எஸ்.என்.எம்.சுஹைல்
சந்திரிக்கா அரசாங்கத்தில் கம்பீரமாக இருந்தவர்தான் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். இதன்போது, அவருக்கு எதிராக ரணில் தலைமையிலான ஐ. தே. க நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அவமானப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் மனம்புண்பட்டவராக உணர்ச்சிவசப்பட்ட ஒரு சூழ்நிலையில் அஷ்ரப் ‘ரணில் சாரதியாக இருக்கும்வரை ஐ. தே. க. என்ற வாகனத்தில் ஏறமாட்டேன்’ என்று கூறியிருந்தார்.
எனினும் அதே முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 2000 ஆண்டுக்கு பின்னர் ரணில் சாரதியாக இருந்த ஐ.தே.க. என்ற வாகனத்தில் ஏறி பல முறை பயணித்தமையெல்லாம் எல்லோரும் அறிந்த விடயம்தான். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்த கட்சிகள்தான் தேசிய காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும். இதுபோக, ஐக்கிய சமாதான கூட்டமைப்பும்கூட மு.கா.விலிருந்து பிரிந்தவர்களது கட்சியே. அஷ்ரப் உருவாக்கிய நுஆ கட்சியை தற்போது வைத்திருப்பவர் அசாத் சாலி. அந்த கட்சியும் அஷ்ரபின் கட்சிதான்.
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நுஆ என்பன பல தடவை ரணிலின் வாகனத்தில் ஏறியிறங்கிருக்கின்றன. அதாவுல்லாஹ் முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்றபோது, 2001 ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்தில் ஐ.தே.க. எனும் வாகனத்தில் ஏறி பயணித்தவர்தான். என்றாலும், ரணிலின் வாகனத்திலிருந்து 2004 ஆம் ஆண்டு முதலாவதாக இறங்கியவரும் அதாவுல்லாஹ்தான்.
பின்னர் சந்திரிக்காவுடன் பயணத்தை ஆரம்பித்த அதா, ராஜபக்சாக்களின் வாகனத்தில் தொடர்ச்சியாக தனக்கான இருக்கையை முன்பதிவுசெய்துகொண்டே அரசியல் பயணத்தை மேற்கொண்டார். தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்த பின்னர் அதாவுல்லாஹ் ரணிலின் வாகனத்தில் ஏறவில்லை.
இந்த சந்தர்ப்பத்திலெல்லாம், ‘ரணில் சாரதியாக இருக்கும்வரை ஐ. தே. க. என்ற வாகனத்தில் ஏறமாட்டேன்’ என மறைந்த தலைவர் அஷ்ரப் சொன்னார், நானும் ரணிலின் வாகனத்தில் ஏறமாட்டேன் என்ற பிரசாரத்தை தீவிரப்படுத்திக்கொண்டார்.
ராஜபக்சாக்களுக்கு 2015 இல் ஒரு சரிவு ஏற்படுகின்றது. அவ்வாண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தனது ஆசனத்தையும் இழந்தார் அதாவுல்லாஹ். பின்னர் பொதுஜன பெரமுன என்ற கட்சி நாட்டில் காலூன்றிய 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலின்போது அதாவுல்லாஹ் தனது சொந்த கட்சியான தேசிய காங்கிரஸை முதன் முறையாக தேர்தல் களத்தில் குதிரை சின்னத்தில் களமிறக்கினார். ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுனவின் தாமரைமொட்டு சின்னத்திற்கு நாடுமுழுவதும் எப்படி பெரும் ஆதரவு கிட்டியதோ அதே போன்று அதாவுல்லாஹ்வின் கோட்டையான அக்கரைப்பற்றில் இரு உள்ளூராட்சி சபைகளிலும் அத்தனை வட்டாரங்களிலும் வெற்றிபெற்று தனது மீள் வருகைக்கான கதவை திறந்துகொள்கிறார். இதன்போது, மாவட்டத்தின் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களிலும் ஓரளவு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டார்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஆதரவாக பிரசாரம் செய்தவர் அதாவுல்லாஹ். எனினும், பொதுத் தேர்தலின்போது தனது கட்சியான தேசிய காங்கிரஸின் குதிரை சின்னத்தில் தனித்து போட்டியிட்டு திகாமடுல்ல மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்று பாராளுமன்றத்திற்கு மீள் பிரவேசமானார். இருந்தாலும் கடந்த மார்ச் மாதமளவில் கோத்தாவின் அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பித்தது. விமல் வீரவங்ச, கம்மன்பில போன்ற இனவாத, கடும்போக்குவாதிகளின் தலைமையில் 11 அரசியல் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக இயங்க முடிவு செய்தன. இந்த கூட்டணியில் அதாவுல்லாவும் இருந்தார். எதிர்க்கட்சியில் முதன்முறையாக அவர் அமர்ந்தார்.
மக்கள் புரட்சியையடுத்து நாட்டைவிட்டு தப்பியோடிய கோத்தாபய ராஜபக்ச கடந்த ஜூன் 14ஆம் திகதி ஜனாதிபதி பதவியிருந்து விலகினார். இந்நிலையில் எஞ்சிய ஜனாதிபதி பதவிக் காலத்துக்காக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால தெரிவின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தார் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ்.
கடந்த ஜூன் 9 வரை ரணில் சாரதியாக இருந்த வாகனத்தில் ஏறாத கட்சியாக தேசிய காங்கிரஸ் இருந்துவந்தது. என்றாலும், ரணில் ஜனாதிபதியான பின்னர் ரணிலுக்கு ஆதரவளித்த தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ரணிலின் வாகனத்தில் முதல் ஆளாய் ஏறி ஜன்னலோர இருக்கையென்றை தனதாக்கிக் கொண்டார்.
இந்நிலையில், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் கடந்த சில தினங்களாக ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதல் சுற்றுக் கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன் இரண்டாவது கலந்துரையாடல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இடம்பெற்றது.
மூன்றாவது கலந்துரையாடல் தேசிய காங்கிரஸுடன் இடம்பெற்றதோடு, அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவுகோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய காங்கிரஸ் தலைவருக்கும் உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் தேசிய சர்வகட்சி முன்னெடுப்பு அழைப்பிற்கான பதிலை கடிதம் முலம் ஜனாதிபதியிடம் இதன்போது கையளித்த தேசிய காங்கிரஸ் தலைவர், நாட்டில் தற்போது நிலவும் சமூக பொருளாதார நெருக்கடி நிலைமைகளை தீர்ப்பதற்கான சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து ஒத்துழைப்பு வழங்குதற்கு ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார். இச் சந்திப்பின்போது தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா, அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ. உதுமாலெப்பையும் கலந்து கொண்டிருந்தனர்.
நாடு எதிர் கொள்கின்ற சமகாலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு சகல இனங்களுக்குமான சமூக பொருளாதார அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசியலமைப்பினை பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டிய தருணம் இது என்பதன் அவசியத்தை தேசியகாங்கிரஸ் இச்சந்திப்பின் போது வலியுறுத்தியது.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மு.கா.
இதனிடையே, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியில் அனைத்துத் தரப்பினரோடும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றது. அத்துடன் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கடிதத்துக்கு சாதகமான பதிலை அனுப்புவதற்கு எதிர்பார்க்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து தரப்பினரதும் யோசனைகளை பெற்றுத் தருமாறு இப்போதும் அவர் கடிதம் மூலம் எமக்குத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது ஆலோசனைகளுடன் மேலும் சில விடயங்களை உள்ளடக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் நாம் எமது யோசனைகளை அவருக்குத் தெரிவிக்கவுள்ளோம்.
அதன் பின்னர் எதிர்க்கட்சியில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான உரிய செயற்பாடுகளை நாம் மேற்கொள்வோம்.
நாம் கட்சி ரீதியாக ஜனாதிபதியின் கடிதத்திற்குப் பதில் வழங்கத் தயாராக வுள்ளோம். அதன் பின்னர் எதிர்க்கட்சியில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு ர்த்தை நடத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு தீர்வு பெற்றுக் கொள்வதில் ஒத்துழைப்பு வழங்குவோம்.
அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும். அதேவேளை எமது கட்சியின் ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுவதற்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு சாதகமான பதிலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கியுள்ளதாக, கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.
ஆக, சர்வகட்சி அரசாங்கத்தில் பாராளுமன்றில் அங்கம்வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி என்பனவும் இடம்பெறலாம் என இப்போதைக்கு எதிர்பார்க்கலாம்.-Vidivelli