(எம்.எப்.எம்.பஸீர்)
அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரர், அவை குறித்து தொடரப்பட்டுள்ள இரு வழக்குகளில் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராகி வருவதாக அறிய முடிகிறது.
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வை தூற்றும் விதமாக கருத்து வெளியிட்டு, மத உணர்வுகளை தூண்டியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள எச்.சி.1948/20 எனும் வழக்கிலும், கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள பீ.58559/3/22 எனும் வழக்கிலும் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்க அவர் தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.
மேல் நீதிமன்ற வழக்கு :
இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 2022 செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்தது. இது குறித்த எச்.சி.1948/20 எனும் வழக்கு நேற்று முன் தினம் (28)கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள, கலகொட அத்தே ஞானசார தேரர் இதன்போது மன்றில் ஆஜராகவில்லை. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுடன் கூடிய போக்குவரத்து சிக்கல் காரணமாக, அவர் மன்றில் ஆஜராகாதபோதும் பிடியாணை எதுவும் பிறப்பிக்கப்படாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று முன் தினம் குறித்த வழக்கில் சாட்சியம் அளிக்க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணி வசீமுல் அக்ரம் உள்ளிட்ட குழுவினருடன் மன்றில் ஆஜராகியிருந்தனர். இந் நிலையில் அவர்களுக்கு மீள சாட்சியளிக்க செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.
2016 ஆம் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், கொழும்பு – கிருலப்பனையில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்டதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தண்டனை சட்டக் கோவையின் 291( அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அவர் புரிந்ததாக சட்ட மா அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க பலாங்கொடை ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் குறித்து ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போது, கூரகல பெளத்த புராதன சின்னங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாகவும், இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வை கேவலமான வசனங்களைக் கொண்டு தூற்றும் விதமாக கருத்து வெளியிட்டு, மத உணர்வுகளை தூண்டியதாகவும் ஞானசார தேரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளை மையப்படுத்தி, மேல் நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக சட்ட மா அதிபரால் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அது கையளிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவ்வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.
இதன்போது கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச ஆஜரானார்.
இந்த வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் முயற்சிக்கும் நிலையில், அது குறித்து, குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர் ஆராய முறைப்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிவான் நீதிமன்ற வழக்கு :
இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ரிகாஸ் முன் வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் ( 3 ஆம் இலக்க அறை) முன்னிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த 8 ஆம் திகதி சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி முறைப்பாட்டாளர் தரப்பின் முதல் சாட்சியாளர் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், குறித்த வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கோர தயாராக இருப்பதாக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் இது குறித்த வழக்கு எதிவரும் ஜூலை முதலாம் திகதி மீள விசாரணைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli