நாட்டு மக்களின் ஏகோபித்த எதிர்ப்பையடுத்து கோத்தாபய ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து, அவ்வெற்றிடத்தை நிரப்புவதற்காக நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அவர் 134 வாக்குகளைப் பெற்ற அதேவேளை அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.
இதற்கமைய இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், நாடு எதிர்கொண்டுள்ள இன்றைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார். தனது அரசாங்கத்தில் அவர் யாரைப் பிரதமராக நியமிக்கப் போகிறார், சகல கட்சிகளையும் உள்வாங்கியதாக அவரது ஆட்சிய அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதனிடையே, கோத்தா வேண்டாம் என கடந்த 100 நாட்களுக்கு மேலாக காலி முகத்திடலில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ள போராட்டக்காரர்கள் தற்போது ரணில் விக்ரமசிங்கவையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளனர். ரணில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்ட போராட்டக்காரர்கள், அவரையும் பதவி விலகுமாறு கோரியுள்ளதுடன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
எது எப்படியிருப்பினும் நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மை அவசியமாகிறது என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு நிலையான ஜனாதிபதி ஒருவரும் ஸ்திரமான அமைச்சரவை ஒன்றும் அவசியம்.
ரணில் விக்ரமசிங்க ராஜபக்சாக்களின் நண்பர் என்பது பரம ரகசியம். அவர் நிச்சயமாக ராஜபக்சாக்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதுமில்லை. அவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஆனால் அவர் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான சில முயற்சிகளை அவரது அனுபவத்தின் ஊடாகவும் சர்வதேச தொடர்புகளினூடாகவும் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் அதற்கான முயற்சிகளை ஏலவே ஆரம்பித்துமுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்குமானால் அடுத்த ஆறு மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிகள் சங்கமும் ஸ்திரமான அரசாங்கத்தினால் மாத்திரமே பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வர முடியும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பேச்சுவார்த்தைகளை விரைவில் நிறைவு செய்ய முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்று தெரிவித்திருக்கிறார். இந் நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கவும் அதன் உதவிகளை விரைவாகப் பெற்றுக் கொள்ளவும் அரசியல் ஸ்திரத்தன்மை அவசியமாகும்.
அந்த வகையில், தற்போது இருக்கின்ற தெரிவுகளை வைத்துக் கொண்டே நாம் அடுத்து வரும் நாட்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. போராட்டக்காரர்களின் கோரிக்கை நியாயம் என்ற போதிலும் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது இப்போதைக்கு பொருத்தமானதும் சாத்தியமானதுமான ஒன்றல்ல. பாராளுமன்றத்திற்கு நாம் வாக்களித்து அனுப்பி வைத்த பிரதிநிதிகளில் பெரும்பான்மையானோரின் தெரிவாக அவர் இருக்கிறார். அவரது நியமனம் சட்ட ரீதியானது. அவர் தேசியப் பட்டியல் ஊடாக சபைக்கு வந்த போதிலும், 134 எம்.பி.க்களின் வாக்குகளுடன் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார்.
எனவே அடுத்து வரும் தேர்தல்களில் மிகப் பொருத்தமான நபர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான போராட்டத்தையே இப்போது நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இன்னும் இரண்டு வருடங்களில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அதில் தகைமைமிக்க, ஊழலற்ற, நேர்மையான மக்கள் பிரதிநிதிகளை களமிறக்குவதற்கான தயார்படுத்தல்களையே நாம் இப்போது செய்ய வேண்டியுள்ளது. ஓரிரு ராஜபக்சாக்களை மாத்திரம் விரட்டியடித்ததுடன் இந்தப் போராட்டம் முற்றுப் பெற முடியாது. மாறாக எதிர்காலத்திலும் இவ்வாறான பல ராஜபக்சாக்கள் ஆட்சிக்கு வராதிருப்பதை உறுதிப்படுத்துவதும் நமது கடமையாகும்.
அந்த வகையில் தற்போதைய நாட்டின் நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு உடனடியாக ஸ்திரமானதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான அழுத்தங்களையே போராட்டக்காரர்கள் வழங்க வேண்டியுள்ளது. சஜித், அநுர உள்ளிட்ட சகல தரப்புகளையும் தன்னுடன் இணைந்து பணியாற்ற வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைத்திருக்கிறார். இந்த அழைப்பை சாதகமாகக் கொண்டு சகல கட்சிகளையும் சேர்ந்த பொருத்தமான நபர்களை அமைச்சரவைக்கு நியமிப்பதன் மூலமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியும். அதன் மூலமே இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்டெழ முடியும்.- Vidivelli