நாட்டில் அதிகரித்துச் செல்லும் வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதிலும் குறிப்பாக மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிரான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு- கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்துகள் உணர்த்தி நிற்கின்றன.
மது போதையில் கார் ஒன்றைச் செலுத்தி வந்த நபர் ஒருவர், வீதியில் ஓரமாக நின்றிருந்த இருவரை மோதித் தள்ளிவிட்டுச் சென்றது மாத்திரமன்றி, சிறிது தூரம் சென்று எதிரே வந்த வேன் ஒன்றையும் மோதியுள்ளார். இச் சம்பவத்தில் வீதியில் நின்றிருந்த இருவரும் வேனில் வந்த மற்றொருவருமாக மூவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்துள்ள 8 பேரில் பலர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய நபரின் கால் முறிந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கையைப் பொறுத்தவரைக்கும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துச் செல்கின்றமை கவலைக்குரியதாகும். பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் புள்ளிவிபரங்களுக்கமைய கடந்த 2017 ஆம் ஆண்டில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 819 ஆகும். எனினும் இந்த வருடத்தின் முதல் மாதத்தில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதான சாரதிகளின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 574 ஆகும். இது ஒப்பீட்டளவில் அதிக தொகையாகும்.
அது மாத்திரமன்றி கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்குமிடைப்பட்ட சுமார் 11 மணி நேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நாடளாவிய ரீதியில் 648 பேர் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விபரமும் அதிர்ச்சி தருவதாகும். மேலும் இந்த வருடத்தில் மது போதையில் வாகனம் செலுத்திச் சென்றவர்களால் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை 916 ஆகும். இவற்றின் மூலம் 31 பெறுமதிமிக்க உயிர்கள் அநியாயமாக இழக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் இந் நிலை தொடர அனுமதிக்கப் போகிறோமா? நம்மைச் சுற்றியுள்ள பெறுமதியான உயிர்கள் அநியாயமாகப் பறிபோக இடமளிக்கப் போகிறோமா? என இந்த இடத்தில் இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மது போதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான சட்டங்கள் இறுக்கமாக்கப்படுவதுடன் தண்டனையும் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் மது போதையில் விபத்தை ஏற்படுத்துவோர் உடன் கைது செய்யப்படுகின்ற போதிலும் கூடிய விரைவிலேயே பிணையில் விடுதலையாகின்றனர். ஆகக் கூடியது 2000 ரூபா முதல் 25000 ரூபா வரையிலான தொகையையே நீதிபதியினால் தண்டமாக விதிக்கக் கூடியளவு நமது சட்டம் பலவீனமாகக் காணப்படுகிறது.
கடந்த வருடம் இந்த குறைந்தபட்ச தண்டப் பணத் தொகையை 25 000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் தனியார் வாகன உரிமையாளர்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் மோட்டார் வாகன சாரதிகளின் எதிர்ப்பினால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
எனவேதான் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது, ஆகக் குறைந்தது மது போதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான தண்டனை மற்றும் தண்டத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான கோரிக்கைகள் வலுப் பெற வேண்டும். அதன் மூலமே இன்னுமின்னும் பெறுமதிக்க உயிர்கள் இழக்கப்படுவதை தடுக்க முடியும். இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள் விரைந்து செயற்பட வேண்டும்.
-Vidivelli