கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
ஆதிமனிதன் ஆதம் (அலை) பரலோகத்திலிருந்து இகலோகத்துக்கு வீசி எறியப்பட்டதிலிருந்தே மனிதனுடைய ஜென்மபாவம் ஆரம்பித்துவிட்டதென்றும் அதனைக் கழுவவே குழந்தைகள் ஞானஸ்தானம் செய்யப்பட வேண்டும் என்றும் கிறிஸ்தவம் போதிக்கின்றது. இப்படிப்பட்ட ஒரு ஜென்மபாவம் இலங்கையின் வரலாற்றிலும் ஏற்பட்டுள்ளது. அந்தப்பாவம்தான் இன்றுவரை இந்த நாட்டைச் சீர்குலைத்து அதன் பொருளாதாரத்தையும் வங்குறோத்தாக்கி மக்களையும் தீராத வேதனைக்குள் தள்ளியுள்ளது. அந்தப் பாவம்தான் என்ன? அதன் வேதனைகள் யாவை? அது அளித்த வேதனைகளுக்குப் பரிகாரம் காணவந்த மந்திரவாதிகள் யார்? அந்தப் பாவத்துக்கு விமோசனம் உண்டா? என்பனபோன்ற வினாக்களுக்குரிய விடைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஜென்மபாவம்
சுதந்திர இலங்கை 1948ல் ஜனித்தது. அந்த ஜனனம் பிரித்தானியக் குடியேற்றவாதிகளால் வழங்கப்பட்ட ஒரு பரிசு. அந்த ஜனனம் உண்மையிலேயே இந்தியாவில் நடைபெற்றதுபோன்று போராடிப் பெற்ற ஒரு பொக்கிஷம் அல்ல. மாறாக, அது பிரித்தானியரின் உயரடுக்கு வர்க்கமொன்றிடமிருந்து இலங்கையின் உயரடுக்கு வர்க்கமொன்றிற்கு கைமாறிய ஓர் அதிகார மாற்றம் மட்டுமே. அதைத்தான் சுதந்திரம் என அழைக்கிறோம். அந்தச் சுதந்திரத்தின் ஆட்சிமுறை பிரித்தானிய நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையைத் தழுவியிருந்தமை தவிர்க்கமுடியாத ஒரு விளைவு மட்டுமல்ல, அது வரவேற்கப்பட வேண்டியதும்கூட. குடியேற்ற காலத்துக்கு முன்னர் இலங்கை மனிதாபிமானமும் காருண்யமும் கொண்ட பௌத்த மன்னர்களால் ஆளப்பட்டிருந்தாலும் அவர்களின் ஆட்சியை மக்களாட்சி என்று கூறமுடியுமா? ஆனால் பிரித்தானியரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய இலங்கைத் தலைவர்கள் முதலாவதாக மேற்கொண்ட முயற்சி இலங்கையர் என்ற ஒரு விரிவான போர்வைக்குள் நாட்டின் எல்லா மக்களையும் சாதி, இன, மத வேறுபாடுகளின்றி, சிங்கப்பூர் செய்ததுபோன்று, ஒன்றுபடுத்தி நாட்டை கட்டி எழுப்பாமல் யார் இலங்கையர் என்று முடிவுகட்டும் முயற்சியில் இறங்கினர்.
இலங்கை ஒரு சிங்கள நாடு, ஆதலால் இலங்கையர் என்றால் அவர்கள் சிங்களவர்களே என்று முடிவுகட்டி மற்ற இனங்களை ஒவ்வொன்றாக ஓரங்கட்ட வெளிப்பட்டனர். முதலில் இந்திய வம்சாவழித் தமிழருடன் ஆரம்பித்து, பறங்கியர், இலங்கைத் தமிழர், சோனகர், மலாயர் என்றவாறும் பௌத்தர், கிறித்தவர், இந்துக்கள், இஸ்லாமியர் என்றவாறும் பிரித்து, பௌத்த சிங்களவர்களே இந்நாட்டின் அசல் பிரஜைகள் என்றும் அவர்களின் ஆட்சியே நிரந்தரமாக இருக்கவேண்டும் என்றும் மற்ற இனத்தவர் நாட்டின் பிரஜைகளானபோதிலும் அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக அல்லது நகல் பிரஜைகளாகவே வாழவேண்டும் என்ற ஜென்மபாவத்துக்குள் நாட்டைப் பலியாக்கினர். இந்தப் பேரினவாத ஜென்மபாவம் இழைத்த தீங்குகளே இந்த நாட்டை ஒரு குட்டிச் சுவராக மாற்றியுள்ளது. சுதந்திரம் என்ற பூமாலை குரங்குகளின் கைகளிலே கிடைத்ததுபோலவே இலங்கையின் ஜனநாயக ஆட்சிமுறை அதன் பேரினவாதிகளின் கைகளுக்குட் சிக்கிச் சீரழியலாயிற்று.
அந்த ஜென்மபாவத்தின் தீங்குகள்தான் அடுக்கடுக்காக இனக்கலவரங்களாகவும் இனச்சுத்திகரிப்பு முயற்சிகளாகவும் உள்நாட்டுப் போராகவும் வெடித்து, செல்வமுள்ள ஒரு பொன்மணித் தீவினை பஞ்சம் தலைவிரித்தாடும் ஒரு வரண்ட பூமியாகக் கருதப்படும் அளவுக்கு மாற்றியுள்ளன. அரசியல், பொருளாதாரம், கல்வி, நிர்வாகம் ஆகியதுறைகளில் பாகுபாடான செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு இலங்கையின் ஏறத்தாழ முப்பது சதவீத மக்களை நாட்டின் வளர்ச்சியிலிருந்தும் அதன் பலாபலன்களிலிருந்தும் ஒதுக்கி வைத்துள்ளன. ஆனால் அந்தப் பாரபட்சமான ஆட்சியும் நிர்வாகமும் இன்று பெரும்பான்மை இனத்தவரையும் சீரழித்துள்ளதை அவர்கள் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனை மறைத்துப் போலி முகம் ஒன்றைப்படைத்து பாவத்தின் தீங்குகளுக்குப் பரிகாரம் வழங்க அவர்களிடையே பல மந்திரவாதிகளும் தோன்றியுள்ளனர். அந்த விந்தையை இனி நோக்குவோம்.
மந்திரவாதிகளின் பவனி
சென்றகால மந்திரவாதிகளையும் அவர்களின் வித்தைகளையும் ஒரு புறம் தள்ளிவிட்டு இன்றைய மந்திரவாதிகளையும் அவர்களின் மந்திரங்களையும் இங்கே கவனிப்போம். அந்த வரிசையில் முதலிடம் வகிப்பவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச. பௌத்த சிங்கள பேரினவாதத்தின் உருவடிவானவர் இந்த ஜனாதிபதி. தான் சிங்கள பௌத்தர்களாலேயே தெரியப்பட்டவன், அவர்களின் நலனுக்காகவே பாடுபடுவேன் என்று பகிரங்கமாகவே பறைசாற்றியவர் இந்தப் பெருந்தலைவர். ஆனாலும் சந்தர்ப்பத்துக்கேற்ப சகல மக்களின் நலனையும் பாதுகாப்பேன் என்றும் அவர் கூறிக்கொள்வதுண்டு. தனது ஆட்சியில் இலங்கையை ஒரு மாற்று வழிமூலம் (அது என்ன வழியென்று இதுவரை யாரும் விபரிக்கவில்லை) வளமும் மகோன்னதமும் பொங்கி வழியும் நாடாக மாற்றுவேன் என்று இறுமாப்புடன் கூறிய இனாபிமானி. அந்த மாற்று வழியே அவரது மந்திரக் கோலாக மாறியது. அந்த வழியே பொருளாதார வளர்ச்சிக்குப் பொருத்தமான வழியென்று புகழ் பாடினார் இன்னொரு மந்திரவாதி. அவர்தான் கோத்தாபய பொறுக்கியெடுத்து நியமித்த மத்திய வங்கியின் முன்னை நாள் ஆளுனர் பேராசிரியர் லக்ஷ்மன்.
கோத்தாபயவின் மாற்றுவழி வெற்றியடைவதற்காக மத்தியவங்கியின் சட்டரீதியான சுதந்திரத்தை அரசியற் சந்தையில் அடகுவைத்தவர் இவ்வாளுனர். ஜனாதிபதியின் தாளத்துக்கு நடனமாடிய ஒரு பொருளியற் கலைஞர். அவர் மட்டுமல்ல, ஜனாதிபதியின் மாற்றுவழியின் செலவினங்களை கவனிப்பதற்காக நிதி அமைச்சின் பொறுப்பையும் தானே ஏற்றவர் அவரது பிரதம மந்திரித் தமயன் மகிந்த ராஜபக்ச. ஆனால் அவரால் அதனைச் சமாளிக்க முடியவில்லை. எனவே உடனே அவர்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தனர் பசில் ராஜபக்ச என்ற இன்னொரு மந்திரவாதியை. நாடாளுமன்றத்துக்குள் பின்கதவால் நுழைந்து நிதியமைச்சராகப் பதவியேற்றவர் இந்த மந்திரவாதி. அவர் செய்த முதல் வேலை பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு வரவுசெலவுத் திட்டத்தை அவசர அவசரமாகத் தயார்செய்து நாடாளுமன்றத்திற் சமர்ப்பித்தபின் அதன்மீது நடைபெற்ற விவாதங்களையும் கேட்காமல் இந்தியாவுக்கு நிதியுதவி கேட்டு ஓடோடிச் சென்றமை. ஒரு கடனை அடைக்க இன்னொரு கடனைப் பெறுவதே இந்த மந்திரவாதியின் வித்தையாக அமைந்தது. இந்த மந்திரங்களெல்லாம் ஈற்றில் ஜனாதிபதியின் மாற்று வழி ஒரு வரட்சிப்பாதை என்பதை அம்பலமாக்கிற்று. மதிப்புக்குரிய பேராசிரியர் தன் பதவியை ராஜினாமாச் செய்து அப்பாதையின் விபத்துக்குப் பலியானார்.
விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோன்று ஜனாதிபதி இன்னொரு மந்திரவாதியை மத்திய வங்கியின் ஆளுனராக நியமித்தார். அவர்தான் நிவார்ட் கப்ரால். அவர் ஏற்கனவே ஆளுனராக இருந்து பின்னர் பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல்வாதியாக மாறி நாடாளுமன்றத்துக்குள் பின்கதவால் நுழைந்து அமைச்சரானவர். ஆளுனராக மீண்டும் பதவியேற்றபோது ஜனாதிபதியின் மாற்றுவழி வித்தையின் பிரசாரகராக மாறி அதன் வெற்றி வெகு தூரத்திலில்லை என்று உலகெலாம் விளம்பரம் செய்து அதற்காக இரவோடிரவாக நாணயத்தாள்களை அச்சடித்து வெளியிட்டு பணவீக்கத்தை உண்டுபண்ணியபின், பணவீக்கத்துக்கும் பணப்புழக்கத்துக்கும் சம்பந்தமே இல்லையென்ற ஒரு வினோதமான பொருளாதார விதியை அறிமுகம் செய்த ஒரு கோமாளி மேதை. இவர்களுடைய வித்தைகளெல்லாம் நாட்டின் பொருளாதாரத்தை விரைவில் வங்குரோத்தடையச் செய்யும் என்று உள்நாட்டினதும் வெளிநாடுகளினதும் அனுபவம் நிறைந்த பொருளியலாளர்களும் நிதி நிறுவனங்களும் எச்சரிக்கை செய்ய, அந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளியதுமட்டுமல்லாமல் அவ்வாறு எச்சரித்தவர்களை நையாண்டி பண்ணிக் கேவலப்படுத்தினர். யாருடைய வித்தை அல்லது யாருடைய எச்சரிக்கை நிஜமாகியது என்பதை வாசகர்களுக்கு விபரிக்கவும் வேண்டுமா?
நாடு வங்குரோத்தடைந்து மக்களின் வாழ்க்கையும் சிதறடிக்கப்பட்டு, தினசரி மூன்று வேளை உணவு இருவேளையாகி பின்னர் ஒரு வேளையாகி பலருக்கு அதுவும் கிடைக்காதுபோகவே அவர்களுக்கு வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதைத்தவிர வேறுவழி தெரியவில்லை. நாடே ஒரு போர்க்களமாக மாறத் தொடங்கிற்று. அறப்போராட்டமொன்று ஓர் இளந்தலைமுறையின் தலைமையில் ஆரம்பமாகியது. அதைப்பற்றிப் பின்னர் விளக்குவோம். மக்களின் கொந்தளிப்பு அரசியல் நிலைப்பாட்டை ஆட்டம் காணச் செய்தது. கோத்தாவே வெளியேறு என்ற குரல் வானைப் பிளந்தது. கலகம் தொடங்கியது. பிரதமர் அந்தப் போராட்டத்தின் முதல் பலியானார். நிதி அமைச்சர் இரண்டாவது பலியானார். இருவருமே பதவி துறந்தனர். மத்தியவங்கி ஆளுனர் கப்ரால் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு மூன்றாவது பலியானார். அனாலும் மந்திரவாதிகளின் பவனி முடியவில்லை. கோத்தாபய நிர்க்கதியாக்கப்பட்டும் அவர் செய்த குற்றங்களை உணர்ந்தும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் அடித்தளத்தில் கட்டப்பட்ட அரசியல் பொருளாதார அமைப்புகளைக் களைந்தெறிந்து ஒரு புதிய அமைப்பைத் தழுவ அவர் விரும்பவில்லை. விரும்பினாலும் அவரை பதவியில் அமர்த்திய பிற்போக்குப் பேரினவாதிகள் விட்டிருக்கமாட்டார்கள். ஆகவே ஒரு புதிய மந்திரவாதியைத் தேடலானார். அவர்தான் ரணில் விக்கிரமசிங்ஹ.
ரணில் விக்கிரமசிங்ஹ தோல்வியின் இலக்கணம். அவரின் தோல்விப் பட்டியலை ஏற்கனவே விடிவெள்ளியில் வெளிவந்த கட்டுரைகள் சுட்டிக்காட்டின. ஆனாலும் ராஜபக்சாக்களின் ஆதரவாளன் என்பதை அவர் பிரதமராய் இயங்கிய ஆட்சிக்காலம் வெளிப்படுத்தியது. ஆதலால் ரணில் ராஜபக்ச என்ற ஒரு புதிய பெயரையும் அண்மையில் இவர் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பர்.
ஆனால் திக்கற்ற கோத்தாபயவுக்கு ரணிலே தெய்வமானார். எனவே மாற்றுப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் ரணில் பதவியேற்றார். இந்த மந்திரவாதி சர்வதேச நிதி நிறுவனத்தின் சிபார்சுகளை மந்திரக் கோலாகக் கொண்டு அவற்றிற்கமைய சில மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளார். அந்த நிறுவனத்தின் சிபார்சுகளுக்கு அமைய புதிதாக நியமனம் பெற்ற மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்ஹவும் வங்கியின் பணக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். அவையெல்லாம் நாட்டின் தற்போதைய பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்கு அவசியம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவையெல்லாம் ஏற்கனவே பௌத்த சிங்கள பேரினவாதத் தத்துவத்தில் அமைக்கப்பட்ட அரசியல் பொருளாதார அமைப்புகளை உறுதிப்படுத்துவனவாக அமையுமே ஒழிய அறப்போராளிகளை ஏமாற்றுவதற்காக ரணில் கூறுவதுபோன்று அவ்வமைப்புகளை மாற்றுதற்காக அல்ல. இறுதியாக அந்த அமைப்புகளை மேலும் பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி இன்னுமொரு மந்திரவாதியையும் அண்மையில் பின்கதவால் நுழையவிட்டு பாராளுமன்ற உறுப்பினராக்கியுள்ளார். அவர்தான் தம்மிக்க பெரேரா. அவரை தொழில்நுட்ப முதலீட்டு வளர்ச்சி அமைச்சராக நியமிக்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இவர் ஒரு மிகப்பெரும் பணக்காரர் என்பது தெரியும். ஆனால் அவர்தான் மிகப்பெரும் வரியிறுப்பாளரும் என்பது தெரிந்து இருந்தும் அவரின் மந்திரசக்தியால் வெள்ளம்போல் வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலம்தான் உண்மையை உணர்த்த வேண்டும்.
இத்தனை மந்திரவாதிகளும் ஒவ்வொருவராய் பவனிவந்தும் அவர்களில் எவரேனும் இலங்கையின் அரசியலையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து ஏறக்குறைய மூன்றிலொரு பகுதி மக்களை அன்னியராக்கிவிட்ட பேரினவாதக் கொள்கையை ஏனென்றுகூடக் கேட்பதற்குத் திராணியற்றவர்களாகக் காணப்படுவது ஏன்? காரணம், அவர்கள் யாவரும் அந்தக் கொள்கையால் உருவாக்கப்பட்டவர்கள். சுமார் எழுபத்தைந்து வருடகால பேரினவாத ஆதிக்கம் அவர்களின் சிந்தனைகளுக்கு ஓர் எல்லையை வகுத்துவிட்டது. அந்த எல்லைக்கு அப்பால் அவர்களால் சிந்திக்க முடியாது.
மறுக்க முடியாத ஓர் உண்மை
சுமார் 173 கோடி மக்களைக் கொண்ட நாடு வங்காளதேசம். இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தபோது உலகப் படத்திலேயே அந்த நாடு இடம்பெறவில்லை. மூன்றாவது உலகின் வறுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அண்மைக் காலம்வரை விளங்கிய ஒரு நாடு அது. எவ்வாறு அந்த நாடு இலங்கைக்கே பிச்சை போடும் நாடாக மாறியது? 733 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் (அதிலும் ஒரு பகுதி கடலிலிருந்து மீட்கப்பட்ட நிலங்கள்) 6 கோடி மக்களுடன் கொடிகட்டிப் பறக்கும் நாடு சிங்கப்பூர். எவ்வாறு அந்த நாடு 2019இல் 20 கோடி சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது? சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர நாலாவது விமானமுனையத்தை சிங்கப்பூர் இப்போது நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சுமார் 65 ஆயிரம் சதுர கிலோமீற்றர் வளமான நிலப்பரப்பையும் 21 கோடி மக்களையும் எத்தனையோ புராதன வரலாற்றுச் சின்னங்களையும் உள்ளடக்கிய இலங்கை ஏன் சுற்றுலாப் பயணிகளுக்காக உலகெலாம் கையேந்துகிறது? அது கடனாளியாக ஏன் மாறியது? காவிரிப்பூம்பட்டினத்துக்கே உணவூட்டிய ஈழம் ஏன் தமிழ் நாட்டின் சோற்றுப் பிச்சையில் பசி தீர்த்தது? வங்காளதேசமும் சிங்கை நகரும் உணர்த்தும் ஓர் உண்மையை எந்தப் பொருளியல் நிபுணனும் மறுக்கமுடியாது. அதாவது நாட்டு மக்கள் அனைவரினதும் ஒன்றுபட்ட அர்ப்பணிப்புச் சக்தியின்றி எந்தப் பொருளாதாரமும் அதன் முழுத்திறனையும் வெளிப்படுத்தி பூரண வளர்ச்சிகாண முடியாது. அவ்வாறாயின் 30 சதவீதமான மக்களை அன்னியப்படுத்திக் கொண்டு இலங்கை எவ்வாறு வளர்ச்சி காண முடியும்? இதனாலேதான் கடந்த எழுபத்தி நான்கு வருடங்களாகத் தத்தித்தத்தி நடந்த இலங்கைப் பொருளாதாரம் இன்று முடமாகிக் கிடக்கின்றது. பிரித்தாள்வதால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றலாம். ஆனால் பொருளாதார மேம்பாட்டை அடைய முடியாது. பேரினவாதச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் மந்திரவாதிகள் இதனை உணராதிருப்பதில் என்ன புதுமை?
பாவவிமோசனத்தின் விடிெவள்ளி
எல்லா இருள் மேகங்களின் முடிவிலும் ஒளிக்கோடொன்று தெரிவதுபோலும் உதயத்தை அறிவிக்கும் விடிவெள்ளியாகவும் ஒரு புதிய சமுதாயம் இலங்கையில் உருவாகுவதை யாரும் வரவேற்காமல் இருக்க முடியாது. எந்த இனத்தின் ஆதிக்கத்துக்காகப் பேரினவாதிகள் இதுவரை நாட்டையே குட்டிச் சுவராக்கினார்களோ அந்த இனத்தின் மடியிலிருந்தே இளம் வாலிபர்களும் யுவதிகளும் விழிப்புற்று அடிப்படை மாற்றம்கோரி ஓர் அறப்போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தம்மை ஆட்சிசெய்யும் அரசியல் பொருளாதார அமைப்புகள் தம்மையும் நாட்டின் பெரும்பான்மையான மக்களையும் வறுமைக்கோட்டுக்குத் தள்ளி ஒரு சுயநல வர்க்கம் தனது நிலையை மட்டும் உயர்த்தப் பாடுபடும் அபாயத்தை உணர்ந்து அதற்குக் காரணமாய் அமைந்த தலைமைத்துவங்களையும் வெளியேறுமாறு கோரி அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த வாலிபக்கூட்டம் போராடுகின்றது. அதன் போர்க்களத்தின் மையமாக காலிமுகத்திடல் உருவாகியுள்ளது.
இந்தப் போராட்டத்தின் வெற்றியிலேயே ஜென்மபாவத்துக்கு விமோசனமுண்டு என்பதை இக்கட்டுரை விலியுறுத்துகிறது. ஆனால் அவர்கள் வெற்றி பெறுவார்களா?
அரசியல் என்பது நாம் வாழும் யுகத்தின் தவிர்க்கமுடியாத ஒரு தீங்கு. அதிலே இறங்குவது சாகசக்காரன் கத்தியில் நடப்பது போன்ற ஒரு நிலை. அதனாற்தானோ என்னவோ இதுவரை அறப்போராளிகள் எந்த அரசியல் கட்சிகளையும் சாராது நடுநிலையில் நின்று போராடுகின்றனர். ஆனால் அந்த நிலையிலேயே அயராது நின்று போராடி வெற்றி காண முடியாது. ஆகவே ஒத்த சிந்தனையுள்ள அரசியல் குழுக்களுடனோ கட்சிகளுடனோ அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது நன்று. அவ்வாறான குழுக்களும் கட்சிகளும் ஏற்கனவே பெரும்பான்மை ஆதரவின்றித் தவிக்கின்றன. இலங்கையின் வாக்காளர் தொகையில் வாலிபர்களின் வாக்குகள் மூன்றிலிரண்டு பங்கை எட்டும் என்பது நம்பக்கூடிய ஒரு கணிப்பு. எனவே அவர்களின் வாக்குப்பலம் இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. இதனாலேதான் இளையவர்களின் போராட்டச் சிந்தனையை மாற்றுவதற்காகப் பிற்போக்காளர்கள் மறைமுகமாக இப்போது சதியில் இறங்கியுள்ளனர். வன்முறை கொண்டும் இப்போராட்டத்தை ஒழிக்க அவர்கள் தயங்கமாட்டார்கள். எனவே அறப்போராளிகள் ஒத்த சிந்தனையுள்ள அரசியல் குழுக்களுடனும் கட்சிகளுடனும் காலம் தாழ்த்தாது பேச்சுவார்த்தையில் இறங்கி ஆக்கபூர்வமான ஒரு செயற்திட்டத்துடன் பொதுமக்களை அணுகவேண்டும். பாவவிமோசனம் வேண்டுமானால் அவர்களின் போராட்டம் ஜெயிக்க வேண்டும்.
ஒரு வேண்டுகோள்
இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 30 சதவீதத்தினர் ஒதுக்கப்பட்ட பிரஜைகளாகவே பேரினவாதிகளால் இதுவரை மதிக்கப்பட்டு வந்துள்ளனர். அந்த நிலை மாறி அவர்களும் இலங்கையரே. ஆதலால் அவர்கள் சம உரிமையுள்ள பிரஜைகள் என்ற நிலையை அடைய வேண்டுமானால் ஒதுக்கப்பட்ட இனங்கள் அறப்போராளிகளுக்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும். அதைவிடுத்து, அன்னிய நாடுகள் தமது விடிவுக்கு வழிவகுக்கும் என்று நினைப்பது வெறும் பகற்கனவே. இந்த உண்மையை தமிழர்களும் முஸ்லிம்களும் உணர்வார்களா?- Vidivelli