கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
இன்றைய பொருளாதார நெருக்கடிக்குப் பரிகாரம் காண்பதற்காகப் பல வழிகளிலும் சர்வகட்சி காபந்து அரசாங்கமும் அதனை ஆட்டுவிக்கும் ஜனாதிபதியும் முயற்சிக்கும் அதே வேளையில் சரிந்துகிடக்கும் இலங்கையுடனான அரபு நாடுகளின் உறவை கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தைப் பற்றிச் சில சிந்தனைகளை விடிவெள்ளி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். இது ஒரு நீண்ட ஆய்வுக்குரிய விடயம். பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கும் விரிவுரையாளர்களுக்கும் பொருத்தமான ஓர் ஆய்வு விடயம். அதன் சுருக்கத்தைத்தான் இங்கே குறிப்பிட முடியும். இதன் ஆங்கில ஆக்கத்தை கொழும்பு டெலிகிறாப் இணைய இதழிலும் டெய்லி பைனான்சியல் ரைம்ஸ் இதழிலும் வாசிக்கலாம்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த உறவு
இலங்கையுடனான அரபுலக உறவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான அகவை உண்டு. எட்டாம் நூற்றாண்டிலோ அதற்குச் சற்று முன்னரோ இலங்கை மண்ணில் அரபுலக வணிகர்கள் கால் பதித்த நாள் தொடக்கம் பதின்மூன்று நூற்றாண்டுகளாக எந்த முறிவுமின்றி (1915ல் ஏற்பட்ட சிங்கள் முஸ்லிம் கலவரத்தைத் தவிர) 1948ல் குடியேற்றவாதிகளின் ஆதிக்கம் முடியும் வரை அந்த உறவு நீடித்தது. அந்த உறவில் உருவாகி சந்ததி சந்ததிகளாகப் பெருகி பல்லினக்கலப்புடன் வளர்ந்ததே இன்றைய இலங்கை முஸ்லிம் சமூகம். அந்த உறவின் வலிமையை கோடிட்டுக்காட்ட வேண்டுமாயின் பின்வரும் ஒரு வரலாற்று உண்மையை முன்வைக்கலாம். ஆசியாவின் வரலாற்றிலேயே ஒரு பௌத்த பெரும்பான்மை இனத்துக்கும் இஸ்லாமிய சிறுபான்மை இனம் ஒன்றுக்கும் இலங்கையில் வளர்ந்த இறுக்கமான நேச உறவைப்போன்று வேறெந்த ஒரு நாட்டிலும் வளரவில்லை. அந்தப் பெருமை இலங்கையை ஆண்ட பௌத்த மன்னர்களையும் அவர்களின் குடிகளையுமே சாரும். அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி. அவர்களுடைய தயாளம், பொறுமை, விருந்துபசாரம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பான்மை ஆகியனவெல்லாம் ஒன்றுசேர்ந்து ஈழமணித் திருநாட்டை அரபுலகெங்கும் ஜெசீரத்துல் யாக்கூத் அல்லது பொன்னும் மணியும் பூத்துக் குலுங்கும் நாடெனப் புகழ்பெறச் செய்தது. ஏன் இந்த நெருக்கமும் உறவும் உருவாகியது என்பதை முதலில் விளங்கவேண்டும்.
இலங்கைக்கு அரபு வணிகர்கள் வரும்போது அரபுலகில் அப்பாசியர் ஆட்சி ஆரம்பமாகி அவர்களின் கிலாபத் பேரரசு அக்காலத்தில் உலகிலேயே மிகப்பெரும் பொருட்செல்வமும் கலைச்செல்வமும் நிறைந்த ஒன்றாக மிளிரத் தொடங்கிற்று. அதனால் அப்பாசியப் பேரரசுச் சந்தையில் இலங்கையின் வாசனைத் திரவியங்களும் முத்தும் பவளமும் வன உற்பத்திப் பொருட்களும் விலைபோவதை எந்த மன்னன்தான் விரும்பாதிருப்பான்? எந்த நாடுதான் விரும்பாதிருக்கும்;? ஆகவேதான் அரபு வணிகர்களை பௌத்த மன்னர்கள் வரவேற்றதில் எந்த வியப்பும் இல்லை. அதே சமயம் இலங்கையின் புகழ்பெற்ற சமனலகந்தை மலைக்குன்று ஆதிமனிதன் ஆதம் (அலை) கால் பதித்த புனித இடம் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடையே தொன்றுதொட்டு நிலவுகின்றது. அதனைத் தரிசிப்பதில் சூபிகள் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தனர். ஆதலால் வணிகருடன் சேர்ந்து அவர்களும் வரலாயினர். அந்தச் சூபிகளே இலங்கையின் முதலாவது சுற்றுலாப் பயணிகள் என்று கூறுவதிலும் தவறில்லை.
ஆனால் இவற்றைவிடவும் ஒரு முக்கிய சம்பவம் இவ்வரவேற்புக்குக் காரணமாய் அமைந்ததை இலங்கையின் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட மறந்தது ஆச்சரியமே. அதுதான் இலங்கைக்கும் அப்பாசியரின் பக்தாதுக்கும் இடையேயுள்ள பௌத்த உறவு. பக்தாதின் அப்பாசிய கிலாபத் மன்னர் சபையில் பராமகியரின் குடும்பத்தினர் கொடிகட்டிப்பறந்தமை இலங்கையின் வரலாற்றாசியர்களுள் எத்தனை பேருக்குத் தெரியுமோ? இந்த பராமகியர் குடும்பம் பாரசீகத்தின் பல்க் நகரின் நவ்பகார் பௌத்தபீடத்தின் பரம்பரைப் பராமரிப்பாளர்கள். அக்குடும்பத்திற் பிறந்த காலித் என்பவர் அப்பாசிய குலத்தின் முதலாவது மன்னர் அல்-சிபாவுடன் நட்புறவுபூண்டு இஸ்லாத்தைத் தழுவி சிபாவின் ஆட்சியில் பிரதம மந்திரியானார். அவரின் புதல்வன் யஹ்யா, ஹாருன் அல் றஷீத் அப்பாசிய மகுடத்தைக் கைப்பற்றத் துணைபுரிந்து அவரின் ஆட்சியில் மிகவும் அதிகாரமுள்ள ஒரு தலைவரானார். பின்னர் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் (அது என்ன பிரச்சினை என்பதில் கருத்துவேறுபாடுகள் உண்டு) பராமகியர் யாவருமே சிரைச்சேதம் செய்யப்பட்டாலும் பௌத்தத்தின் செல்வாக்கு அப்பாசியர் ஆட்சியில் நிலவுவதற்கு அக்குடும்பத்தினரே காரணம் என்பதை மறுக்க முடியாது. உதாரணமாக, அவர்களாலேதான் அப்பாசிய அறிவாளிகள் அதுவரை கிரேக்க ஏடுகளைப் புரட்டிப்படித்துக் கொண்டிருந்தபோது இந்திய இந்து பௌத்த அறிவுப் பொக்கிஷங்களையும் தேடுவதற்கு ஊக்கம் பிறந்தது. அல் பிரூணி இந்தியாவுக்கு வந்து இந்து பௌத்த ஏடுகளைப் படித்து அவற்றுட் சிலவற்றை அரபு மொழியிலே கொண்டுவந்ததும் அந்த ஊக்கத்தின் ஒரு விளைவே.
இவ்வாறு பௌத்த செல்வாக்கு அப்பாசியர் ஆட்சியில் நிலவியமை இலங்கை மன்னர்களுக்குத் தெரிந்திருக்குமா என்ற ஒரு கேள்வி எழலாம். புதினத் தாள்களும் நவீன செய்திச் சாதனங்களும் இல்லாத அக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளும் கடலோடி வர்த்தகர்களுமே செய்தி ஊடகங்களாகச் செயற்பட்டனர். பக்தாதிலே பிரபலமான ஒரு பௌத்த குடும்பம் இஸ்லாத்தைத்தழுவி உயர்பதவிகளில் அங்கம் வகித்திருந்தது அங்குள்ள வணிகர் சமூகத்தின் செவிகளையும் சூபிகளின் கவனத்தையும் பல வழிகளிலும் எட்டியிருக்கும். பள்ளிவாசல்களில் தினம்தினம் முஸ்லிம்கள் தொழுகைக்காகக் கூடிக்கலையும்போது அவர்கள் நாட்டின் நடப்புகளைப்பற்றி தமக்குள் கலந்துரையாடுவது இன்றும் நடைபெறும் ஒரு நிகழ்வு. இலங்கைக்கு வந்த வணிகர்களும் சூபிகளும் அந்தச் செய்தியை இலங்கையிலே அவர்களின் வாடிக்கையாளர்களிடையேயும் ஏன் அரசாங்க அதிகாரிகளிடையேயுமே பேசி அது ஈற்றில் மன்னனின் மன்றத்தினையும் அடைந்திருக்க வாய்ப்புண்டு. இவ்வாறெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் பௌத்தத்தின் மகிமை தெரிந்திருந்தமை இலங்கையின் பௌத்த மன்னர்களுக்கு முஸ்லிம்களின்மேல் ஒரு தனிமதிப்பு ஏற்படக் காரணமாய் அமைந்தது என்ற வாதத்தை இலகுவில் தட்டிக் கழித்துவிட முடியாது.
இலங்கையின் முஸ்லிம் சாளரம்
இவ்வாறு வளர்ந்த நெருக்கமான பௌத்த முஸ்லிம் உறவு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் எதிர்பாராத ஒரு வரப்பிரசாதமாக மாறியது. அரபு நாட்டு அரசுகளும் அரபு மக்களும் இலங்கை முஸ்லிம்கள் என்ற ஒரு சாளரத்தின் ஊடாகவே இலங்கையைப்பற்றி அறிந்து கொண்டனர். அதேபோன்று இலங்கையின் அரசாங்கங்களும் இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியினை விளம்பரப்படுத்தியே அரபு நாடுகளின் ஆதரவைத் தேடிக்கொண்டன. அதுமட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே வளர்ந்த அரசியல் பிரச்சினைகள் விரிவடைந்து இலங்கையின் சிறுபான்மை இனங்களை இலங்கை அரசாங்கங்கள் திட்டமிட்டு நசுக்குகின்றன என்ற ஒரு கருத்து வெளியுலகில் பரவியபோது முஸ்லிம் சமூகத்தின் பரஸ்பர உறவையும் அவர்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவையும் விளம்பரப்படுத்தியே அந்தக் கருத்தை இலங்கை அரசாங்கங்கள் குறிப்பாக அரபு நாடுகளில் செல்லாக்காசாக மாற்றின. இவ்வாறு முஸ்லிம் என்ற ஒரு சாளரத்தின் ஊடாகவே அரபு நாடுகள் இலங்கைமேல் ஒரு தனி மதிப்பை வளர்த்திருந்தன. அந்த மதிப்பினை ஒரு சில உதாரணங்களைக் கொண்டு நிறுவலாம்.
இலங்கை தனது வெளிநாட்டு உறவில் அணிசேராக் கொள்கையைத் தழுவியிருந்த காலம் அது. இந்தியப் பிரதமர் பண்டிதர் நேரு, யூகோஸ்லாவியாவின் தலைவர் மார்ஷல் டிட்டோ, எகிப்தின் ஜனாதிபதி அப்துல் நாசர் என்ற முன்று தூண்களிலே கட்டப்பட்ட அணிசேரா இயக்கத்தில் இலங்கையும் அங்கத்துவம் பெற்றிருந்தது. அந்த இயக்கத்தின் 1976ஆம் ஆண்டின் மகாநாடு; கொழும்பில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் நடைபெற்றபோது கொழும்புக்கு வந்த அத்தனை அரபு நாட்டுத் தலைவர்களையும் கண்டு கொழும்பு மாநகரே பிரமித்து நின்றதை யார்தான் மறுப்பரோ? அந்தச் சில நாட்களுக்குள் அரபு நாட்டுத் தலைவர்களுடன் இலங்கையின் சிநேகம் மிகவும் நெருக்கத்தை அடைந்ததில் சந்தேகமில்லை. அந்த நெருக்கம் பின்னர் எவ்வாறு இலங்கைக்கு ஒரு பொருளாதாரக் காப்புறுதியாக அரபுலகில் மாறிற்று என்பதற்கு இரு சம்பவங்கள் சாட்சி பகர்கின்றன. ஒன்று ஸ்ரீமாவோவின் இடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் நடந்தது.
இலங்கை சோஷலிசப் பொருளாதாரக் கொள்கைகளைத் தழுவியதால் மேற்கு நாடுகளின் வெறுப்புக்கு ஆளாகியது. அவ்வணி பல பொருளாதார இடர்களை இலங்கைமீது சுமத்தின. அதனால் இன்றுபோல் அன்றும் அன்னியச் செலாவணிப் பிரச்சினையொன்று உருவாகியது. அந்த வேளையிலேதான் பிரதமர் அவரது கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களை மத்திய கிழக்குக்கு அனுப்பி அவசர உதவிகளைப் பெற்று ஓரளவு பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். இரண்டாவது சம்பவம் மேற்கு நாடுகளின் பக்தரான ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆட்சியில் நடைபெற்றது. 1982ல் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி இலங்கைக்கு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்திற்று. ஜே. ஆர். செய்த முதல் வேலை அவரது வெளிநாட்டு அமைச்சர் ஷாகுல் ஹமீத் அவர்களை அவசர அவசரமாக லிபியாவுக்கு அனுப்பி அந்நாட்டின் தலைவர் கதாபியிடமிருந்து உடனடியாக எரிபொருள் பெற்றுக் கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு கண்டமை. இவ்வாறு இரு வேறுபட்ட காலங்களில் இரு வேறுபட்ட கொள்கைகளையுடைய அரசுகள் இரு முஸ்லிம் அமைச்சர்களைக் கொண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டமை முஸ்லிம் சாளரத்தின் ஊடாக அரபு நாடுகள் இலங்கைமேல் கொண்டிருந்த நல்ல அபிப்பிராயம் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?
மூடப்பட்ட சாளரம்
இந்தச் சாளரம் படிப்படியாக 2009க்குப் பின்னர் மூடப்பட்டு வந்ததை ஆட்சியாளர்கள் உணரத் தவறியது இலங்கையின் துர்ப்பாக்கியமே. இதற்குரிய காரணத்தை விளங்குதல் அவசியம். சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த நாட்டைச் சீரழித்த விடுதலைப் புலிகளின் பிரச்சினை 2009ல் பாரிய இழப்புகளுடன் ஒரு முடிவுக்கு வந்தது. புலிகளைப் பூண்டோடு ஒழித்த ராஜபக்ச ஆட்சி வெற்றிவாகை கொhண்டாடி அந்த வெற்றிப் பிரமிதத்தில் மிதந்த சிங்கள பௌத்த பேரினவாதம் இலங்கை இனிச் சிங்கள நாடு, அது சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம், ஏனைய சிறுபான்மை இனங்களெல்லாம் சிங்கள பௌத்தர்களின் தயவில் வாழும் குடிகளே என்ற தனது நெடுங்காலக் கனவை விரைவில் நனவாக்க முனைந்தது. படைகொண்டு எதிர்த்த தமிழர்களையே தோற்கடித்து விட்டோம், மற்றவர்கள் ஒரு பொருட்டா என்ற இறுமாப்பு தலைவிரித்தாடியது.
அந்த இறுமாப்பு பேரினவாதத்தின் பார்வையை 2009க்குப்பின் முஸ்லிம்களின்மேல் திருப்பலாயிற்று. ராஜபக்ச ஆட்சி பௌத்த சிங்கள பேரினவாதத்தின் பாதுகாவலனாக மாறிற்று. பேரினவாதத்தின் பார்வையில் தமிழர்களைவிடவும் ஆபத்தானவர்களாக முஸ்லிம்கள் தோன்றினர். தமிழராவது நாட்டைப்பிரித்து தமிழீழம் ஒன்றை உருவாக்கியபின் சிங்கள ஈழத்துடன் ஒற்றுமையாய் வாழ விரும்பினர். ஆனால் முஸ்லிம்களோ அவர்களது பெண்களின் செழிப்பான பிறப்பு வீதத்தாலும், தப்லீக் ஜமாஅத், வஹ்ஹாபிசம் ஆகிய இயக்கங்களின் பிரச்சாரங்களாலும் முழு இலங்கையையுமே ஓர் இஸ்லாமிய நாடாக்க விளைகின்றனர் என்ற ஒரு பயத்தை சிங்கள மக்களிடையே பரப்பலாயினர். முஸ்லிம் சில்லறை வியாபாரத் தலங்களும் முஸ்லிம் வைத்தியர்களும் சிங்களத் தாய்மார்களுக்குக் கர்ப்பத்தடையை உண்டுபண்ண நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்ற இன்னுமொரு அபாண்டத்தையும் அவிழ்த்துவிட்டனர். பேரினவாதத்தின் இந்த விஷப்பரீட்சை சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த நேச உறவை சீர்குலைக்கத் தொடங்கிற்று. 2014இல் அளுத்கமவில் வெடித்த சிங்கள முஸ்லிம் கலவரம் இந்த விஷப்பரீட்சையின் முதலாவது பாரதூரமான விளைவு. அதனைத் தொடர்ந்து அம்பாறை, திகனை, கண்டி என்றவாறு பல இடங்களிலும் கலவரங்கள் வெடிக்கத் தொடங்கின. கலவரங்கள் நடைபெற்றபோது காவற்துறையினர் வெறும் பார்வையாளர்களாக நின்றமை முஸ்லிம்களுக்கு பேரினவாத ஆட்சியில் நீதியும் கிடைக்காது என்பதை வெளிப்படுத்திற்று. ஒரு பக்கத்தில் உடல் உயிர் பொருள் சேதங்களை முஸ்லிம்கள் அனுபவித்த அதேவேளை மறுபக்கத்தில் அவர்களுடைய மதப் புத்தகங்கள், மதரசாக்கள், விவாகம் சம்பந்தமான சட்டங்கள், ஆடைகள், என்றவாறு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையில் கலாச்சார ஒழிப்பு முயற்சியையும் போரினவாதிகளின் ஆட்சியில் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இந்த முயற்சிகளின் உச்சக் கட்டமாக கடந்த சுமார் இரண்டரை வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச குடும்ப அரசாங்கம் அமைந்தது என்பது அரபு நாடுகளுக்கு நன்கு தெரியும். சுருக்கமாகக் கூறுவதாயின் முஸ்லிம்கள் என்ற சாளரத்தின் ஊடாக இதுவரை இலங்கையை கண்டு ரசித்து அபிமானம்கொண்டிருந்த அரபுலகுக்கு அந்தச் சாளரம் இப்போது மூடப்பட்டுள்ளதாகத் தெரிந்தது. அதன் விளைவு?
பொருளாதார மீட்சிக்குச் சாளரம்
திறபடல் வேண்டும்
தான்தோன்றித்தனமான பொருளாதாரக் கொள்கைளால் நாடே வங்குறோத்தாகியுள்ளதை யாரும் மறுக்கவில்லை. அந்த நிலைக்குக் காரணமாய் அமைந்த ஜனாதிபதியே அதற்காக மன்னிப்புக்கோரியுள்ளமை அந்த உண்மைக்கு முத்திரை வைத்துவிட்டது. அத்தியாவசியத் தேவைகள் அனைத்துக்கும் மக்கள் வெய்யிலிலும் காய்ந்து மழையிலும் நனைந்து நீண்ட வரிசையில் பசியுடனும் தாகத்துடனும் கால்கள் கடுக்கக்கடுக்கக் காத்து நிற்பது இன்றைய சாதாரண காட்சியாகி விட்டது. அதனால் சிலர் உயிரையே இழந்துள்ளமையை என்னவென்று கூறிப் பரிதாபப்படுவதோ?
இன்றைய பொருளாதாரங்கள் யாவும் எரிபொருள் இல்லாமல் இயங்காது. உலகமே இயந்திரமயமாகி விட்டதால் அந்த இயந்திரங்கள் இயங்காமல் பொருளாதாரங்கள் இயங்க முடியுமா? வாகனாதிகள் யாவற்றிற்கும் பொருள்களையும் மக்களையும் ஏற்றிச் செல்வதற்கு எரிபொருள் அவசியம். அந்தப் பொருளில் சுமார் 40 சதவீதம் அரபுநாடுகளிடம் உண்டு. அந்த நாடுகள் பண வசதி படைத்த நாடுகளும் கூட.
இன்றைக்கு அந்த நாடுகள் வழங்கும் தொழில் வாய்ப்புகள்தான் இலங்கையின் வேலையற்றோருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வாழ்வளிக்கிறது. எவ்வாறு முன்னொரு முறை எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் லிபியா கைகொடுத்து உதவியது என்பதை ஏற்கனவே கண்டோம். ஆனால் அன்றைய முஸ்லிம் சாளரம் இன்று மூடப்பட்டுக்கிடக்கிறது. அதனை மீண்டும் திறவாமல் அரபு நாடுகளின் உதவியை நாட முடியாது.
வெளிவிவகார அமைச்சரையோ வேறு அமைச்சர்களையோ அங்கே அனுப்புவதன்மூலம் அந்த நாடுகளின் தயவைப் பெற முடியாது. ஏனெனில் இந்த அரசாங்கம் முஸ்லிம் இனத்துக்கும் அவர்களின் மத, கலாசார அம்சங்களுக்கும் செய்த அநீதிகளை அங்குள்ள அரசுகள் ஏலவே அறிந்துள்ளன. அதனாலேதான் உலக இஸ்லாமிய கூட்டுறவுத் தாபனம் இலங்கை அரசைக் கண்டித்து ஒரு பிரேரணையை 2020ல் நிறைவேற்றியது. அதுவே அரசாங்கத்தின் கண்களைத் திறந்திருக்க வேண்டும். அது நடை பெறவில்லை. இனியாவது அதன் கண்கள் திறந்து முஸ்லிம் சாளரமும் திறபடுமா? இலங்கையின் சார்பாக அரபு நாடுகளுடன் பேசுவதற்கு அரசியல்வாதிகள் அல்லாத ஒரு முஸ்லிம் குழுவினை அங்கே அனுப்பினால் என்ன? அதன் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு கட்டுரையின் நீளம் போதாது. அரபு நாடுகளின் சினேக உறவை வளர்ப்பதற்கு அவ்வாறான ஒரு தூதுக்குழு அவசியம். இந்த உறவு இலங்கையின் இன்றைய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு ஒரு நிவாரணி.-Vidivelli