(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாடெங்கும் இயங்கிவரும் அரபுக்கல்லூரிகள் பொதுவான பாடவிதானம் மற்றும் பொதுவான பரீட்சையின் கீழ் ஒன்றிணைக்கப்படவுள்ளன.
அரபுக்கல்லூரிகளில் பொதுவான பாடத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கும், பொதுவான பரீட்சை நடாத்துவதற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது. முஸ்லிம் துறைசார் அறிஞர்களால் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அப்பாடத்திட்டம் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்தோடு கடந்த 5 வருட காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மெளலவிகளுக்கான அல் ஆலிம் பரீட்சை நடத்தப்படவுள்ளது. இப்பரீட்சையை ஜனவரியிலிருந்து ஆரம்பிப்பதற்கு பரீட்சை திணைக்களம் இணங்கியுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 3 வருட காலமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அஹதியா பரீட்சையை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அஹதியாவுக்கான பாடத்திட்டமும் வடிவமைக்கப்படவுள்ளன. நாடெங்கும் 313 அஹதியா பாடசாலைகள் உள்ளன. இப்பாடசாலைகள் விரிவுப்படுத்தப்படவுள்ளன.
அஹதியா பாடசாலைகளை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அஹதியா சம்மேளனத்துடன் இணைந்து ஒரு ஒழுங்கு முறையின் கீழ் நடாத்துவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் தெரிவித்தார்.
நாட்டின் 313 அஹதியா பாடசாலைகளில் சுமார் 61 ஆயிரம் மாணவர்கள் பயில்கிறார்கள். இம்மாணவர்கள் சீருடைகளுக்காகவும் புத்தகங்களுக்காகவும் அரசாங்கம் வருடாந்தம் 3 கோடி 50 இலட்சம் ரூபாய்களை செலவு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா,முல்லைத்தீவு,மற்றும் மன்னார் மாவட்டங்களில் அஹதியா பாடசாலைகள் இயங்குவதில்லை. இம்மாவட்டங்களிலும் அஹதியா பாடசாலைகளை நடாத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் திணைக்களம் அரசாங்கத்திடமிருந்து மேலதிக உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குர்ஆன் மத்ரஸாவுக்கான புதிய பாடத்திட்டம் மீளாய்வு செய்யப்பட்டு அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.- Vidivelli