உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: 25 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை Pre Trial Conference ஆகஸ்ட் 4 இல்
பிணை கோரிக்கையை 2 வாரங்களுக்கு முன் சமர்ப்பிக்க கோரிக்கை
(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கை, ‘வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்றுகூடலுக்கு’ (Pre trial conference) திகதி குறித்து கொழும்பு சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு அதனை ஒத்தி வைத்தது.
அன்றைய தினம் ‘வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்றுகூடலுக்கு ‘ பிரதிவாதிகளை கண்டிப்பாக மன்றில் ஆஜர் செய்யுமாறும், விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் பணிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதி, சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதி, சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவரையும் மன்றில் ஆஜராக சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.
பிரதான பிரதிவாதியாக அரச தரப்பால் அறிமுகப்படுத்தப்படும் அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி உட்பட 25 பேருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் கடந்த திங்களன்று அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே மே 12 ஆம் திகதி அவ்வழக்கு, விசாரணைக்கு வர இருந்த நிலையில் அன்றைய தினம் நாடு முழுதும் ஊரடங்கு நிலை அமுல் செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணை ஆரம்பம் :
இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தை விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள, கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாம் முன்னிலையிலேயே இந்த வழக்கு இவ்வாறு விசாரணைக்கு வந்தது.
பாதுகாப்பு பலப்படுத்தல்:
கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக வழக்கு விசாரணைக்கு வந்த கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறைக்குள் மூன்றாம் தரப்பினர் உள் நுழைய அனுமதியளிக்கப்படவில்லை. நீதிமன்ற செய்தியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே சோதனை செய்யப்பட்ட பின்னரே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளும் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மெகஸின், அங்குணகொல பெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு உள்ளிட்ட பல சிறைச்சாலைகளிலிருந்து அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வா தலைமையிலான குழுவினர் மன்றில் ஆஜராகினர்.
பிரதிவாதிகளுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ரிஸ்வான் ஹுசைன், சச்சினி விக்ரமசிங்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
இந் நிலையில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபருக்காக மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்று கூடலுக்கு திகதி ஒன்றினை குறிக்குமாறு கோரினார். அத்துடன் வழக்கில் சில விடயங்களை மையப்படுத்திய பட்டியலொன்றினை சட்ட மா அதிபர் தரப்பு முன் வைக்க உள்ளதாகவும் அதனை பிரதிவாதிகள் தரப்பு ஒப்புக்கொண்டால் அவ்வந்த விடயங்கள் குறித்த சாட்சி விசாரணைகளை முன்னெடுக்காது ஏனைய விடயங்கள் குறித்து சாட்சிகளை அழைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில், மன்றில் நெளபர் மெளலவி உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்காக ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், பிரதிவாதிகள் சார்பில் பிணைக் கோரிக்கையை மன்றில் முன் வைக்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் பிரதிவாதிகள் தொடர்பில் முன் வைக்கப்படும் பிணைக் கோரிக்கையின் எழுத்து மூல சமர்ப்பணங்களை மன்றில் முன் வைக்கவும், அவற்றை அடுத்த தவணைக்கு இரு வாரங்களுக்கு முன்பாகவே சமர்ப்பிக்கவும் பிரதிவாதி தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படியே வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகள்:
1. அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி.
2. அபூ ஹதீக் எனப்படும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் பெயரால் அறியப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை.
3. அபூ சிலா எனப்படும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான்.
4. அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ்.
5. அபூ பலா எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக்.
6.அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்.
7. அபூ மிசான் எனப்படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்.
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தெளஸ்.
9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி.
10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி.
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்.
12.அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்.
13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்.
14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்.
15. அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுல் ஆப்தீன்.
16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்.
17. யாசின் பாவா அப்துல் ரவூப்.
18. ராசிக் ராசா ஹுசைன்.
19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்.
20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்.
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்.
22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி.
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்.
24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி.
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்.
-Vidivelli