அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் (நளீமி)
நாடு மிகவும் நெருக்கடியான ஒரு கட்டத்தில் இருக்கும் நிலையில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட இருக்கின்றோம். அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பொதுவாக அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கடந்த வருடங்களில் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் கொவிட் நிலையினால் எமது பெருநாள் கொண்டாட்டங்களை நாம் சில வரையறைகளுக்கு அமைவாக அமைத்துக் கொண்டோம். அவ்வாறே இந்தப் பெருநாளும் ஒரு நெருக்கடி சூழ்நிலையில் கொண்டாடப்படவிருப்பதால் அவற்றுக்குரிய வரையறைகளை அறிந்து, பேணி நடப்பது சிறுபான்மை சமூகமாக வாழ்கின்ற எமது கடமையாகும்.
ஹஜ்ஜின் நோக்கத்தை அறிதல் :-
அல்லாஹ் கடமையாக்கிய எல்லா வணக்கங்களுக்கும் பிரதானமான இரண்டு நோக்கங்கள் உள்ளன:-
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுதல், தக்வாவை வளர்த்துக்கொள்ளல்
மனித சமூகத்தின் நலன்
பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் இவ்விரு இலக்குகளையும் காண முடியும். “ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும். எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான். மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் சிறந்தது (நன்மையானது) தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும். எனவே, நல்லறிவுடையோரே, எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.”
இவ்வசனத்தில் மேற்சொன்ன இரண்டு நோக்கங்களையும் அடையும் வகையில் ஹஜ் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஹஜ்ஜுக்கு செல்லாதவர்கள்
ஹஜ் காலத்தில் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் செய்வதற்குரிய நல்லமல்கள் இருப்பது போல ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் செய்வதற்குரிய நல்லமல்களும் உள்ளன.அவை வருமாறு:-
1. இபாதத்களில் ஈடுபடுவது
நோன்பு, திக்ர், ஸதகா போன்ற நற்கருமங்களில் அதிகமதிகம் ஈடுபடுவதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை இக்காலப்பகுதியில் நாம் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
இந்த நெருக்கடியிலிருந்து விடுதலை பெற அல்லாஹ்வின் பக்கம் மீள்வதும் அவனிடம் உதவி தேடுவதும் அவனை அதிகமதிகம் ஞாபகப்படுத்திக்கொள்வதும் அடிப்படையானதாகும்.
2. வீண் விரயத்தையும் ஆடம்பரங்களையும் தவிர்த்தல்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் பெருநாளைக் கொண்டாடும் நாம் அத்தியாவசிய விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, ஆடம்பரங்களைத் தவிர்ப்பது அவசியமானதாகும். ஹராமான விடயங்களுக்கு செலவு செய்வது பாவமாகும். அவ்வாறே ஹலாலான விடயங்களில் விரயம் செய்வதும் பாவமாகும்.
வீண்விரயம் செய்பவர்களை அல்குர்ஆன் ஷைத்தானின் சகோதரர்கள் என்று குறிப்பிடுகின்றது.
“நிச்சயமாக வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்”. (அல்அன்ஆம்: 27)
‘ஆடம்பரம்’ என்பது தேவையற்ற விடயங்களில் செலவு செய்வதையும் ‘விரயம்’ என்பது தேவையுள்ள விடயத்தில் தேவைக்கு அதிகமாகச் செலவு செய்வதையும் குறிக்கும். தேவைக்கு செலவு செய்யாமல் இருப்பது ‘கருமித்தனம்’ ஆகும்.
இஸ்லாம் எல்லா விடயங்களிலும் நடுநிலையைப் பேணும் மார்க்கம் என்ற வகையில் கருமித்தனத்தையும் ஆடம்பரத்தையும் தடுத்துள்ளது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
“உண்ணுங்கள், பருகுங்கள், தர்மம் செய்யுங்கள், அணியுங்கள். வீண்விரயமோ, அகம்பாவமோ கலக்காமல் இருக்கும் காலமெல்லாம் (நீங்கள் இவற்றில் ஈடுபடலாம்)” (நஸாஈ, இப்னு மாஜா)
வீண்விரயம், ஆடம்பரம் என்பதை ‘தனது பிற தேவைகளுக்கு மீதம் வைக்காமல் ஒரு விடயத்திற்கு செலவு செய்தல்’ என்றும் சில இஸ்லாமிய அறிஞர்கள் வரைவிலக்கணப்படுத்துகின்றனர். ஆடையணிவது, உணவு உண்பது, பயணங்கள் மேற்கொள்வது, கட்டடங்களை நிர்மாணிப்பது என்பன அடிப்படையில் மனித வாழ்வின் தேவைகளாகும். அவற்றில் ஈடுபடுவது மனித வாழ்வின் இயக்கத்துக்கு அவசியமாகும். அவை அல்லாஹ் அனுமதித்த, வாழ்வின் இன்ப நுகர்ச்சியும் அலங்காரமுமாகும். அவற்றை அனுபவிப்பதற்கு எவரும் தடையாக இருக்க முடியாது. அவ்வாறு தடை செய்வது குர்ஆனின் கண்ணோட்டத்தில் குற்றமுமாகும்.
“(நபியே) நீர் கேட்பீராக ‘அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அலங்காரத்தையும் உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?’ இன்னும் கூறும்; ‘அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டவையே. எனினும், மறுமையில் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும். இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.” (அல்அஃராப்:-32)
எனவே, அடிப்படையில் இவற்றை அனுபவிப்பதற்கான அனுமதியும் சுதந்திரமும் இஸ்லாத்தில் இருப்பினும் கூட பிறரது புகழையும் மெச்சுதலையும் எதிர்பார்த்து, ஆணவத்துடனும் மமதையோடும் நடந்துகொள்வதும் வீண்விரயம் செய்வதும் அல்லாஹ்வினதும் தூதர்(ஸல்) அவர்களதும் பார்வையில் கண்டிக்கத்தக்கதாகும்.
பெருநாள் என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால், நாட்டிலுள்ள பொருளாதார சூழலில் ஏனைய செலவினங்களையும் கருத்திற்கொண்டே பெருநாளைக்குரிய செலவுகளைச் செய்ய வேண்டும்.
3.தேவையுடையோருக்கு உதவுதல்
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு மக்கள் பெரும் அல்லல்படுகின்றனர்.விலைவாசி உயர்வு, தொழிலின்மை, அத்தியவசியப் பொருட்களின் தட்டுப்பாடு போன்ற காரணிகளால் எல்லா மட்டத்தினரும் ஏதோவொரு வகையில் தேவையுடையவர்களாக மாறிவிட்டார்கள். பெருநாள் கொண்டாட்டத்தின் போது இத்தகைய தேவையுடையவர்களின் தேவைகளை அறிந்து உதவுவதற்கு முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, பெருநாள் தினத்தைக் கொண்டாடுவதற்கு வசதியற்ற உறவினர்கள், அயலவர்கள் விடயத்தில் நாம் கரிசனை கொள்ள வேண்டும்.
4. அடுத்த சமூகத்தவர்களோடு பெருநாள் சந்தோசத்தை பரிமாறிக்கொள்ளல்.
நாம் பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டிலே வாழ்கின்றோம். எமது சனத்தொகையோடு ஒப்பிடுகின்ற போது சுமார் 90% மக்கள் முஸ்லிம் அல்லாதவர்கள். எமது மத மற்றும் கலாசார விடயங்கள் குறித்த தெளிவுகள் அவர்களிடம் இல்லாதிருக்கலாம். அல்லது தவறான கருத்துக்கள் அவர்கள் மத்தியிலே நிலவலாம். எனவே, எமது பெருநாள் சந்தோசத்தை அவர்களோடு பரிமாறிக்கொள்ளும் போது அவர்கள் எம்மைப் புரிந்துகொள்வதற்கான நல்ல சந்தர்ப்பமாக இது அமையலாம்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் – அன்றாட வாழ்வாதாரத்துக்கு மக்கள் போராடும் நிலையில், நாம் பெருநாளை சந்தோசமாகக் கொண்டாடும் சந்தர்ப்பத்தில், அடுத்த சமூகத்தில் யாராவது பசியோடும் தேவையோடும் இருப்பார்களாயின் அவர்களது தேவை அறிந்து எமது பெருநாள் உணவினை அல்லது தர்மங்களை அவர்களுக்கும் நாம் வழங்க வேண்டும்.
5. உழ்ஹிய்யா வணக்கம்
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திலும் 11,12,13 ஆகிய அய்யாமுத் தஷ்ரீக் தினங்களிலும் இஸ்லாம் வலியுறுத்திய மிக உன்னதமான சுன்னா உழ்ஹிய்யாவாகும்.
இதனைப் பற்றி அல்குர்ஆன்:-
“இத்தினங்களில் அல்லாஹ்வின் பெயர் கூறி, அல்லாஹ் உங்களுக்கு அருளிய பிராணிகளிலிருந்து அறுத்து அதிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், வறுமையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கும் கொடுத்து உதவுங்கள்”. (ஹஜ் : 28) எனக் குறிப்பிடுகின்றது,
குர்பானுக்காக அறுக்கப்படும் மிருகங்களது மாமிசம் பற்றி கூறும் அல்லாஹ் மேலும் ஓர் இடத்தில்:-
“அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்.(வறுமையில் இருந்தாலும்) சுயகெளரவத்தின் காரணமாக பிறரிடம் கையேந்தாமல் இருப்போருக்கும் கேட்டு வருபவர்களுக்கும் அதிலிருந்து உண்ணக் கொடுங்கள். இவ்வாறுதான் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை (அந்த மிருகங்களை) உங்களுக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்”(அல்ஹஜ்:36) எனக் கூறுகிறான்.
மேலும், அல்லாஹ் “இன்னும் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவர்களுடைய உரிமைகளைக் கொடுத்துவிடுங்கள். வீண்விரயம் செய்துவிடாதீர்கள்” (அல்அன்ஆம் : 26) எனக் கூறியுள்ளான்.
இவ்வசனத்திலே தேவையுடைய உறவுகளும் ஏழைகளுக்குமான எமது உதவியானது அவர்களுக்குரிய உரிமை (ஹக்) என்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு விரயம் செய்ய வேண்டாம் என்பதும் சேர்த்து கூறப்பட்டுள்ளது. எமது ஆடம்பரங்கள், விரயங்கள் என்பவை அவர்களது உரிமைகளை மீறும் செயலாக அமையும் என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
உழ்ஹிய்யாவின் போதான சட்ட ஒழுங்குகள்
உழ்ஹிய்யா விடயத்தில் சட்டம், ஒழுங்கு, பொதுச் சுகாதாரம் என்பவற்றை பேணுவதோடு, அடுத்த சமூகத்தவர்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும்.
உழ்ஹிய்யாவைப் பொறுத்தவரை அதற்காக நாம் மிருகங்களை ஓர் இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லும் போது அதற்கான அனுமதியை உரிய அரச அதிகாரிகளிடமிருந்து முறையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது விடயமாக அநீதிக்குள்ளாக்கப்பட்டால் உரியவர்களினூடாக அவற்றைத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம். அப்படியும் கூட அனுமதி மறுக்கப்படும் போது அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடுவதே தவிர வேறு வழிகளில் தீர்க்க முயற்சிக்கலாகாது.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மிருகங்களை வாகனங்களில் எடுத்துச் செல்ல ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது. இதன்மூலம் நாம் நாட்டின் சட்டத்தை மீறுபவர்களாவோம் என்பதற்கும் அப்பால் ஜீவகாருண்யம் பற்றிய இஸ்லாமிய ஒழுங்கு விதிகளை மீறியவர்களாகக் கருதப்பட்டு அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.
மிருகங்களை வாகனத்தில் கொண்டு செல்லும்போது மட்டுமன்றி, பாதையில் ஓட்டிச் செல்லும்போதும் – குறிப்பாக பிற சமயத்தவர்கள் வாழும் பிரதேசங்களுக்குள்ளால் ஓட்டிச் செல்லும்போது அதிகமாக எச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியமாகும். அவர்கள் அவதானித்தாலும் இல்லாவிட்டாலும் அல்லாஹ் எம்மை அவதானிப்பதால், அவனது படைப்பினங்களை துன்புறுத்தியவர்களாக நாம் மாறிவிடலாகாது.
அகீகா, நேர்ச்சை, உழ்ஹிய்யா போன்ற நோக்கங்களுக்காக இருந்தாலும் – ஏன் சாதாரணமாக இறைச்சிக்காகவேனும் நாம் மிருகங்களை அறுக்க நேரிட்டால் – அறுக்கும் நேரம், அறுக்கும் இடம் என்பவற்றையும் முன்கூட்டியே நன்றாக சிந்தித்துத் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், பக்கத்து வீட்டில் இருப்பவர் வேற்று மதத்தவராக இருக்கலாம். மிருகங்கள் அறுக்கப்படும் காட்சியையோ அல்லது அறுக்கப்பட்ட பின்னர் அவை தோலுரிக்கப்படும் அல்லது இறைச்சியாக்கப்படும் காட்சியையோ, பாதைகளில் பகிரங்கமாக இரத்தம் சொட்டச் சொட்ட வாகனங்களில் ஏற்றப்படும் அல்லது கொண்டு செல்லப்படும் காட்சியையோ அவர்கள் காண விரும்பமாட்டார்கள். எனவே, முடிந்தவரை மறைவாகவும் கண்ணியமாகவும் இவற்றைச் செய்வதற்கு அதிக கவனமெடுக்க வேண்டும்.
உழ்ஹிய்யாவைப் பொறுத்தவரை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டிய வேறு ஒரு விடயமும் இருக்கின்றது. அது தான் அறுக்கப்பட்ட மிருகங்களது எச்ச சொச்சங்கள் அல்லது கழிவுகளாகும். அறுக்கப்பட்ட மிருகங்களது தலைகள், தோல், முள், கால்கள் என்பன ஆங்காங்கே எறியப்படுவதுண்டு. இதனால் சூழல் மாசடைகிறது. ஓரிரு நாட்களில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது. நாய்களும், பூனைகளும், காகங்களும் அவ்விடங்களுக்குப் படையெடுக்கின்றன. பின்னர் அங்கு வரும் அதிகாரிகளும் பிற சமயத்தவர்களும் முஸ்லிம் சமூகம் சுத்தமற்ற, அடுத்தவர்கள் பற்றிய எவ்வித அக்கறையுமற்ற சுயநல சமூகம் என்று முடிவெடுக்கலாம்.
பிறர் எம்மைக் குறை கூறுவர் என்பதற்காக நாம் எமது வாழ்வை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதல்ல. எமது மார்க்கத்தில் எக்காரியத்தையும் திறம்பட செய்யும்படியும், சுத்தமாக இருக்கும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. “சுத்தம் ஈமானின் பாதி”, “ஒவ்வொரு காரியத்தையும் திறம்படச் செய்யும்படி அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்” போன்ற பல ஹதீஸ்கள் எம்மை நெறிப்படுத்த வேண்டும்.
ஹஜ் என்பது வெறுமனே அறுத்துப் பலியிடல் என்பது மட்டுமல்ல. ஏலவே குறிப்பிட்டது போல அதன் நோக்கம் இறை நெருக்கத்தை அடைவது, மனிதர்களுடைய நலன் என்ற வகையில் இப்பெருநாள் தினத்தை நாம் இஸ்லாம் கூறிய வழிகாட்டல்களோடு கொண்டாடி மகிழ்வோம். அதே போன்று இத்தினத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களையும் அவர்களது குடும்பத்தினதும் வாழ்வையும், அவர்களது நல்ல பண்புகளையும் ஆளுமைகளையும் நினைவுகூர்வோம்.
வல்லவன் அல்லாஹ் எமது நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக! – Vidivelli