பயில் நிலை பிக்குகள் மூவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் : கல்முனை விகாராதிபதி கைது நாளை வரை விளக்கமறியலில்
(எம்.எப்.எம்.பஸீர்)
பெளத்த விகாரையில் வைத்து பயில் நிலை பிக்குகள் மூவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் (13) அவரை விஷேட பொலிஸ் குழு கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இந் நிலையில் கைது செய்யப்பட்ட அவரை உடனடியாக கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்ததாகவும் அதன் போது, தேரரை நாளை 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் உறுதி செய்தது.
கல்முனை விகாரையில் புதிதாக இணைந்த 3 பயில் நிலை பிக்குகள் திடீர் சுகயீனம் காரணமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) இறுதியில் அவர்களின் பெற்றோரினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது வைத்தியசாலையில் உள்ள பிக்குகளுக்கான தனியான சிகிச்சை பிரிவிற்கு இம்மூன்று பயில் நிலை பிக்குகளும் வைத்திய பரிசோதனைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பயில் நிலை பிக்குகளும் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை தேரரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மூவரிம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பது சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கை ஊடாகவும் உறுதிப்படுத்தப்பட்டு அந்த விடயம் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் கடந்த முதலாம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த சம்பவ விசாரணை அறிக்கை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பிரகாரம் கடந்த 05 ஆம் திகதி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பட்டு 06 ஆம் திகதி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தேரரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர்.
பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சகோதரர்களான 08,13,14 வயதுகளை உடைய பயில் நிலை பிக்குகளும் ஏற்கனவே அம்பாறை புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என கூறப்படுகிறது. – Vidivelli