றிப்தி அலி
வழக்கமாக ஜனாதிபதித் தேர்தல் வேறாகவும் பாராளுமன்றத் தேர்தல் வேறாகவும் நடப்பது வழக்கம். இவ்விரு தேர்தல்களுக்குமான வாக்கெடுப்புகள் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெறும். ஆனால் இம்முறைதான் முதல் தடவையாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கமைய, நேற்று நடந்த வாக்கெடுப்பில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைத்தள்ளன.
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக நடைபெற்ற இத்தேர்தலை முழு உலகமும் அவதானித்துக் கொண்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா விடுதலைப் புலிகளினால் 1993 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்றத்தின் ஊடாக டி.பி. விஜயதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். குறித்த தேர்தலில் ஒருவர் மாத்திரம் போட்டியிட்டமையினால் வாக்களிப்பின்றி அவர் தெரிவு செய்யப்பட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பதவியில் இருந்த ஜனாதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறி, பதவி விலகியதும் தற்போது நடந்ததுதான் முதல் முறை.
நாட்டில் போராட்டங்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 14 ஆம் திகதி தனது இராஜினாமாக் கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டப்படி, பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, கடந்த 15 ஆம் திததி, பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.
இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். இந்தப் போட்டியில் வென்று, புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் என முக்கிய கட்சிகள் டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவை வழங்கியிருந்தன.
ஆனால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவரும் இத்தேர்தலில் பங்கேற்கவில்லை. இதேவேளை செலுத்தப்பட்ட வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டீ. வீரசிங்க ஆகியோர் வைத்தியசாலையில் இருந்து இந்த வாக்களிப்பிற்காக அழைத்து வரப்பட்டனர்.
கடும் நிபந்தனைகளுடனேயே இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வாக்களிப்பு பிரதேசத்தில் கையடக்க தொலைபேசிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனை மீறி கையடக்க தொலைபேசியினை கொண்டு வந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்றத்தில் உறுப்பினர் கபில அதுகோரளவின் கையடக்க தொலைபேசி பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஏ.எல்.எம். அதாஉல்லா, சி.வீ. விக்னேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி, ஹாபிஸ் நசீர் அஹமட், முஷாரப் முதுநபீன், அலி சப்ரி றஹீம் ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், விமல் வீரவன்ச தலைமையிலான சுயாதீன குழு, தமிழ் முற்போக்கு முன்னணி போன்ற கட்சிகள் டலஸ் அழகபெருமவிற்கு வாக்களிப்பதாக முன்னர் அறிவித்திருந்தன.
இதற்கமைய சுமார் 100க்கு மேற்பட்ட வாக்குகள் டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவாக கிடைத்திருக்க வேண்டும். எனினும் 82 வாக்குகள் மாத்திரம் கிடைக்கப் பெற்றன.
இதனிடையே ரணில் விக்கரமசிங்கவினை உடனடியாக பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். அவர் இராஜினாமா செய்யும் வரை எமது போராட்டம் தொடரும். பாரிய மக்கள் ஆதரவுடன் வந்த கோட்டாபய ராஜபக்ஷவினை வீட்டுக்கு அனுப்பிய எமக்கு ரணில் விக்ரமசிங்கவினை வீட்டுக்கு அனுப்புவது பெரிய விடயமல்ல என்றும் அவர்கள் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள ஒரே எம்.பி. அவர் மட்டுமே. ஒரே எம்.பி.யாக உள்ளவர் தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்று தற்போது ஜனாதிபதி ஆகியிருக்கிறார்.
ரணில் ஜனாதிபதியானமையை அடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, அவரின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தமக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு சபையிலுள்ள அனைவரிடமும் கோரிக்கை விடுத்தார். தமிழ் கட்சிகளையும் தம்முடன் கைகோர்த்து, நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், தனது பதவிப் பிரமாண நிகழ்வை, நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு தனக்கு அனுமதியை வழங்குமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக பரிமாணம் பெற்றுள்ள இந்த ரணில் விக்ரமசிங்க யார்?
எஸ்மண்ட் விக்கிரமசிங்க மற்றும் நளினி விக்ரமசிங்க ஆகியோருக்கு 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க மகனாக பிறந்தார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வியை தொடர்ந்த ரணில் விக்ரமசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை தொடர்ந்தார்.
தொழில் ரீதியாக வழக்குரைஞராக செயற்பட்ட அவர், பின்னர் அரசியலில் நுழைந்தார்.
கம்பஹா மாவட்டத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி பிரதான அமைப்பாளராக 1970ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டு, பின்னர் பியகம தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பியகம தொகுதியிலிருந்து நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ரணில் விக்ரமசிங்க, ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கத்தில் இளம் அமைச்சராக பதவி வகித்தார்.
இளையோர் விவகாரம் மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சர் பதவியே, ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்த முதலாவது அமைச்சு பொறுப்பாகும்.
இவ்வாறு தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிர்க்க முடியாத ஒரு தலைமைத்துவத்தை நோக்கி நகரத் தொடங்கினார்.
இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, 1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இதையடுத்து, இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்ட நிலையில், அந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். ரணில் விக்ரமசிங்க 1993ம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2001ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப்பட்டார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ரணில் – மைத்திரி கூட்டணி வெற்றியீட்டியதை அடுத்து, மூன்றாவது தடவையாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, நான்காவது தடவையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
நல்லாட்சி காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழுப்பகர நிலைமையினால், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.
எனினும், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியதை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகிய ரணில் விக்ரமசிங்க, இந்த ஆட்சியின் கீழ் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பாரிய வீழ்ச்சியுடன் தோல்வியை சந்தித்தார்.
எனினும், தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனத்தை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, மீண்டும் நாடாளுமன்ற பிரவேசத்தை ரணில் விக்ரமசிங்க பெற்றார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வந்த பின்னணியில், ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை மற்றும் சர்வதேச விவகார ஆளுமை ஆகியவற்றினால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திறன் அவருக்கு உள்ளதாக பெரும்பாலானோர் கூறியிருந்தனர்.
இவ்வாறான நிலையிலேயே, ரணில் விக்கிரமசிங்க 6ஆவது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்னர் சில வாரங்களில் பதில் ஜனாதிபதியாகவும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8 ஆவது ஜனாதிபதியாகவும் ரணில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.–Vidivelli