கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
“கோத்தாவே போ”, “225 பேரும் வேண்டாம்” என்ற கோஷங்களுடன் ஆரம்பித்து, ‘கோத்தாபோ’ கிராமங்களுடன் பரவி, அரசியல் பொருளாதார அடிப்படை மாற்றங்களைக் கேட்டு ஒரு மாதத்துக்கும்மேலாக நாட்டின் சர்வ இன மக்களின் ஆதரவுடன் விழிப்படைந்த ஓர் இளைய தலைமுறையின் தலைமையின்கீழ் வளர்ந்த அறப்போராட்டத்தை வன்முறையாலாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென மகிந்த ராஜபக்ச எடுத்த முடிவு இறுதியில் அவரையே தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவைத்தது. அவரது பதவி துறப்புடன் ஏனைய ராஜபக்ச அமச்சர்களும் பதவி துறக்கவே ஜனாதிபதி கோத்தாபய மட்டும் நிர்க்கதியாக்கப்பட்டு மக்களின் வெறுப்புக்கு முகங்கொடுக்க நேரிட்டது. இருந்தும் அவர் பதவி துறக்க முடியாதென உறுதிபூண்டு தனது அரசியல் சதுரங்க ஆட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு ஒரு புதிய பகடையைத் தேடலானார். அந்தப் பகடையே ரணில் விக்கிரமசிங்ஹ.
யார் இந்த ரணில்?
ரணில் விக்கிரமசிங்ஹவின் கடந்தகால அரசியல் வரலாற்றை சுருக்கமாகக் கூறுவதானால் அவர் ஒரு தலைசிறந்த தோல்வியாளர். தன்னைப் பிரதமராகக்கொண்டு இயங்கிய நல்லாட்சி அரசாங்கத்தை தோல்விப்பாதையில் வழிநடத்திய வீரர். இலங்கையின் மிகப் பழமைவாய்ந்த அவரது ஐக்கிய தேசியக் கட்சியை கடந்த பொதுத் தேர்தலில் இலங்கையின் மொத்தத் தேர்தல் வாக்குகளில் இரண்டு சதவீதத்தைமட்டும் பெற்று ஒரேயொரு ஆசனத்தை மட்டும் கைப்பற்றி தனது ஆசனத்தையும்கூட இழந்த ஓர் சிறப்பாளன். அதனால் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியையும் பறிகொடுத்த பரிதாபத்துக்குரியவர். இவரின் தலைமையை நம்பி கூட்டுச் சேர்ந்த தமிழ் தலைவர்களையும் நட்டாற்றில் தவிக்க விட்டவர். இத்தனை தேல்விகளுக்கும் மத்தியில் ஏன் இவரைப் பொறுக்கியெடுத்து பிரதமராக்கினார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச? அதற்குக் காரணம் ரணில் நாடாளுமன்றத்துக்குள் பின்கதவால் நுழைந்து அங்கே அவர் காட்டிய ஒரு புது முகம். முதலாவதாக, மகிந்த அரசாங்கத்தின் அராஜகத்தையும் அவரின் குடும்ப ஆட்சியையும் ஊழல்களையும் அதனால் நாடும் நாட்டு மக்களும் அடைந்த பொருளாதார நட்டங்களையும் துன்பங்களையும் உணர்ந்த எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் அரசாங்கம் கலைக்கப்பட்டுப் புதிய தேர்தல் நடந்தப்பட வேண்டுமென கர்ஜிக்க, அதையே பெரும்பாலான பொதுமக்களும் வேண்டிநிற்க, ரணில் விக்கிரமசிங்ஹ மட்டும் இது தேர்தலுக்குரிய சந்தர்ப்பம் அல்ல, மாறாக எல்லாரும் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சந்தர்ப்பம் என தொடர்ந்து வாதாடினார்.
இரண்டாவதாக, மகிந்த அரசு காலம் தாழ்த்தாது சர்வதேச நிதி நிறுவனத்திடம் உதவிகேட்டு விரைய வேண்டுமென வலியுறுத்தியவர்களுள் முதன்மையானவர் இவர். மூன்றாவதாக, டொலர் நாணயப் பஞ்சத்தை நீக்க வெளிநாடுகளின் கூட்டடணியொன்றை நாடவேண்டுமெனவும் ஓர் ஆலோசனையை முன்வைத்தவர். இறுதியாக, பொருளாதார நலன்கருதி அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையையும் சீனச்சார்புடையதாக வைத்திருக்காமல் மேற்கு நாடுகள் சார்பானதாகவும் இந்தியா சார்பானதாகவும் நகர்த்த வேண்டுமெனவும் அதே நேரம் சீன நட்பையும் இழக்கக்கூடாதென வலியுறுத்தியவர். ஒட்டுமொத்தத்தில் ஏனைய தலைவர்கள் அரசியல் சார்பான மாற்றத்துக்காகப் போராட ரணில் மட்டும் பொருளாதாரத்தை முன்வைத்து அப்போராட்டத்திலிருந்து தனிப்படலானார். இதுவே ஜனாதிபதியின் காதுகளுக்கு மதுரகீதமாக ஒலித்தது. தனது பதவியையும் காப்பாற்றிக்கொண்டு தனது குடும்பத்துக்கும் பாவ விமோசனம் தேடவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் ரணிலே பொருத்தமானவர் என உணர்ந்தே அவரை பிரதமராக்கினார். அதே வேளை, மறைமுகமாக, ரணிலின் பதவிக்கு வெளிநாடுகளின் ஆதரவும் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவரை தன்னைமட்டும் நோக்கி வீசப்படும் எதிரணிகளின் கணைகள் இனிமேல் ரணிலை நோக்கியும் வீசப்படுமாதலால் அந்த வலியை அவருடன் பகிர்ந்து கொள்வதால் தனது வலி ஓரளவாவது குறையும் என்று கோத்தாபய நினைத்ததும் இன்னொரு காரணம். இந்த இறுதிக் காரணம் இப்போது நிரூபணமாகிக்கொண்டு வருகின்றது. அந்த அளவுக்கு கோத்தாவின் சதுரங்க ஆட்டம் வெற்றி பெற்றுள்ளது எனக்கருதலாம். ஆனால் அது பூரண வெற்றியை ஈட்டுமா?
அரசியல் உறுதிப்பாடு
அரசியல் உறுதிப்பாடு, பொருளாதார மீட்சி ஆகிய இரண்டையும் ரணிலினால் ஏற்படுத்த முடியவில்லையெனின் ஆட்டம் தோல்வியிலேயே முடியும். முதலில் அரசியல் உறுதிப்பாட்டிலுள்ள சில சிக்கல்களை அறிந்துகொள்ளுதல் அவசியம். முதலாவதாக ரணில் தலைமை தாங்கும் சர்வகட்சி அரசாங்கத்துக்கு மக்களது அங்கீகாரம் இல்லை. இது ஜனாதிபதியின் தயவில் மட்டும் உருவாகிய ஓர் அமைப்பு. இரண்டாவது, மக்களினதும் எதிரணியினதும் அறப்போராளிகளினதும் ஆதரவைப் பெறுவதற்காக அவர் மேற்கொள்ளும் அரசியல் தந்திரம் 21வது அரசியல் யாப்புச் சட்டத் திருத்தம். இதன் வெளிப்படையான நோக்கம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பிடுங்கி நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை உயர்த்தி முன்னர் நீக்கப்பட்ட 19வது திருத்தத்தை மீண்டும் புகுத்துவதாகும்.
ஆனால் ரணில் கொண்டுவந்த திருத்தப் பிரேரணை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் பலப்படுத்துவதாக எதிரணியினரும் சட்டத்தரணிகள் சங்கமும் குற்றஞ் சாட்டுகின்றன. உதாரணமாக, ஜனாதிபதிக்கு ஒரு சில அமைச்சுகளைப் பொறுப்பேற்பதற்கு இப்பிரேரணை வழிவகுத்துள்ளது எனத் தெரிகிறது. ரணிலின் இந்தக் கபடநாடகம் வெளிப்படுத்தப்படும் வேளையில் அரசியல் அமைதி ஏற்படுமா? இது அறப்போராட்டத்தை ஏமாற்றும் ஒரு தந்திரமாகத் தெரியவில்லையா? அதனால் சர்வட்சி அரசுக்குள்ளேயே வெடிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அது பொதுமக்களையும் தொழிற் சங்கங்களையும் ஆர்ப்பாட்டங்களில் இறக்குவது உறுதி. அடுத்து வரும் வாரங்கள் சர்வகட்சி ஆட்சிக்கு அரசியல் தலையிடியைக் கொடுப்பதை எதிர்பார்க்கலாம்.
சர்வகட்சி ஆட்சியிலும்கூட சிறுபான்மை இனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதையும் உணரவேண்டும். அறப்போராளிகளுக்கும் இது புரியும். எனவேதான் அவர்கள் சிறுபான்மை இனத்தலைமைகளுடன் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளனர். இது வெற்றியளிக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் எதிர்பார்ப்பும்.
பொருளாதார மீட்சி
பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே ரணில் பிரதமராக்கப்பட்டார். நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டைப்பற்றிய உண்மையான நிலமையை ஒளிவுமறைவின்றி தனது உரைகளில் வெளிப்படுத்தியதற்கு அவரைப் பாராட்ட வேண்டும். ஆனால் அதனை நிவர்த்திசெய்ய அவர் அறிவித்துள்ள நடவடிக்கைகளில் சில ஓட்டைகள் காணப்படுகின்றன. மொத்தமாகச் சொல்லப்போனால் அந்த நடவடிக்கைகள் சர்வதேச நிதி நிறுவனத்தைத் திருப்திப்படுத்த எடுத்த நடவடிக்கைகளாகும். ஒரு பக்கத்தில் மத்திய வங்கி நாணயக் கொள்கையில் கடினமான மாற்றங்களை சுயமாகவே மேற்கொண்டுள்ளது. அதனால் வங்கிகளின் வட்டிவீதம் உயர்ந்து இலங்கை நாணயத்தின் மதிப்பும் குறைவதை தடுக்க முடியாது. அது பணவீக்கத்தை மட்டுப்படுத்தினாலும் விலைவாசியை அதிகரிக்கும். இதனிடையில் அரசாங்கம் வரிக்கொள்கையிலும் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நேர் வரிகளும் நேரில் வரிகளும் உயர்ந்து, இறக்குமதிகளுக்கான வரிகளும் தடைகளும் பெருகி இறக்குமதிப் பொருள்களின் தொகையும் குறைந்து அவற்றின் சந்தை விலை பெருகுவது நிச்சயம். இவையெல்லாம் இறுதியாக மக்களின் அன்றாடக் கொள்வனவுகளைப் பாதிப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் இதனால் மிகவும் பாதிப்படைவது யார்? குறைந்ந வருமானத்தில் வாழும் குடும்பங்களின் நிலை பரிதாபத்துக்குள்ளாவது நிச்சயம். வியாபாரிகள் பணம் திரட்டுவர். ஆனால், பணக்காரர்களை இக்கட்டுப்பாடுகள் அதிகம் பாதிக்கப் போவதில்லை. ஆகையால் ஏற்கனவே விரிவடைந்திருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வு மேலும் விரிவடையும். ரணிலின் பொருளாதார மாற்றங்களில் ஏழைகளுக்கு நிவாரணி எங்கே? அதைப்பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் ஏன் அவரிடமிருந்து வரவில்லை?
அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைப்பதும் ரணிலின் நோக்கம். அது தேவைதான். ஆனால் எந்தச் செலவை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி எந்த முடிவும் இதுவரை இல்லை. உதாரணமாக அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கும் மொத்தச் சம்பளத் தொகையில் ஏறத்தாழ ஐம்பது சதவீதம் சுமார் 300,000 இராணுவ வீரர்களுக்குச் செல்கின்றது. இன்றைய நிலையில் இது ஒரு விரயம். இத்தனை இராணுவத்தினரும் தேவைதானா? இது அனாவசியமான ஓர் உள்நாட்டுப்போர் சுமத்திய ஒரு பாரம். இதனைக் களைந்தாலன்றி அரசின் செலவினங்களை குறைக்க முடியாது. ஆனால், இராணுவத்தில் கைவைக்கும் துணிவு ரணிலுக்கு உண்டா? அவ்வாறு துணிந்தாலும் கோத்தாபய விடுவாரா? ஜனாதிபதியின் இறுதி ஆயுதம் இதுதானே. அவருடைய திட்டம் இந்த இராணுவத்தினரை எவ்வாறாயினும் வடக்கிலும் கிழக்கிலும் நிலைப்படுத்தி அங்குள்ள நிலங்களை அவர்களைக்கொண்டு ஆக்கிரமித்து அவர்களை விவசாயிகளாக மாற்றி அந்த இரண்டு மாகாணங்களின் சிறுபான்மை இனச் செறிவை குலைப்பதாகும். அந்த வழியில் அரசாங்கத்தின் இராணுவச் செலவுப் பாரத்தையும் குறைப்பது கோத்தாபயவின் எண்ணம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். இது பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் நீண்ட காலக் கனவு என்பதையும் மறத்தலாகாது.
இற்கும் மேலாக நாட்டின் கடன் பளுவைச் சீர்படுத்துவதற்கு சர்வதேச நிதி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகளும் மேலும் கடினமான முறையில் மக்களின் பொருளாதார வாழ்வைப் பாதிக்கும். அந்தப் பளு மேலும் உயரப்போவது தடுக்க முடியாததொன்று. இந்தியாவும் சீனாவும் இப்போது காட்டும் கருணை என்ன நன்கொடையா? அதுவும் ஒரு வகை கடன்தானே. இவற்றையெல்லாம் நிதி நிறுவனத்தின் கண்காணிப்புடனும் ஓரிரண்டு ஆண்டுகளில் தீர்க்க முடியாது. ஆகவே திட்டமிட்ட முறையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ரணிலின் அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவும் இல்லை. அதேவேளை பரந்த ஒரு செயல் திட்டமும் அவரிடமில்லை. அவ்வாறான திட்டத்தைத்தான் அறப்போராளிகள் எதிர்பார்க்கின்றனர்.
வரிகளை விதிப்பது இலகு. ஆனால் அந்த வரிகளைத் திரட்டுவது வேறு விடயம். நாட்டின் வரி வசூலிப்பு இலாகாவில் உள்ள ஊழல்களை நீக்குவதற்கு ரணிலின் நடவடிக்கைகள் எதுவுமே இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக பின்வரும் கேள்வியை அரசிடம் முன்வைக்க வேண்டியுள்ளது. இந்த நாட்டின் மிகப்பெரும் செல்வந்தன் யார்? மிகப்பெரும் இலாபம் ஈட்டும் நிறுவனம் எது? அதே வேளை ஆகக்கூடிய வரியினைச் செலுத்துபவர் யார்? அல்லது நிறுவனம் எது? இந்த இரண்டு வகையான கேள்விகளுக்கும் விடை ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை என்றால் வரிவசூலிப்பில் ஓட்டைகள் உண்டு என்பதே அர்த்தம். இந்த ஓட்டைகளை அடைக்காமல் வரிகளின் பூரண வருவாயை அரசாங்கத்தால் அதிகரிக்க முடியுமா? நாட்டிலே நடைபெறும் ஊழல்களுள் இது பாரதூரமானது. இந்தச் சீர்கேடு இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. நடைமுறையிலுள்ள நிர்வாக அமைப்பில் மாற்றம் ஏற்படாதவரை பொருளாதார நடவடிக்கைகள் பூரண பலன் தரா. அறப்போராளிகள் வேண்டும் மறுசீரமைப்பில் இந்த மாற்றமும் அடங்கும்.
அண்மையில் உலக வங்கியிடம் அரசாங்கம் நிதியுதவி கேட்டபோது அது கொடுத்த பதில் என்னவெனில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட உதவிகளின் நோக்கங்களை மறுபரிசீலனை செய்து வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்குடன் வழங்கப்படும் என்பதாகும். அந்த நோக்குகள் யாவை? சிறு கமச்செய்கையாளர்களுக்கும், ஏழை மாணவர்களின் பள்ளிக்கூட மதிய உணவுக்கும், சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோர்க்கும், மற்றும் ஏழை மக்களுக்கும் நிவாரணம் வழங்குதல் அவற்றுள் அடங்கும். ஆனால் அந்த நிவாரணங்கள் வரும்போது அதனை உரியவர்களுக்குச் சேரக்கூடிய வகையில் திறம்பட இயங்கும் நிர்வாக அமைப்பு அரசாங்கத்திடம் உண்டா? உதவிப்பணங்களை இடையிலே உள்ள நடுவர்கள் பகிர்ந்துகொண்டு ஒரு சிறு தொகையே குறிப்பிட்டவர்களுக்குக் கிடைப்பதுதானே வரலாறு. இந்த வகையான சீர்திருத்தங்கள் செய்யக்கூடிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அறப்போராளிகளின் கோரிக்கை.
இருள் படரும்
எனவே ரணில் விக்கிரமசிங்ஹவை பகடையாகக் கொண்டு ஜனாதிபதி ஆடும் இந்த அரசியல் சதுரங்க ஆட்டம் பூரண வெற்றியடையப் போவதில்லை. ஒரு சில நன்மையான மாற்றங்கள் ஏற்படலாம். அவை பொருளாதார மறுசீரமைப்புக்குப் போதா. இருளில் முழ்கியுள்ள இலங்கை மீண்டும் ஒளிபெற அடிப்படைக் கொள்கைளில் புரட்சிகரமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை மேற்கொள்ள மக்களால் தெரியப்பட்ட ஓர் அரசாங்கம் அவசியம். அடுத்துவரும் வாரங்களிலும் மாதங்களிலும் மக்களின் கிளர்ச்சி அதிகரிப்பதை தடுக்க முடியாது. அறப்போராட்டமும் ஒரு புதிய உத்வேகத்தை அடையலாம் எனவும் எதிர்பார்க்க இடமுண்டு. அவ்வாறு இடம்பெறுகையில் ரணிலின் அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன? காலம் பதில் சொல்லட்டும்.-Vidivelli