குர்ஆன் இறக்குமதியின்போது ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை
முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் அன்ஸார்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
புனித குர்ஆன் பிரதிகளையும், தமிழ் மொழியிலான இஸ்லாமிய நூல்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்பு செயற்பட்ட பாராளுமன்ற கண்காணிப்புக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பனவற்றில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குர்ஆன் பிரதிகள் குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மற்றும் இஸ்லாமிய புத்தகங்களில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவித்திருந்தன. இவற்றின் இறக்குமதிகள் கண்காணிக்கப்படவேண்டும் என சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதற்கென 2019 ஆம் ஆண்டு ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில் உலமாக்களும் உள்ளடங்கியுள்ளனர்.
இது தொடர்பில் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; இறக்குமதி செய்யப்படும் குர்ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய நூல்களில் தீவிரவாத, அடிப்படைவாத கருத்துகள் உள்ளடங்கியுள்ளனவா என்பதை குறிப்பிட்ட குழு ஆராய்ந்து புத்த சாசனம், மத மற்றும் கலாசார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் தீவிரவாத கருத்துக்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்பே இறக்குமதி செய்யப்பட்ட குர்ஆன் பிரதிகள் மற்றும் இஸ்லாமிய நூல்கள் பகிர்ந்தளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டன. இதனால் இறக்குமதியாளர்கள் தாமதங்களையும் பல்வேறு சிரமங்களையும் அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலைமையைத் தவிர்ப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நூல் இறக்குமதியாளர்களை இறக்குமதி செய்வதற்கு முன்பாக அந்நூலின் அல்லது குர்ஆனின் இரு பிரதிகளை மாத்திரம் வெளிநாட்டிலிருந்து தருவித்து திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு கோரியுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கப்படும் மாதிரி நூல் அல்லது குர்ஆன் திணைக்களத்தின் மார்க்க நிபுணர்கள் குழு மூலம் ஆய்வு செய்யப்படும், தீவிரவாத கருத்துகள் இல்லையெனில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கலாசார அமைச்சு ஊடாக அனுமதி வழங்கப்படும். இதன் பின்பு இறக்குமதியாளர் இறக்குமதி செய்ய முடியும். இது தாமதங்களையும் சிரமங்களையும் தவிர்ப்பதற்காக அமையும் என்றார்.
நாட்டில் குர்ஆனுக்குத் தட்டுப்பாடு
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குர்ஆனுக்கு இவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுவதாலும் நாட்டில் தற்போது குர்ஆனுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக இஸ்லாமிய புத்தக நிலைய உரிமையாளரும், இறக்குமதியாளருமான எஸ்.எஸ்.ஏ.ஹில்மி விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பதுபோன்று வெளிநாட்டிலிருந்து முதலில் மாதிரிகுர்ஆன் பிரதிகள், இஸ்லாமிய நூல்களை தருவிப்பது பரிசீலனைக்காக ஒப்படைத்தாலும் இறக்குமதிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
அத்தோடு அனுமதி பெறப்பட்டு ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை விற்றுத்தீர்ந்த பின்பு மீண்டும் இறக்குமதி செய்வதென்றால் மீண்டும் குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றியே இறக்குமதிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
தட்டுப்பாடு நிலவும் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை இலங்கையில் அச்சிடுவதென்றால் இன்றைய நிலையில் பெரும் செலவீனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.- Vidivelli