை தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தும்படி உலமா சபை பொலிஸ்மா அதிபரிடம் கடிதமொன்றினை கையளித்துள்ளது.
குறிப்பிட்ட கடிதத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ரிபா ஹசன் சட்டத்தரணியூடாக பொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ளார். இக்குற்றச்செயல் குறித்து உலமா சபையின் பிரதிநிதிகள் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடியுள்ளனர்.
போலி செய்தி பரப்பிய ஐந்து சமூக வலைத்தளங்களின் பெயர் விபரங்களும் பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட செய்தியின் பிரதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தின் பிரதி சைபர் குற்றங்கள் விசாரணைப்பிரிவுக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் உலமா சபையின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித் மேலும் தெரிவிக்கையில், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி இதற்கு முன்பும் இவ்வாறான தவறான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. தவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். அப்போது எதிர்காலத்தில் இவ்வாறான செயல்கள் இடம்பெற்றால் அறிவிக்கும்படி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.
பொலிஸார் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நி-றுத்துவார்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
சமூகத்தின் மத்தியில் இவ்வாறான போலியான செய்திகளை, தகவல்களை உலமா சபையின் பெயரில் பரப்புபவர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறோம் என்றார்.- Vidivelli