ஜூலை 10 இற்கு முன் வைத்தியர் ஷாபிக்கு நிலுவை கொடுப்பனவுகள் வழங்கப்படும்
மேன் முறையீட்டு நீதிமன்றில் சுகாதார அமைச்சு உறுதியளிப்பு
(எம்.எப்.எம்.பஸீர்)
சட்ட விரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு, கட்டாய விடுமுறை காலத்தில் வழங்கப்படவேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்குள் பூரணமாக செலுத்தி முடிப்பதாக சுகாதார அமைச்சு மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு உறுதியளித்துள்ளது.
சட்ட மா அதிபர் ஊடாக இதனை சுகாதார அமைச்சு நேற்று முன் தினம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்து.
சட்ட விரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தனக்கு, வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு கோரி குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த எழுத்தாணை ( ரிட்) மனு நேற்று முன் தினம் மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது. மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம்மனு இவ்வாறு பரிசீலிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் குறித்த மனு பரிசீலிக்கப்பட்ட போது அரச நிர்வாக அமைச்சின் நிறுவனங்கள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகத்தின் கடிதம் ஒன்றினை மன்றில் முன்னிலைப்படுத்தி, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிரசன்னமான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன, வைத்தியர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில், அவருக்கு செலுத்தப்படவேண்டிய அடிப்படை சம்பளம், கொடுப்பணவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பணவு, இடைக்கால கொடுப்பணவுகள் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தார்.
இந் நிலையிலேயே, அம்மனு நேற்று முன் தினம் பரிசீலனைக்கு வந்தபோது, குறித்த அடிப்படை சம்பளம், கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, இடைக்கால கொடுப்பணவுகள் உள்ளிட்டவற்றை ஜூலை 10 ஆம் திகதிக்குள் முழுமையாக செலுத்துவதாக சுகாதார அமைச்சின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
வைத்தியர் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த எழுத்தாணை மனுவில், குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ, அவ்வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.எஸ். வீரபண்டார, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ்.எம். முணசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
வைத்தியர் சந்தன கெந்தன் கமுவ முன்னிலையில் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ள வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு ஆட்சேபனை இல்லை என அவரது சட்டத்தரணிகள் மன்றுக்கு தெரிவித்தனர்.– Vidivelli