முஸ்லிம் சமய திணைக்கள கட்டடத்தில் இந்து, கிறிஸ்தவ விவகார திணைக்களங்கள்
சாவிக்கொத்தை பொறுப்பேற்றது புத்தசாசன, மத விவகார அமைச்சு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொழும்பு 10 ரி.பி.ஜாயா மாவத்தையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இயங்கி வரும் கம்பீரமான 9 மாடி கட்டிடம் முஸ்லிம் சமூகத்திடமிருந்து கைநழுவிப் போகிறது. கட்டிடத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள மூன்று மாடிகளைத் தவிர்ந்த ஏனைய மாடிகளின் சாவிக்கொத்து புத்தசாசன மற்றும் மத விவகார கலாசார அமைச்சினால் கையேற்கப்பட்டுள்ளது.
பூரணப்படுத்தப்படாது, பயன்பாட்டில் இல்லாத மாடிகளின் திருத்த வேலைகள் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் இந்துமத விவகார திணைக்களம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார திணைக்களம் இக்கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
கலாசார அமைச்சின் தீர்மானத்தின்படி 3ஆம் 4ஆம் மாடிகளுக்கு இந்துமத விவகார திணைக்களமும், 5ஆம் மாடிக்கு கிறிஸ்தவ விவகார திணைக்களமும் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. 6ஆம், 7ஆம், 8ஆம் மாடிகளில் கேட்போர் கூடம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1999 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவின் ஆட்சிக் காலத்தில் கலாசார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் ஜயக்கொடி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் மூலம் இக்கட்டிடத்துக்கான காணி பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் இங்கு முஸ்லிம்களுக்கென்று முஸ்லிம்கள் சார்பான அரச நிறுவனங்களை உள்வாங்கிக் கொள்வதற்காக கட்டிடமொன்று நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்கட்டிடம் வக்பு ஹவுஸ் என்று அழைக்கப்படும் எனவும் அப்போது சந்திரிகா பண்டார நாயக்கவால் தெரிவிக்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் கருத்து தெரிவிக்கையில், ‘இக்கட்டிடம் முஸ்லிம் அரச நிறுவனங்கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டதாகும். என்றாலும் 3 மாடிகளைத் தவிர ஏனைய மாடிகள் பூரணப்படுத்தப்படாமையினால் அந்த வாய்ப்பு ஈடேறவில்லை.
இந்து மற்றும் கிறிஸ்தவ மத விவகார திணைக்களங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் இக்கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. என்றாலும் இக்கட்டிட பணிகளை பூர்த்தி செய்து இங்கு வக்பு சபை, வக்பு ட்ரிபியுனல், காதிகள் மேன்முறையீட்டு சபை , ஹஜ் குழு காரியாலயம், அரபுக் கல்லூரி, அஹதியா தலைமையகம் என்பவற்றை இடமாற்றலாம். இந்து மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான திணைக்களங்களுக்கென புதிதாக கட்டிடங்களை நிர்மாணித்துக் கொள்ள முடியும். அவர்களிடம் வளங்கள் இருக்கின்றன. இதற்கு எம்மாலும் உதவிகள் செய்ய முடியும். அரபு மற்றும் சர்வதேச நாடுகளிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொடுக்க முடியும்.
ஏனைய மதங்களுக்கான திணைக்களங்கள் இங்கு இடமாற்றம் செய்யப்பட்டால் வாகனத் தரிப்பிட இடப்பற்றாக்குறையும் ஏற்படும்.
இந்நிலைமையினை கருத்திற்கொண்டு முஸ்லிம் அரசியல் தலைமைகள் கட்சி வேறுபாடுகளை மறந்து இக்கட்டிடத்தை பாதுகாத்து கொள்வதில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தற்போது வாகனத் தரிப்பிடத்திற்கு அடுத்த மேல் மாடி (Upper Floor) முதலாம் மாடி, மற்றும் இரண்டாம் மாடி பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli