கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா
பல மாதங்களுக்கு முன்னர் இப்பத்திரிகையில் வௌிவந்த ஒரு கட்டுரையில் முஸ்லிம் சமூகத்திலுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளைப்பற்றியும் அதற்கான தீர்வுகளைப்பற்றியும் ஆராய்வதற்குத் தேவையான விபரத்திரட்டு இல்லாமையைப்பற்றிச் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பாக மீண்டும் வலியுறுத்தவேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை சிறியதெனினும் அது அலசும் பொருள் பெரியதும் காலத்தின் தேவையுமாகும்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைப்பற்றிப் பல கோணங்களிலிருந்தும் ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. பொதுத்துறையின் செலவுகளைச் சிக்கனப்படுத்துவது, இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பது, வரிகளை உயர்த்துவது, அத்தியாவசியப் பொருள்களுக்கு உச்ச வரம்பு விலைகளை நிர்ணயிப்பது, நட்டத்தில் இயங்கும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களைச் சீரமைப்பது என்றவாறு பல ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த ஆலோசனைகளை உள்ளடக்கியே சர்வதேச நாணய நிதியும் அரசாங்கத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் முடிவாக 2.9 பில்லியன் டொலர்கள் கடனாக அதுவும் பல நிபந்தனைகளின் மத்தியில் அந்த நிதியினால் வழங்கப்பட்டுள்ளது. இது யானைப் பசிக்குச் சோளப்பொரி போட்டமாதிரி இருக்கிறது. அதைப்பற்றி இன்னொரு கட்டுரையில் விபரிப்போம்.
அந்தப் பேச்சுவார்த்தைகளுள் அடக்கப்பட்டுள்ள வரவேற்கத்தக்க ஒரு விடயம் இந்த மாற்றங்களால் பாதிக்கப்படப்போகும் ஏழைகளுக்கு அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டிலும் அதற்குக்கீழும் வாழும் வர்க்கத்தினருக்கு நேரடி நிவாரணம் வழங்குதலாகும். ஏனெனில் நாணய நிதியின் சிபாரிசுகள் ஏற்கப்பட்டு அவை அமுலுக்கு வந்தால் விலைவாசிகள் விஷம்போல் ஏறும். ஏற்கனவே ஒரு வேளை உணவுடன் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்கள் அதுவும் கிடைக்காத ஒரு நிலைக்குத் தள்ளப்படுவர். ஏற்கனவே ஐந்தரை மில்லியன் இலங்கை மக்கள் மனிதாபிமான உதவிகளுக்குத் தகுதியுடையோரென ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளால் அவர்களது நிலை தொடர்ந்தும் சரிவடையுமெனின் அது பொது மக்களிடையே அரசுக்கெதிரான கொந்தளிப்பை உண்டுபண்ணி அரசியல் அமைதியையும் சீர்குலைக்கும். அதனை உணர்ந்தே ஜனாதிபதியும் பாதுகாப்புத் துறையினருக்குப் பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அனுமதி வழங்கியுள்ளார்.
அது ஒரு புறமிருக்க, வறுமையில் வாழும் மக்கள் யார், அவர்களுக்கு எவ்வாறான நிவாரணத்தை வழங்குவது, அதை எவ்வாறு வழங்குவது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் தௌிவாக்கப்படவில்லை. எவ்வளவு நிவாரணத்தை வழங்குவது என்பதைத் தீர்மானிப்பது இலகு. ஆனால் அதை யாருக்கு எவ்வாறு வழங்குவது என்பதைத் தீர்மானிப்பதிலேதான் பிரச்சினைகள் உண்டு.
முதலாவதாக, எத்தனை பேர் எங்கெங்கே வறுமைக்கோட்டில் வாழ்கின்றார்கள் என்ற விபரங்களைச் சேகரிக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அந்த விபரங்கள் அதனுடன் உண்டா என்பது முதலாவது கேள்வி. பொதுவாகவே அரசாங்கத்திடமுள்ள விபரங்கள் நம்பத்தகுந்தனவாக இல்லை. அதற்குக் காரணம் அவற்றைத்திரட்ட வேண்டிய திணைக்களம் திறமையுடன் இயங்காமையே. இதனால் அரசாங்கம் வௌியிடும் புள்ளி விபரங்கள் எல்லாமே நம்பத்தகுந்தனவாக இல்லை என்பது சர்வதேச வட்டாரங்களுக்கும் தெரியும். அரசியல் இலாபம் கருதி சில விபரங்களை வௌியிடாமலும் சில விபரங்களை மாற்றியும் வௌியிடுவதாக அவதானிகள் குறை கூறுகின்றனர். அவ்வாறு வௌிவரும் மக்கள் நிலைபற்றிய விபரங்களுள் இனவாரியான தகவல்களையும் காண முடியாது. சனத்தொகை வளர்ச்சிபற்றிய விபரங்கள் மட்டுமே இனவாரியாகத் திரட்டப்படுகின்றன. இந்த நிலையில் எத்தனை முஸ்லிம்கள் வறுமைக் கோட்டில் வாழ்கின்றார்கள் என்ற விபரத்தை அரசாங்க ஏடுகளிலே காணமுடியாது. எனவேதான் அந்தப் பொறுப்பை முஸ்லிம் இயக்கங்கள் பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்த வேண்டியுள்ளது.
கடந்த சுமரர் 30 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் நலனுக்காகவும் போராடுவோம் என்று கூறிக்கொண்டு அரசியல் கட்சியொன்று முஸ்லிம்களுக்குள்ளே உருவாகி அது பின்னர் இரண்டாகப் பிரிந்து மேலும் மூன்றாகப் பிரியக்கூடிய சாயல்களும் இப்போது தென்படுகின்றன. இந்தக் கட்சிகளெல்லாம் இதுவரை முஸ்லிம்களுக்காகச் சாதித்தவை என்ன என்ற பட்டியலை யாராவது வௌியிட முடியுமா? எதையும் சாதிக்காவிட்டாலும் முஸ்லிம்களின் வாழ்க்கை நிலைபற்றிய விபரங்களையாவது திரட்டியிருக்கலாம் அல்லவா? அந்த விபரங்களில் ஒன்றுதான் வறுமைக்கோட்டில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அவர்கள் எங்கெங்கே வாழ்கின்றார்கள் என்ற விபரமும். அந்த விபரம் இல்லாததால் ஏற்படும் பிரச்சினை என்ன?
இன்றைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண சர்வதேச நாணய நிதியுடன் நடைபெறும் பேச்சுவர்த்தைகளில் மிகக்குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு நேரடியான சலுகைகள் வழங்கப்படல்வேண்டும் என்ற ஓர் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப அரசாங்கமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் அவ்வாறான சில நிவாரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுவிட்டதன்பின் அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது அடுத்த பிரச்சினை. இலங்கையின் நிர்வாக ஊழல்கள் உலகறிந்த ஒரு விடயம். நட்பு நாடுகளிலிருந்தும் சர்வதேச நிறுவனங்களிலிருந்தும் நன்கொடையாக நிதி உதவிகள் கிடைக்கும்போதுகூட அவை குறிப்பிட்ட சமூகத்துக்குச் சேராமல் இடையிலே உள்ள நிர்வாகிகளாலும் தரகர்களாலும் சூறையாடப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ. இவ்வாறான ஊழல் மலிந்த நிர்வாகமே இந்த நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்கு ஒரு முக்கிய காரணம் என்பது உலகறிந்த உண்மை. இதனாலேதான் அண்மையில் உலக வங்கி விவசாயிகளுக்குப் பசளையும் எரிபொருளும் வழங்கும் விடயத்தில் அதன் விநியோகம் ஏழை விவசாயிகளுக்குச் சென்று சேரும் வண்ணம் கண்காணிப்புச் செய்ய அதுவே முன்வந்துள்ளது.
இந்த நிலையில் முஸ்லிம் பொது ஸ்தாபனங்களோ இருக்கின்ற அரசியல் கட்சிகளோ தமது சமூகத்தைப்பற்றிய விபரங்களைத் திரட்டிவைத்திருந்தால் அவற்றை உரிய அமைப்புகளுடன் சமர்ப்பித்து குறிக்கப்பட்ட மக்களுக்குக் குறிக்கப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றனவா என்று கண்காணிக்க முடியுமல்லவா? எனவே நமக்கென நாமே சில விபரங்களைச் சேகரிக்க வேண்டியது அவசியமாகின்றது. அவற்றைச் சேகரிப்பது எப்படி?
பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவ மாணவிகள் தமது விரிவுரையாளர்களின் வழிப்படுத்தலின்கீழ் இவ்விபரங்களைச் சேகரிப்பதற்கு மிகவும் பயன்படலாம். அதனை அவர்களின் கற்கைநெறிகளுள் ஒரு பகுதியாகவும் மேற்கொள்ளப்படுதல் இன்னும் சிறந்தது. பல்கலைக்கழகங்களுக்கு வௌியே அமைந்துள்ள முஸ்லிம் பொது ஸ்தாபனங்களும் அவற்றின் பொதுப்பணிகளுள் ஒன்றாக இதனையும் மேற்கொள்ளலாம். அதற்குரிய செலவுகளை முஸ்லிம் தனவந்தர்கள் பொறுப்பேற்க வேண்டும். இன்றைய நிலையில் இது முஸ்லிம் சமூகத்தின் ஒரு கட்டாய தேவையாகின்றது. புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகத்துக்கும் இந்தத் தகவல்கள் தேவைப்படுகின்றன.
இனவாத அரசியல் தலைவிரித்தாடுகின்ற இலங்கையில் அரசாங்கமும் அந்தச் சக்திகளாலேயே இயக்கப்படுவதால் எல்லா இனங்களும் சமமாகக்கவனிக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது. அமைச்சர்கள் தொடக்கம் நீதி அரசர்கள் ஊடாக அலுவலகக் குமாஸ்தாக்கள்வரை சம்பளத்தைவிட கிம்பளத்திலேதான் செல்வம் திரட்டுகிறார்கள்.
இந்த நிலையிலேதான் அதன் பாதகங்களை உணர்ந்த சிங்கள பௌத்த இளம் சந்ததியொன்று இந்த அமைப்பையே மாற்றவேண்டும் என்ற கோரிக்கையுடன் அறப்போராட்டத்தில் குதித்துள்ளதை உலகமே அறிந்துள்ளது. அந்தப்போராட்ட இளவல்களை இன்றைய ஜனாதிபதி சிறையில் அடைக்க முன்வந்துள்ளதையும் மனித உரிமை ஸ்தாபனங்கள் கண்டிக்கின்றன. ஜனாதிபதியின் இந்த மூர்க்கத்தனமான செயலை முஸ்லிம்கள் கண்டிக்க வேண்டும். ஏனெனில், அந்த இளவல்களின் போராட்டமும் கோரிக்கையும் வெற்றியடைந்து உண்மையான ஜனநாயக அரசியல் இந்த நாட்டில் மலருமானால் தகவல் திரட்டும் வேலையை முஸ்லிம்கள் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே முஸ்லிம்கள் இரண்டில் ஒன்றைச் செய்வது கட்டாயம். ஒன்றில் தாமாகவே விபரங்களைத் திரட்ட வேண்டும் அல்லது இளவல்களின் போராட்டத்துக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். முஸ்லிம் புத்திஜீவிகளே! இதனை உணர்ந்து மக்களை வழிநடத்துங்கள்.– Vidivelli