கல்முனை சமீம்
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரி பெற்றுத் தந்த அஷ்ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அகால மரணமடைந்து நாளையுடன் (16.09.2022) இருபத்தி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இள வயதிலிருந்தே கல்வியிலும் ஆளுமையிலும் சிறந்து விளங்கிய அஷ்ரப், 1970 இல் சட்டக்கல்லூரியில் நுழைந்து இலங்கையின் புகழ் பூத்த சட்டத்தரணிகளில் ஒருவராகத் திகழ்ந்ததைத் தொடர்ந்து அரசியலிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
1976 இல் முஸ்லிம்கள் ஒன்பது பேர் புத்தளம் பள்ளிவாசலுக்குள் பரிதாபகரமாக ஆயுததாரிகளினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது இது பற்றி எதுவும் பேச திராணியற்று முஸ்லிம் எம்பிக்கள் இருந்தபோது, இப்படுகொலை சம்பந்தமாக அமரர் தந்தை செல்வநாயகம் மாத்திரம் முஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதைக் கண்ட அஷ்ரப் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.
முஸ்லிம்களுக்கென்று தனியானதோர் அரசியல் இயக்கம் அவசியம் என்று உணர்ந்தார். பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் 1981 செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் இரவில் காத்தான்குடியில் வைத்து அவரது உள்ளக்கிடக்கையில் குமுறிக் கிடந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒரு இயக்கத்தை பிரசவித்தார். அதனை 1988 பெப்ரவரி 11 இல் ஓர் அரசியல் கட்சியாக பதிந்தெடுத்தார்.
1988 இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக வடக்கு கிழக்கில் 17 ஆசனங்களையும் தென்னிலங்கையில் 12 ஆசனங்களையும் சேர்த்து மொத்தமாக 29 மாகாண சபை உறுப்பினர்களையும் இக்கட்சி பெற்றது. அதைத் தொடர்ந்து 1989 இல் ஒன்பதாவது பொதுத்தேர்தலில் தலைவர் அஷ்ரப் அவர்களின் சிறந்த அரசியல் வியூகத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டது. தொடர்ந்து வந்த 10 ஆம், 11 ஆம் பொதுத் தேர்தல்களில் அவரது கூட்டுச்சேரல் வியூகத்தினால் இக்கட்சி முறையே 7, 11 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியது. அவர் விட்டுச்சென்ற அந்த சிறந்த வியூகமே 12வது பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 12 ஆசனங்களைப் பெற்று வரலாறு படைக்க வழிசமைத்தது.
1994 இல் பத்தாவது பாராளுமன்றத்தில் கப்பல்துறை துறைமுகங்கள் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக பதவி வகித்த அஷ்ரப் பல அபிவிருத்தி திட்டங்களைத் தீட்டி செயற்பட்டு அதில் பூரண வெற்றி கண்டார். இவ்வாறான மிகுந்த வேலைப்பளுவுக்கு மத்தியிலும் சட்டத்துறை முதுமாணிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்ததுடன் ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் பரிணமித்தார்.
தனக்கு கிடைத்த அமைச்சர் பதவி மூலம் இன, மத பேதங்களைக் கடந்து பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கினார். துரித பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டார். ஏழைகளுக்காக எழுச்சிக் கிராமங்களை உருவாக்கினார். பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுகளை வழங்கினார். முஸ்லிம் சமூகத்துக்கென்று தென்கிழக்கில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்.
அரசியலில் மட்டுமல்ல சட்டத்துறையில் மாத்திரமல்ல தமிழ் இலக்கியப்பரப்பிலும் அவர் தடம் பதித்தார். இவரின் படைப்பாற்றலைக் கண்டு புகழ் பூத்த தென் இந்திய கவிஞர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் 1997.06.19 இல் அஷ்ரப் அவர்களுக்கு ‘கவிஞர் திலகம்’ என பட்டம் சூட்டி பரவசப்படுத்தினார். தான் எழுதிய அனைத்து கவிதைகளையும் ஒன்று சேர்த்து “நான் எனும் நீ ” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டு செம்மொழியாம் தமிழ் மொழி மீது தனக்க்கிருந்த அளவுகடந்த காதலை வெளிக்காட்டினார்.
தனது அரசியல் வாழ்வின் அடுத்த பாய்ச்சலாக, இலங்கை வாழ் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக் கொண்டு செயலாற்ற சமாதானத்தின் சின்னமான புறாவை இலச்சினையாக கொண்டு தேசிய ஐக்கிய முன்னணி என்ற ஒரு அரசியல் கட்சியை ஸ்தாபித்தார். அதன் மூலம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை வளர்க்க பாடுபட்டார். அதற்கான வியூகத்தையும் அமைத்து செயற்பட்டார். ஆனால் இறைவனின் திட்டம் வேறு விதமாக இருந்தது. 2000.09.16 இல் நடந்த ஹெலி விபத்தின் ஊடாக இறைவன் அவரை தன்பக்கம் அழைத்துக் கொண்டான்.
எப்போதும் தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் எதையும் சேமித்துவைக்காத அஷ்ரப் தான் உருவாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும், தேசிய ஐக்கிய முன்னணியையும், அதன் போராளிகளையும் தன் உயிர் என நேசித்தார். தனது அரசியல் இயக்கங்களுக்காகவும் தான் சார்ந்த சமூகத்திற்காகவும் சதா இறைவனைப் பிரார்த்தித்த அஷ்ரப் தனது நீடித்த ஆயுளுக்காக இறைவனை பிராத்திக்கவில்லை போலும்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அவரது இடைவெளி இன்னும் நிரப்பப்படாத வெற்றிடமாக நீண்டுகொண்டே செல்கின்றது. அல்லாஹ் அன்னாரின் பணிகளைப் பொருந்திக் கொண்டு மேலான சுவனத்தை அருள்வானாக.- Vidivelli