ஏ.ஆர்.ஏ.பரீல்
“2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே உள்ளது. இது தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும். நாட்டு மக்களின் வாக்குரிமை தொடர்பில் கடந்த காலங்களில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளின்படி தேர்தலைப் பின்தள்ளுவதற்கு நீதிமன்றம் சந்தர்ப்பம் வழங்காது என்று தேர்தல் ஆணைக்குழு நம்பிக்கை வைத்துள்ளது” என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2023 மார்ச் மாதம் நாட்டில் சிறிய தேர்தலொன்று நடைபெறும். அதாவது உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடைபெறும். நாங்கள் அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என நாட்டு மக்களில் பெரும்பான்மையினரும் எதிர்க் கட்சிகளும் எதிர்பார்த்திருந்தன. அதற்கான காய்களை நகர்த்திவந்தன.
இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்சார் வல்லுனர்களுடன் நடாத்திய கலந்துரையாடலில் தெரிவித்த கருத்துகள் உள்ளூராட்சி மன்ற தேர்தல், தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளவாறு எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படுமா என்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
குறிப்பிட்ட தொழில்சார் வல்லுனர்களுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு முன்பு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 லிருந்து 4000 ஆக குறைக்கப்படும். அத்தோடு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் தனியொரு தலைவருக்கு கிட்டும் முறைமை மாற்றியமைக்கப்பட்டு தலைவர் உள்ளடங்கிய நிர்வாக சபைக்கு வழங்கப்படும் வகையில் புதிய சட்ட மூலம் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு அரசியல் ஊழல்களுக்கு பிரதான காரணம் விருப்பு வாக்குமுறை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும். விருப்புவாக்கு முறைமை அல்லாது முழுமையான பட்டியல் முறைக்கோ அல்லது கலப்பு முறைக்கோ செல்ல வேண்டும். இரண்டில் ஒரு முறைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான தீர்மானம் மேற்கொள்வதற்கு தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும். அடுத்த வருடம் ஜூன், ஜூலை மாதமாகும்போது இது தொடர்பில் தீர்மானமொன்று மேற்கொள்ள முடியாமற்போனால் மக்களின் கருத்தினை அறிந்து கொள்வதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியாயினும் ஜனாதிபதியின் இந்தக் கருத்தினை எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது. ஜனாதிபதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பின்தள்ளுவதற்கு முயற்சிப்பதாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டுள்ளார்.
எமது நாட்டின் உள்ளூராட்சி கட்டமைப்பு மாநகர சபை, நகர சபை, உள்ளூராட்சி சபை என 341 சபைகளைக் கொண்டதாகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறுதியாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்றது. இத்தேர்தலில் 8719 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே நடத்தப்பட்டிருக்க வேண்டும். என்றாலும் விடயத்துக்குப் பொறுப்பான அப்போதைய அமைச்சர் தேர்தலை ஒருவருட காலத்துக்குப் பிற்போட்டார்.அதன்படி ஒருவருட காலம் கடந்து அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் படி உள்ளூராட்சி மன்றங்களினது உறுப்பினர்களது எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தல் ஆகிய ஏற்பாடுகளை 2023 மார்ச் மாதத்துக்கு முன்பு மேற் கொள்ள முடியாது போனால் இத்தேர்தல் மேலும் தாமதமாகலாம். தேர்தல் சட்ட திட்டங்களுக்கு அமைய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை ஆகக்கூடியது ஒரு வருட காலத்துக்கு மாத்திரமே பிற்போட முடியும்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மேலும் காலதாமதப்படுத்துவதை எதிர்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தலை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்து தனது சுயநலம் மற்றும் தான் சார்ந்திருக்கும் மொட்டுக்கட்சியின் நலனுக்காகவே என்று பலராலும் கருத்து வெளியிடப்பட்டு வருகிறது. தேர்தலை தாமதப்படுத்தும் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சி தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சி என்று கூறப்படுகிறது. தேர்தல் ஒன்று- வந்தால் தனது அதிகார இருப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விடயமே பிரதான காரணமாகும். தற்போது பதவியிலுள்ள அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடையாது. தேர்தல் ஒன்று வந்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினதும் அவர் சார்ந்திருக்கின்ற மொட்டுக்கட்சியினதும் செல்வாக்கு பாரியளவில் வீழ்ச்சியடையும். அதனால் தேர்தல் ஒன்று வருவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்பதில் உறுதியாக உள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்
சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டினை அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெளிவாகக் கூறியிருக்கிறார்.
‘உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பதா? அல்லது அதிகரிப்பதா? என்பது அரசாங்கத்தின் கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றாலும் 2017 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க உள்ளூராட்சி சட்டத்தின் மூலமே உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மக்களுக்கான சேவைகளை விரிவுபடுத்துவதற்காகவே உள்ளூராட்சி மன்றங்களினது உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உள்ளது. இவ் எண்ணிக்கை உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய சுமையாக உள்ளது. அதனால் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும் என்று இப்போது கூறுகிறார்கள். உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் தொகை அதிகமானது என்னும் விடயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது பற்றி ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும்.
1980 ஆண்டாகும் போது எமது நாட்டில் கிராம சபை, சிறிய நகரசபை, நகர சபை மற்றும் மாநகர சபை என பல நிறுவனங்கள் செயற்பட்டு வந்தன. அவற்றில் சுமார் 7000 பேர் உறுப்பினர்களாக இருந்தார்கள். ஆனால் அப்போது உறுப்பினர்களின் தொகை அதிகம் என எவரும் கூறவில்லை.
அதேவேளை இன்று நாட்டில் சனத்தொகையின் விகிதமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைப்பதென்றால் உள்ளூராட்சி மன்றங்களின் அளவினை பெரிதுபடுத்த வேண்டும் என்றே தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்க்கிறது. அதற்காக எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டும். எல்லை நிர்ணயம் மேற்கொள்வதென்றால் அதற்கு கால எல்லை தேவை. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் முளைவிடலாம். மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயத்துக்கு நேர்ந்தகதி இதற்கும் ஏற்படலாம் என மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படலாம்.
மாகாணசபை தேர்தலுக்கு கலப்பு விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டாலும் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ளப்படவில்லை. அதனால் மாகாண சபைகள் தற்போது செயலிழந்துள்ளன. மாகாண சபை நிர்வாகம் தற்போது அதிகாரிகளினாலே மேற்கொள்ளப்படுகிறது. இதனை தேர்தல் ஆணைக்குழு எதிர்க்கிறது. மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்த வேண்டுமென நாம் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையிலும் கூறியிருந்தோம். சில அரசியல் ஆய்வாளர்களும் மற்றும் மக்களும் மாகாணசபை தேர்தலுக்கு கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவமுறைமையை அறிமுகம் செய்தது. மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்காகவே அன்றி பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவல்ல என கருதுகிறார்கள்.
2023 மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்பு உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடாத்தப்படவேண்டும். தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கு தயாராகவே உள்ளது. இது தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும்.
ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் அதற்கென வேறாக சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்பு ஜனாதிபதியினால் இதனை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றால் பிரச்சினையில்லை. என்றாலும் இதனை தேர்தலை பிற்போடுவதற்கான ஆயுதமாக பயன்படுத்துவதென்றால் தேர்தல் ஆணைக்குழு இதற்கு உடன்பட மாட்டாது என்றார்.
பெப்ரல் அமைப்பின்
நிறைவேற்றுப் பணிப்பாளர்
தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கடந்த 9 ஆம் திகதி தொழில் வல்லுனர்கள் குழுவொன்றுடன் நடாத்திய கலந்துரையாடலில் தெரிவித்த கருத்துக்கள், ஜனாதிபதி மக்களுக்கு இனிப்பு தடவிய விஷத்தை ஊட்டுவதற்கு முயற்சிப்பதாக அமைந்துள்ளது.
இவ்வாறான தேர்தல் முறைமை பற்றிய திருத்தங்கள் வரலாறு நெடுகிலும் கொண்டுவரப்பட்டாலும், அவ்வாறான திருத்தங்கள் அக்காலங்களில் அதிகாரத்திலிருந்த ஆட்சியாளருக்கு தேவையான வகையிலே அமைந்திருந்தன. அன்றி நாட்டுக்குப்பொருத்தமான முறைமையாக அமைந்திருக்கவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி கூறியுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்திடம் கேள்வியொன்றினைத் தொடுக்கவேண்டியுள்ளது.
அதாவது தேர்தலை நடாத்துவதை ஒரு வருடகாலம் பிற்போட்டு அந்தக்கால எல்லை நிறைவுறும் வரை காலத்தை வெறுமனே கடத்தியது ஏன்? உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களது எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். என்றாலும் இந்த முயற்சிக்கான காரணம் என்ன? இதற்கு அரசியல் கட்சிகளின் இணக்கம் பெறப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் மீண்டும் எல்லை நிர்ணயத்துக்கான முயற்சி தேர்தலை மீண்டும் கால தாமதப்படுத்துவதற்கான திட்டமா? என்றும் அரசிடம் கேட்கிறோம். அரசு நேர்மையாக செயற்படும் நோக்கம் கொண்டிருந்தால் முதலில் உடனடியாக மக்கள் தமது ஆணையை வெளிப்படுத்தும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும். அதன் பின்பு தேர்தல் முறைமையில் மாற்றங்களைச் செய்வதற்கு தேவையான காலத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.
விருப்பு வாக்கு தேர்தல் முறைமையின் ஊழல்கள் மலிந்துள்ளன என்று ஜனாதிபதி தெரிவித்தாலும் மக்களின் அவசரமான முக்கியமான கோரிக்கை தேர்தல் முறைமையில் மாற்றமா? இல்லை. மக்கள் ஜனநாயக ரீதியிலான தேர்தல் ஒன்றினை உரிய காலத்தில் நடத்துமாறே கோருகின்றனர்.
தேர்தல் முறைமையின் மாற்றங்களைச் செய்வதற்காக ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்று கூறுவது மக்களையும் முழு உலகையும் ஏமாற்றுவதாகும்.