(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இஸ்லாம் பாடப்புத்தகம் மாணவர்களிடமிருந்து மீள பெறப்பட்டதனால் சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. படித்துக்கொடுக்க ஆசிரியர்களுக்கு பாடப்புத்தகம் தேவையில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று தெளிவுபடுத்தல் கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர் இஷாக் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இஷாக் ரஹ்மான் தெரிவிக்கையில், கல்வி பொதுத் தராதர பரீட்சைக்கான கேள்விகள் 10 மற்றும் 11 தர புத்தகங்களில் இருந்தே வருகின்றன. ஆனால் இஸ்லாம் பாடப்புத்தகம் மாணவர்களிமிருந்து மீள பெறப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. அப்படி இருக்கையில், அடுத்த மார்ச் மாதமளவில் பரீட்சை இடமபெற இருக்கின்றது. இதனால் இஸ்லாம் பாட பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அநீதி ஏற்படுகின்றது. அதனால் இந்த மாணவர்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டார்.
அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
தரம் 6முதல் 11வரையான இஸ்லாம் பாடப்புத்தகத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என பாதுகாப்பு அமைச்சினால் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் கல்வி அமைச்சின் புத்தக வெளியீட்டு திணைக்களம் அந்த திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அடுத்த மாதத்தில் மாணவர்களிமிருந்து பெறப்பட்ட புத்தகங்கள் மீண்டும் வழங்கப்படும். அத்துடன் இஸ்லாம் பாடப்புத்தகம் மீள பெறப்பட்டதனால் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
ஏனெனில் மாணவர்களுக்கு படித்துக்கொடுக்க அச்சுப்புத்தகம் தேவையில்லை. பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் முறையாக கற்றுக்கொடுப்பார்கள். மாணவர்களுக்கு அச்சுப்புத்தகம் வழங்குவது பரிசீலனை செய்வதற்கு மாத்திரமாகும். அதனால் அச்சுப்புத்தகம் இல்லாமை சாதாரண தர பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கு பாரியதொரு தாக்கம் ஏற்படப்போவதில்லை என்றார்.- Vidivelli