உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள்: ரணிலை பிரதிவாதி பட்டியலில் இருந்து நீக்கியது உயர் நீதிமன்றம்
(எம்.எப்.எம்.பஸீர்)
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களில், பிரதிவாதிகள் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அவ்வழக்குகளை முன்னெடுத்து செல்ல முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் கடந்த திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போதே உயர் நீதிமன்றம் இந்த தீர்மானத்தை அறிவித்தது.
கடந்த ஜூலை 26 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் பிரதமரும் இந் நாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவினால் அடிப்படை ஆட்சேபனை ஒன்று முன் வைக்கப்பட்டிருந்தது. தனது சேவை பெறுநர் தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், அரசியலமைப்பின் 35 ஆவது உறுப்புரை பிரகாரம் அவருக்கு எதிராக எந்த வழக்கினையும் முன்னெடுத்து செல்ல முடியாது எனவும் , அது அவருக்கு அரசியலமைப்பூடாக வழங்கப்பட்டுள்ள விடுபாட்டுரிமை எனவும் சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவினால் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த வாதத்துக்கு எதிராக வாதங்கள் மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் சிலரால் முன் வைக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உயர் நீதிமன்ற தீர்மானத்தை திறந்த மன்றில் அறிவித்தார்.
அதன்படி, பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக அரசியலமைப்பின் 35 (1) உறுப்புரை பிரகாரம் வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என அறிவித்தார். ஜனாதிபதிக்கு தனது கடமையை இடையூறின்றி முன்னெடுக்க இந்த விடுபாட்டுரிமை அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் குறிப்பிட்டார். அதனால் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக இந்த சந்தர்ப்பத்தில் குறித்த மனுக்களை முன்னெடுத்து செல்ல முடியாது என உயர் நீன்றின் தீர்ப்பை பிரதம நீதியரசர் அறிவித்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பெர் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக ஜனாதிபதி ரணில் சார்பிலான ஆட்சேபனைக்கு மற்றொரு பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா கடும் எதிர்ப்பு வெளியிட்டு கடந்த ஜூலை 27 ஆம் திகதி வாதங்களை முன் வைத்திருந்தார்.
தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை முன்னெடுத்து செல்ல முடியாது என அவரது சட்டத்தரணிகள் முன் வைத்துள்ள வாதம் அடிப்படையற்றது என ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.
‘ஜனாதிபதிக்குரிய விடுபாட்டுரிமை இந்த வழக்கை பொறுத்தவரை பொருத்தமற்றது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இவ்வழக்கை முன்னெடுத்து செல்ல எந்த தடையும் இல்லை.
ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக பதவி வகித்தபோது முன்னெடுத்த உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் தொடர்பில், அவர் ஜனாதிபதியானதால் கிடைக்கும் விடுபாட்டுரிமை ஊடாக எந்த பாதுகாப்பும் கிடைக்காது. அதனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர்ந்து முன்னெடுத்து செல்லலாம் என உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.’ என ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா கோரினார்.
இந் நிலையில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி இம்மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பிலான வாதங்களுக்கு பதில் வாதங்களை முன் வைத்தார்.
‘ ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்வதானால், பிரதிவாதியாக சட்ட மா அதிபரை பெயரிட்டு அதனை முன்னெடுக்கலாம். எனினும் இந்த மனுக்களில் பிரதிவாதியாக ரணில் விக்கிரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 35 (1) ஆம் உறுப்புரைக்கு அமைய அவருக்கு எதிராக இவ்வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாது . எனது சேவை பெறுநரை வழக்கிலிருந்து விடுவிப்பதால் இந்த வழக்கு விசாரணைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.’ என சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நாவானவும் மன்றில் வாதங்களை முன் வைத்திருந்தார்.
‘ஜனாதிபதியாக பதவி வகித்த எந்தவொரு நபரும் செய்த அல்லது செய்யாமல் தவிர்ந்த எந்தவொரு நடவடிக்கை தொடர்பிலும் எந்தவொரு நீதிமன்றிலும் வழக்குத் தொடுப்பதோ அல்லது வழக்கொன்றினை முன்னெடுத்து செல்வதோ கூடாது என அரசியலமைப்பின் 35 (1) ஆம் உறுப்புரை கூறுகிறது.’ என அவர் தெரிவித்திருந்தார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன் வைத்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவான, ஜனாதிபதிக்கு எதிராக எந்தவொரு நீதிமன்றிலும் வழக்கொன்றினை தாக்கல் செய்து முன்னெடுத்து செல்ல முடியாது என குறிப்பிட்டிருந்தார்.
அதனால் இந்த மனுக்களில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் மனுதாரர் தரப்பினர், பிரதிவாதி ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மற்றும் சட்ட மா அதிபர் சார்பிலான வாதங்களுக்கு கடும் ஆட்சேபனை வெளியிட்டிருந்தனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்காக மன்றில் ஆஜரான அச்சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிக்கு விடுபாட்டுரிமை என்பது சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடர்பில் மட்டுமே உள்ளதாகவும் இந்த வழக்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் என்பதால் இதனை முன்னெடுத்து செல்லலாம் என வாதிட்டிருந்தார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமீல் பெரேராவும், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் வாதங்களுடன் ஒத்துப் போவதாகவும், அதனால் ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக தொடர்ந்து கருதி வழக்கு விசாரணை செய்யப்படல் வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந் நிலையில் அனைத்து தரப்பினரதும் வாதங்களை செவிமடுத்த நீதியரசர்கள் குழாம், இவ்விடயம் தொடர்பிலான தீர்மானத்தை திங்களன்று அறிவித்தது.- Vidivelli