ஏ.ஆர்.ஏ.பரீல்
சர்ச்சைக்குள்ளாகியிருந்த 22ஆவது திருத்தச்சட்டம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயன்று வந்த போதிலும் ஆளும் தரப்புக்கு மத்தியில் அதற்கு எதிர்ப்புகள் மேலோங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாராளுமன்றத்தில் ஒற்றை ஆசனத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீன அணிக்குத் தாவிக் கொண்ட நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் இணைந்து இந்த திருத்தச்சட்டத்தை எவ்வாறு நிறைவேற்றப்போகிறார்கள் என்ற சந்தேகம் இறுதிவரை நிலை கொண்டிருந்தது. உயர் நீதிமன்றின் வியாக்கியானத்துக்கு அமைய சர்வஜன வாக்கெடுப்புக்கு அவசியமான பிரிவுகள் நீக்கப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இதனை நிறைவேற்றிக்கொள்ள திட்டமிடப்பட்டது.
இதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன் இருக்கும் பொது ஜனபெரமுனவின் ஆதரவு முக்கியமாகத் தேவைப்பட்டது. ஆனால் பொது ஜன பெரமுன கட்சி மூன்றாகப் பிளவுபட்டிருந்தமை 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு சாதகமாக அமைந்திருந்தது.
பொது ஜனபெரமுன கட்சியில் ஒரு பிரிவினர் ஏற்கனவே சுயாதீன அணியாக இயங்கத் தொடங்கியிருந்தனர். இவர்கள் 22 ஆவது திருத்தத்தை ஆதரித்தனர். மேலும் ஒரு பிரிவினர் பொது ஜனபெரமுனவுக்குள் இருந்து கொண்டே, இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைவதை தடுக்க வேண்டும். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதை ஆதரித்தனர். இன்னுமொரு பிரிவினரும் இருந்தனர். அவர்கள் பசில் ராஜபக்ஷவுக்கு விசுவாசமானவர்கள். இவர்கள் 22 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலான பிரிவை நீக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். இல்லையேல் தாம் எதிர்த்து வாக்களிப்பதாகவும், வாக்களிப்பை புறக்கணிக்கப்போவதாகவும் மிரட்டி வந்தனர். இவ்வாறான நிலைமையில் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறுமா என்பதைவிட வாக்கெடுப்பு நடக்குமா? என்று கூட சந்தேகம் நிலவியது. அரசாங்கம் இறுதி நேரத்தில் சட்ட மூலத்தை விலக்கிக்கொள்வதாக அறிவித்து வாக்கெடுப்பைத் தவிர்க்கலாம் எனும் சந்தேகமும் நிலவியது.
இந்நிலையே 22 ஆவது திருத்தச் சட்ட மூலம் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது ஒரு வரலாற்றுப்பதிவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில் எதிராக ஒரேயொரு வாக்கே பதிவாகியது. பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவே எதிர்த்து வாக்களித்தார். திருத்தச் சட்ட மூலத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய திருத்தங்கள் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்து வாக்களித்த ஒரே ஒரு உறுப்பினரும் இவரேயாவார்.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்தும் விலகி சுயாதீனமாக செயற்படும் டலஸ் அலகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, மற்றும் உத்தர லங்கா சபாவவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜபக்ஷ குடும்பத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சமல் ராஜபக்ஷ, சசேந்ர ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை விசேட அம்சமாகும்.
திருத்தச் சட்ட மூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அரச தரப்பைச் சேர்ந்த 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.
\பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர, சீதா அரம்பேபொல, ரோஹித அபேகுணவர்தன, நிபுன ரணவக, பிரமித பண்டார தென்னகோன், ஜனக பண்டார தென்னகோன், எஸ்.எம்.சந்ரசேன, ஜோன்ஸன் பர்ணாந்து ஆகியோர் உட்பட 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே காரணங்களைத் தெரிவித்து வாக்கெடுப்பு நடைபெற்றபோது பாராளுமன்றத்துக்கு சமுகமளித்திருக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ, சனத் நிசாந்த, காமினி லொக்குகே, பவித்திரா வன்னி ஆரச்சி, சாகர காரியவசம், ஜயன்த கெடகொட, சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகிய ஏழுபேரும் வாக்கெடுப்பு நடக்கும்போது பாராளுமன்றத்துக்குள் இருக்கவில்லை.
அத்தோடு ஜி.எல்.பீரிஸ், உபுல் கலபத்தி, அங்கஜன் ராமநாதன், சான் விஜயலால் டி சில்வா, திஸ்ஸ விதாரன ஆகிய ஐந்து சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்களும் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை.
ஆர் சம்பந்தன், எம்.எச்.ஏ.ஹலீம், வடிவேல் சுரேஷ், கஜேந்திர குமார் பொன்னம்பலம், கஜேந்திரன், ஹெக்டர் அப்புஹாமி, வேலுகுமார், எஸ்.எம். மரிகார், ஹேஷா விதானகே, எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம், தவராசா கலையரசன் ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்கு சமுகமளித்திருக்கவில்லை.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூலம் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு நீதிமன்றின் தீர்ப்புக்கமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் 22 ஆவது திருத்தச்சட்டம் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் இடம்பெற்றது. 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் முதற்பணி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சபையொன்றினை நிறுவுவதாகும். சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் அரசியலமைப்புச் சபைக்கு உத்தியோகபூர்வமாக நியமனம் பெறுவார்கள்.
மேலும் ஜனாதிபதி நியமிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், பிரதமரை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், சிறிய அரசியல் கட்சியின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், எதிர்க்கட்சியை பிரதிநிதிப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மற்றும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூவர் இந்த அரசியலமைப்பு சபையில் அங்கம் பெறுவர்.
நீதித்துறை மற்றும் அரச சேவையினை சுயாதீனமாக இயங்கச் செய்வது 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் முக்கியமான இலக்காகும். நீதிபதிகள், சட்டமா அதிபர், மத்திய வங்கியின் தலைவர், கணக்காளர் நாயகம், பொலிஸ்மா அதிபர், பாரா-ளுமன்றத்தின் செயலாளர் நியமனங்கள் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக் குழு உட்பட ஏனைய ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் நியமனங்கள் என்பனவற்றுக்கு அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை பாராளுமன்றுக்கு பரவலாக்கும் வகையில் 22 ஆவது திருத்தச்சட்ட மூலம் அமைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் 19 ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கும் வகையிலும் 19 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்தோடு இதில் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 18 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை மாற்றியமைக்கும் நோக்கிலேயே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்தை 4 ½ வருடத்தின் பின்னரே கலைக்க முடியும் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று பொது ஜன பெரமுன அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதனையடுத்தே 19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் பலப்படுத்தும் வகையில் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தில் இரட்டை பிரஜாவுரிமையுடைய ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியுமென்றும் பாராளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் ஜனாதிபதியினால் கலைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 20 ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதிக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்கியுள்ளதாக பல வழிகளிலும் அதிருப்திகள் வெளியிடப்பட்டு வந்தன. பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் 20 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். நான்கு பெளத்த பீடங்களும் ஒன்றிணைந்து 20ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
இவ்வாறான நகர்வுகளின் பின்பே தற்போது 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இச்சட்டமூலத்தில் இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள பசில் ராஜபக்ஷவே பிரதான குறியாக இலக்கு வைக்கப்பட்டிருந்தார். இரட்டை பிரஜாவுரிமையுடைய ஒருவர் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க முடியாது. அதன்மூலம் பதவிகளைப் . பெற முடியாது.
22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு மூலம் பொதுஜனபெரமுன கட்சி பிளவுகளைச் சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் இக்கட்சி 2/3 பெரும்பான்மையைக் கொண்டிருந்த போதும் தற்போது பின்தள்ளப்பட்டுள்ளது.
பிரதமரை பதவி விலக்கல் எனும் விடயத்தை எடுத்துக்கொண்டால் 19 ஆவது திருத்தச்சட்டத்தின்படி அவர் தனது பதவியை இராஜினாமா செய்தாலன்றி அவரை பதவி விலக்க முடியாது என்றே கூறப்பட்டுள்ளது. இதேவேளை 20ஆவது திருத்தச்சட்டத்தின்படி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்றினை அனுப்பி வைப்பதன்மூலம் பிரதமரை பதவி விலக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 22 ஆவது திருத்தச்சட்டத்தின்படி பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டாலேயன்றி அவரை பதவி விலக்க முடியாது. அதன்படி பிரதமரை பதவி விலக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றே 22 ஆவது திருத்த சட்டம் தெரிவிக்கிறது.
20 ஆவது திருத்த சட்டத்தை நீக்க வேண்டும். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்பதே அண்மைய போராட்டக்காரர்களினதும் பொது மக்களினதும் எதிர்பார்ப்பாகவும் அபிலாஷையாகவும் இருந்தது. இந்நிலையில் 179 வாக்குகளால் 22 ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றில் நிறைவேறியிருக்கிறது. ஒரே ஒருவரே எதிர்த்து வாக்களித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீளவேண்டும். நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகள் பலமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் 22 ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.- Vidivelli