எஸ்.என்.எம்.சுஹைல்
கொழும்பு நகரில் வாழும் மக்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் சேரிப்புறங்கள் அல்லது வாழ்வதற்கு பொருத்தமற்ற குடியிருப்புகளிலேயே வாழ்கின்றனர். இத்தகைய வீடுகள் நகரின் 9 வீதமான நிலப்பரப்பிலேயே காணப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டில் 68,812 குடும்பங்கள் இத்தகைய சூழலில் வாழ்ந்ததாக நகர அபிவித்தி அதிகார சபை தெரிவிக்கிறது. எனினும், தற்போது அத்தொகை மேலும் அதிகரித்திருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காண, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் மாதம்பிட்டிய பகுதியில் தொடர்மாடிக் கட்டடத்தை அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்தது. இதற்கமைய 2019 ஆம் ஆண்டு இந்த வீட்டுத்திட்டம் திறந்து வைக்கப்பட்டது.
இவ் வீட்டுத் திட்டத்திற்குள், மாதம்பிட்டி, ஹேனமுல்ல முகாம் பகுதியிலுள்ள மக்களும் உள்வாங்கப்பட்டனர். இதனையடுத்து இம் மக்கள் வசித்த பகுதிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டன. வீடுகளின் கூரைகள் அகற்றப்பட்டு அவ்விடத்திலிருந்து மக்கள் வெளியேற பணிக்கப்பட்டனர். எனினும், அப்பிரதேசத்தில் வாடகைக்கு குடியிருந்த அல்லது ஒரே வீட்டுக்குள் கூட்டுக் குடும்பமாக இருந்தவர்களில் சில குடும்பங்களுமாக 52 குடும்பங்கள் வெளியேறாது அவ்விடத்திலேயே இருந்துவிட்டனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் பிறந்து வளர்ந்த அல்லது ஏற்கனவே இருப்பிடமிருந்து அப்பகுதியில் வெளி இடங்களில் வசித்தவர்கள் மீண்டும் அப்பிரதேசத்தில் குடியேறி சில வருடங்கள் அங்கேயே இருந்து வந்தனர்.
இந் நிலையில் ஹேனமுல்ல முகாம் பகுதியில் சட்டவிரோதமாக இருக்கும் மக்களை அங்கிருந்து வெளியியேறும்படி நகர அபிவிருத்தி அதிகார சபை கடந்த வாரம் அறிவித்தல் அனுப்பியுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததுடன், தமக்கு வீடுகளை தருமாறு கோரிக்கையும் விடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை பெற்றுக்கொள்ள நேற்று முன்தினம் மாதம்பிட்டி, ஹேனமுல்ல முகாம் பகுதிக்கு சென்றோம்.
முஹம்மது மொஹிதீன் சம்சுதீன்
52 வயது
தொழிலில்லை, 4 பிள்ளைகள், இருதய நோயாளி, மனைவி தினக்கூலி
“இந்த இடத்தில் 20 வருடமாக கூலிக்கு இருக்கிறோம். தற்போது இங்கு வீடுடைக்கப்படவுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளோம். எமக்கு இருப்பதற்கு சிறிய வீடொன்று தர வேண்டும். எம்மால் வாடகை செலுத்த முடியாது. மனைவி கூலித் தொழிலுக்கு செல்வதன் ஊடாகவே எமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துகிறோம், எனவே, கூலி கொடுப்பதற்கும் எங்களிடம் பணமில்லை. அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி எமக்கு வீடு பெற்றுத் தர வேண்டும்.”
முஹம்மது அமீர்தீன் அப்துர் ரஹ்மான்
41 வயது, 5 பிள்ளைகளின் தந்தை, அலுமினிய பொருத்து வேலை
“முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது எமக்கு வீடொன்றை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். இதன்படி எனக்கு வீடுதருவதாக உத்தரவாத கடிதமும் அப்போது கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு இந்த பகுதியிலிருந்து மக்கள் தொடர்மாடிக்கு மாற்றப்பட்டபோது, நாம் அங்கு வீடொன்றை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. நாம் இங்கு 600 சதுர அடியையும் விட பெரிய வீட்டிலேயே இருக்கிறோம். அங்கு 400 சதுர அடிகள் கொண்ட வீடே தரப்பட இருந்தது. எனவே, எமக்கு இரு வீடுகள் தர வேண்டும் என்று கோரியிருந்தோம். அக்கோரிக்கை நிறைவேற்றப்படாமையால் இங்கேயே இருந்துவிட்டோம். வீடு கிடைக்காதவர்கள் பதியப்பட்டிருக்கின்றனர். அந்த பட்டியலில் நாமும் இருக்கிறோம்”.
மேகலா,
33 வயது,
4 பிள்ளைகளின் தாய்
“2019 ஆம் ஆண்டும் இங்குதான் நாம் வாடகைக்கு இருந்தோம். வீட்டு உரிமையாளர்கள், வீடு உடைக்கப்படவுள்ளதாக எமக்கு அறிவித்தனர். பின்னர் நான் தாய் வீட்டுக்கே சென்றுவிட்டேன். தாய்க்கு ஒரு வீடுதான் கிடைத்தது. உடன் பிறப்புகள் ஐவர், வீட்டிலுள்ள ஒருவருக்கு அங்கு செல்ல முடிந்தது. அதனால் நாம் இங்கேயே இருந்துவிட்டோம். இப்போது மீண்டும் எம்மை வீட்டை விட்டு வெளியேறுமாறு பணித்திருக்கிறார்கள்.
நாம் 15 வருடமாக இதே பகுதியில் கூலிக்கு இருக்கிறோம். கணவனின் கூலித் தொழிலையே நம்பியிருப்பதால் எம்மால் வீடொன்றை பெற்றுச் செல்ல முடியாது. ஆகவே, எமக்கு வீடொன்றை பெற்றுத்தந்தால் வாடகையை கொடுத்தாவது நிம்மதியாக இருக்க முடியும்”.
முஹம்மது ஹனீபா முஹம்மது சித்தீக்
5 பிள்ளைகளின் தந்தை
சிற்றுண்டி வியாபாரம்
“12 வருடமாக இதே இடத்தில் வாடகைக்கு இருக்கிறேன். தேர்தல் இடாப்பு பதிவும் இங்குதான் இருக்கிறது. வீடு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்திடம் பல வழிகளிலும் முயற்சி செய்திருக்கிறேன். வீடமைப்பு திட்டங்களில் எம்மையும் உள்ளீர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதால், உடனடியாக வீட்டைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுங்கள்”.
பஸ்லு அவ்பிம்
37 வயது,
3 பிள்ளைகளின் தாய்,
பெண் தலைமை தாங்கும் குடும்பம்
“நாம் தொடர்ச்சியாக வாடகை வீட்டிலேயே இருந்துவந்தோம். எமக்கு 2019 ஆம் ஆண்டு வீடு தந்திருக்க வேண்டும், தரப்படவில்லை. வீடின்மையால் உடைக்கப்பட்ட மகளின் வீட்டை சரி செய்துகொண்டு நாங்கள் இங்கு இருக்கிறோம். எமக்கு வசிப்பதற்கு வீடு வேண்டும்”.
ரவத்துவெவகே ரஞ்சினி ரோஹித,
47 வயது,
2 பிள்ளைகளின் தாய்
“நான் தொழிலுக்கு செல்வதில்லை. மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியிலேயே வாழ்வை நடத்துகிறோம். வீட்டில் எமது பிள்ளைகளுக்கு உறங்குவதற்கு கூட இடமில்லை. அவர்களுக்காக வீடொன்றை தாருங்கள் என்று கேட்கிறோம். இங்கு ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு, மூன்று குடும்பங்கள் மிகக் கஷ்டத்துடனே வசிக்கின்றன”.
ஹேனமுல்ல பகுதியில் அன்றாட கூலித்தொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை நடத்தும் குடும்பங்களே வசிக்கின்றன. அவர்களால் புதிய வீடொன்றை வாங்குவதற்கோ அல்லது வீடொன்றை வாடகைக்கு பெற்றுக்கொள்வதற்கோ எந்தவிதமாக வசதிகளும் இல்லை என்பதை மக்கள் தெரிவித்த கருத்துகள் மூலம் உணர முடிந்தது. அத்தோடு, அவர்கள் நீண்ட காலமாக வாடகை வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். இந்நிலை தொடருமானால் அவர்கள் பொருளாதார ரீதியில் மேலும் நெருக்கடிகளைச் சந்திப்பர். பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படும். எனவே, ஏதோ ஒரு காரணத்தினால் வீடுகள் கிடைக்காதுள்ள மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றுவது அரசாங்கத்தினது கடப்பாடாகும்.- Vidivelli