நாட்டின் பொருளாதார நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கின்ற நிலையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது. இந் நிலையில்தான் அரசாங்கம் ‘எவரையும் கைவிடாதீர்’ என்றதொரு நலன்புரித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் இந்த வேலைத்திட்டத்துக்கு நேற்று வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அவற்றுள் 624, 714 விண்ணப்பங்கள் நேற்று வரை தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 341 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள நலன்புரி உதவித் தகவல் அலகுகள் மூலம் அனைத்து விண்ணப்பங்களும் உடனடியாக இத்தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 30 சதவீத மக்கள் – தற்போது உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. குறைவடைந்துள்ள உள்நாட்டு விவசாய உற்பத்தி, அந்நியச் செலாவணி இருப்பு பற்றாக்குறை மற்றும் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவை உணவுப் பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைச் செலவில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளன. இது மக்களின் ஆரோக்கியமான மற்றும் அதிக உணவுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. பொருளாதார நெருக்கடியானது குடும்பங்களை பசி மற்றும் வறுமையில் தள்ளியுள்ளது. சிலர் முதல் முறையாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளடங்கியுள்ளனர். உலக வங்கி மதிப்பீடுகளுக்கமைய இது சுமார் அரை மில்லியன் மக்களைக் உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, 86 சதவீத குடும்பங்கள் மலிவான, குறைவான சத்துள்ள உணவை வாங்குகின்றனர், குறைவாக சாப்பிடுகின்றனர் மற்றும் சில சமயங்களில் உணவை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்றுநோய்க்கு முன்னர், இலங்கை முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் ஏற்கனவே அதிகமாக இருந்தது.
கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், மற்ற நடுத்தர வருமான நாடுகளை விட இலங்கைப் பெண்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 17 சதவீதமானோர் வளர்ச்சி குன்றியதால் மிகவும் குட்டையாக இருந்தனர் மற்றும் 15 சதவீதமானோர் உயரத்துடன் ஒப்பிடும் போது மிகவும் உடல் மெலிவாகக் காணப்பட்டனர். தற்போதைய பொருளாதார நெருக்கடி இதை மேலும் மோசமாக்கும் என்றும் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந் நிலையில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள ‘எவரையும் கைவிடாதீர்’ எனும் திட்டம் காலத்தின் தேவையாகும். இதனை பாரபட்சமின்றி தேவையுடைய அனைத்து மக்களுக்கும் உதவிகள் சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் கடப்பாடாகும்.
இதேவேளை இவ்வாறான தரவு சேகரிப்பு ஒன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டு பள்ளிவாசல் அல்லது பிரதேச ரீதியாக தேவையுடையவர்கள் இனங்காணப்பட்டு உதவித்திட்டங்கள் நடைமுறைப்ப டுத்தப்பட வேண்டும்.
இன்று மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் அன்றாட வருமானம் பெறும் குடும்பங்கள் கூட செலவுகளைச் சமாளிக்க முடியாது தடுமாறுவதைக் காண முடிகிறது. சமூகத்தில் கெளரவமாக வாழ்கின்ற பலரும் கூட தமது பொருளாதார நிலையை வெளியில் சொல்லிக் கொள்ள முடியாதவாறு தடுமாறுகின்றனர். எல்லோரும் அரசாங்க உதவித்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பர் என எதிர்பார்க்க முடியாது.
அவ்வாறானவர்களுக்கெனவும் பள்ளிவாசல்கள், முஸ்லிம் சமூக நிறுவனங்கள் மூலமாக உதவித்திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
வாழ்க்கைச் செலவு உச்சத்தைத் தொட்டுள்ள இன்றைய நாட்களில் வருமானமின்றித் தவிக்கும் இந்தக் குடும்பங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது அவசியமாகும்.
முஸ்லிம் சமூகம் பள்ளிவாசல்களை அடிப்படையாகக் கொண்டு நிர்வகிக்கப்படுவதால், ஒவ்வொரு பள்ளிவாசல்களும் தமது மஹல்லாவுக்குட்பட்ட தேவையுடைய குடும்பங்களை இனங்கண்டு எவ்வாறு உதவலாம் என்பது குறித்துத் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.
முஸ்லிம் சமூக நிறுவனங்களுக்கும் இதில் பொறுப்புள்ளது. தமது ஸகாத், ஸதகாக்கள் மூலம் உதவக் கூடியவர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி ஒருவேளை உணவுக்குக் கூட வழியின்றித் தவிக்கும் குடும்பங்களை இனங்கண்டு உதவிகளை வழங்க வேண்டும். இது தொடர்பிலும் சகலரும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். Vidivelli