கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
மந்திகளின் குணம் மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை இரைதேடித் தாவுதல். இந்தக் குணமே இலங்கையின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலரையும் தமது சொந்த நலனுக்காக, தேச நலன் என்ற பெயரில் கட்சிக்குக் கட்சி அல்லது அணிக்கு அணி தாவ வைக்கின்றது. ஆகையினால் இந்த நாடாளுமன்றத்தை மந்திகளின் மன்றம் என்றழைப்பதில் தவறேதும் உண்டா? கடந்த சில தினங்களாக அங்கு இடம்பெற்ற தாவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இப்போது அந்த மந்திகளுட் சில அமைச்சரவை ஒன்றையும் அமைத்துள்ளன. இந்த அமைச்சரவை சாதிக்கப்போவதென்ன?
பிரதமர் ரணில்
திட்டமிட்டபடி கலவரமொன்றை உருவாக்கியபின் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்து அரசாங்கச் செலவில் திருகோணமலை கடற்படைத் தளத்திலே பாதுகாப்பாக இருந்து மீண்டும் தக்க பாதுகாப்புடன் அவரது புதல்வர் ஒருவருடன் நாடாளுமன்றத்தினுள் நுழைந்துள்ளார். அவர் விட்டுச்சென்ற பிரதமர் வெற்றிடத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் எவருடனும் கலந்தாலோசியாது, தன்னிச்சையாக நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து ஜனாதிபதி ராஜபக்ச தேர்தலில் தோல்வியுற்ற ரணில் விக்கிரமசிங்ஹவுக்கு வழங்கி, அந்த நியமனத்தை நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு செய்ததாக மக்களுக்கு அறிவித்தார். உண்மையிலேயே அதுதான் காரணமா அல்லது வேறேதும் நோக்கங்களுண்டா?
நாடே “கோத்தாவே போ” என்று குரலெழுப்புகிறது. அது மட்டுமல்ல. நாட்டின் இன்றைய பசிப்பிணிக்கும் பண வங்குறோத்துக்கும் ராஜபக்சாக்களின் ஆட்சியும் ஊழல்களுமே முக்கிய காரணம் என்றும் அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும் என்றும் நாட்டின் இளம் சந்ததியினர் ஒரு மாதத்துக்கும் மேலாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போராட்டத்தின் மையமாக காலிமுகத்திடல் மாறியுள்ளது. அந்தத்திடல் ஒரு நிறைமாதக் கற்பிணியாக நவஇலங்கை என்ற ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க பிரசவவேதனையால் துடித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை கடந்த வாரக் கட்டுரை விளக்கியது. அந்தக் குழந்தையை அதன் தாயின் வயிற்றிலேயே நசுக்கிக் கொன்றுவிட கடந்த ஒன்பதாம் திகதி மகிந்த ராஜபக்சவின் அனுசணையுடன் குண்டர்கள் கூட்டமொன்று முயன்று தோல்வியும் கண்டனர். நாடே ஒரு போர்க்களமாகி உயிர்களும் உடமைகளும் பலியாகின. இத்தனையும் நடந்தும் மக்கள் தன்னை வெறுக்கின்றனர் என்பதை உணர்ந்தும் கோத்தாபய ராஜபக்ச பதிவியிலிருந்து விலகாமல் அரசியல் யாப்பின் சரத்துகளை அரணாகக்கொண்டு பாதுகாப்பாக இருப்பது அவர் விலகினால் அவரும் ஏனைய அவரது சகோதரர்களும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்தே. அறப்போராட்டத்தில் குதித்திருக்கும் இளைய தலைமுறையினர் ராஜபக்சாக்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரிக்கும்வரை ஓயமாட்டார்கள். ஐ. நாவின் மனித உரிமை நிறுவனமும் புலம்பெயர் இலங்கையரும் அதற்கான அழுத்தங்களை கொடுத்துக்கொண்டே இருப்பர்.
இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்காவது கட்டியெழுப்பி மக்களின் உடனடித் தேவைகளையும் சிறிதளவாவது பூர்த்திசெய்தால் மக்களின் வெறுப்பும் தணியும், அதன்பின் மீண்டும் பழையபடி ராஜபக்சாக்களின் வழமையான அரசியலையும் தொடரலாம் என்ற எண்ணத்தில் தன்னையும் தனது சகோதரர்களையும் காப்பாற்றி பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பக்கூடிய அனுபவமும் நம்பிக்கையுள்ள ஒருவரை தற்காலிகத் தலைவனாக்க முனைந்ததன் விளைவே ரணில் விக்கிரமசிங்ஹ பிரதமராக நியமிக்கப்பட்டமை. அவரும் நாட்டின் நலனுக்காக அப்பதவியை ஏற்றுக்கொண்டதாக முழங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டு, அவர் குடும்பத்தின் மற்றய ராஜபக்சக்களின் ஆசீர்வாதத்தைப்பெற்று, அதே ராஜபக்சக்களின் அரசியல் கட்சியின் ஆதரவுடன் இயங்கும் ரணில் அந்த நன்றியை மறந்து ராஜபக்சக்களின் நலன்களைப் புறக்கணிப்பாரா? சிலர் ஏற்கனவே ரணில் விக்கரமசிங்ஹவை ‘ரணில் ராஜபக்ச‘ என அழைக்கத் தொடங்கிவிட்டனர். இருந்தும் பிரதமர் ரணில் தனது சர்வதேச அனுபவத்தினால் வெளிநாட்டு உதவிகளைப்பெற்று சர்வதேச நிதி நிறுவனத்தின் ஆலோசனைகளுடன் ஒருவாறு மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவாராயின் அவரது கைகள் ஓங்கி ஜனாதிபதிக்கு அது ஒரு சவாலாகவும் முடியலாம் அல்லவா? “கோத்தாவே போ” என்ற கோஷத்தை அவரே உரக்கவும் ஒலிக்கலாம். அது கோத்தாவுக்கே ஒரு புதிய தலையிடியாகவும் அமையலாம். அந்தப் போட்டியில் யார் ஜெயிப்பார் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
மந்திகளின் தாவல்
ரணிலின் தலைமையின்கீழ் இடைக்கால அரசொன்றை அமைக்க முடிவுசெய்யப் பட்டவுடன் எதிரணியில் வீற்றிருந்த பல பிரதிநிதிகள் விரைந்தோடி அவருடன் சேரலாயினர். அவர்களும் நாட்டின் நலன் கருதியே நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்றனர். அதுதான் உண்மையா? அறப்போராளிகளோ நாடாளுமன்றத்திலுள்ள 225 பிரதிநிதிகளையும் வீடு செல்லுமாறு கோருகின்றனர். அப்படி அவர்கள் வீடு சென்றால் அவர்களுள் அனேகர் மீண்டும் பிரதிநிதிகளாகத் திரும்புவது கஷ்டம். ஆகவே எஞ்சியுள்ள இரண்டரை வருடங்களை எப்படியாயினும் நாடாளுமன்றத்தில் அமர்ந்து அதன் சுகபோகங்களை அனுபவிப்பதே இவர்களின் பிரதான நோக்கம். அதற்குப் பெயர் தேசாபிமானம் என்றும் கூறுகின்றனர். இரைதேடும் இந்த மந்திகளுக்கு இரையாகின்றது உழைப்பாளிகள் செலுத்தும் வரிப்பணம்.
அரசியல் உறுதிப்பாடு
அறப்போராட்டம், அதனை முடக்கி ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், பிரதமரின் ராஜினாமா, அதனை தொடர்ந்த அமைச்சரவையின் கலைப்பு ஆகியனவெல்லாம் சேர்ந்து அரசியல் உறுதிப்பாட்டை குலைத்துவிட்டன. ஒரு மாற்றுப் பிரதமரையும் அவருடன் பணியாற்ற ஒரு அமைச்சரவையையும் பல கட்சிகளிலிருந்தும் பொறுக்கி எடுத்து ஜனாதிபதி நியமித்துள்ள போதிலும் அந்த அவைக்கு மக்களின் ஆதரவு கிடையாது. இதுவரை ஒரு நிதி அமைச்சரையும் ஜனாதிபதி நியமிக்காமல் இருப்பது இன்றைய பொருளாதார நெருக்கடியில் ஒரு பாரதூரமான குறைபாடு. சர்வதேச நிதி நிறுவனத்துடனான முக்கியமான பேச்சுவார்த்ததைகள் முடிவாகும் வேளையில் அந்த அறிக்கையில் கைச்சாத்திட நிதி அமைச்சர் அவசியம்.
அந்த அறிக்கை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும்வரை அந்நிறுவனத்தின் ஆலோசனைகளை அமுல்படுத்த முடியாது. அந்நிறுவனத்தின் பொருளாதார உதவிகளும் தடைப்படும். இவையெல்லாம் அரசியல் உறுதிப்பாடு இன்னும் ஏற்படவில்லை என்பதையே விளக்குகின்றன.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே அரசியல் உறுதிப்பாடு இல்லையென்றால் வெளியே அது இருக்குமா? அது இல்லாமல் இந்த இடைக்கால அரசும் அதன் பிரதமரும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது. எனவே ஒரு பொதுத் தேர்தலை விரைவில் நடத்தாமல் உறுதியான அரசாங்கத்தை நிலைப்படுத்த முடியாது.
பொருளாதார அபிவிருத்தி
பொதுத் தேர்தல் மூலம் அரசாங்கமொன்றை அமைத்து அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தினாலும் பொருளாதார வளர்ச்சி காண்பதற்கு ஆட்சிக்குவரும் அரசாங்கம் நாட்டின் பொருளாதார அமைப்பில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரும் திறனுடையதாக இருக்குமா என்பது ஒரு கேள்விக் குறி. அறப்போராட்டத்தின் ஓர் அடிப்படைக் கோரிக்கை அவ்வாறான மாற்றங்கள் வேண்டும் என்பதே. சர்வதேச நிதி நிறுவனத்தின் அனைத்து ஆலோசனைகளும் சந்தைப் பொருளாதாரம் தங்குதடையின்றி நடைபெறுவதற்குரிய வழிவகைகளை செப்பனிட்டுக் கொடுப்பதாகவே அமையும். ஆனால் அந்த நிறுவனமும் சில அடிப்படை மாற்றங்களை உடனடியாகக் கொண்டுவராமல் பொருளாதாரத்தைச் சீர்படுத்த முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. உதாரணமாக, ஊழல் ஒழிப்பு, இலங்கை விமான சேவை போன்ற அரச நிறுவனங்களின் சீரமைப்பு, மாபியாக்களின் ஒழிப்பு போன்றவை தற்போது இருக்கும் பொருளாதார அமைப்பின் சீர்கேடுகளுக்கு தக்க சான்றுகள். இந்த அமைப்புக்குப் பாதுகாவலர்களாக பலமுள்ள சக்திகள் நாட்டில் இயங்குகின்றன. அந்தச் சக்திகளை எதிர்த்துப் போராடக்கூடிய வலுவுள்ள ஓர் அரசாங்கம் மக்களால் தெரிவுசெய்யப்படும்வரை பொருளாதார வளர்ச்சி துரிதப்பட முடியாது. அந்த வலு ரணில் அரசாங்கத்துக்கு கிடையாது. இதனை பின்வரும் சம்பவம் தெளிவுபடுத்துகிறது.
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ ஒரு துணிகரமான வேண்டுகோளை அண்மையில் விடுத்துள்ளார். அதாவது, நாடு எதிர்கொண்டுள்ள டொலர் நாணயப் பிரச்சினையைப் போக்குவதற்கு உள்நாட்டிலே அந்த நாணயத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் அவற்றை உடனடியாக உள்நாட்டு வங்கிகளில் வைப்புக்களாகவோ அல்லது அதிகப்படியான மாற்று வீதத்தில் ரூபாயாகவோ வெளிக்கொணரவேண்டும் என்பதே அந்த வேண்டுகோள். அதைச் செய்யாத பட்சத்தில் அரசு அந்தப் பதுக்கல்களை உடனடியாகக் கைப்பற்றி நாட்டுக்காகச் செலவிடவேண்டும் என்பதும் அந்த வேண்டுகோளின் ஒரு பகுதி. இந்த வேண்டுகோளை நாட்டின் புதினப்பத்திரிகைகள் இதுவரை பிரபல்யப்படுத்தாததும், ரணிலின் அரசாங்கமும் அதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காததும் மர்மமே. இந்த வேண்டுகோள் நாட்டின் கடந்தகாலப் பொருளாதார வரலாற்றின் ஒரு முக்கியமான சீர்கேட்டை அம்பலப்படுத்துகிறது.
பணம் பதுக்கல் ஊழலின் மற்றுமோர் அங்கம். அதுவே மாபியாக்களின் அதிகாரத்துக்கும் ஆணிவேர். சந்தைச் சக்திகளை வழிமறித்து அவற்றை தங்குதடையின்றி இயங்கவிடாமல் திசைதிருப்பும் ஓர் ஆயுதமே பணம் பதுக்கல். வருமானவரி இலாகாவுக்கு உண்மையான வருமானத்தை மறைத்து பணத்தைப் பதுக்குவது தேசத்துரோகம். இத்துரோகிகளுக்குப் பாடம் புகட்டுவதற்காகத்தான் 1970இல் கலாநிநிதி என். எம். பெரேரா அவர்கள் நிதி அமைச்சராகப் பணியாற்றும் போது 100, 500, 1000 ரூபா பணநோட்டுகளை செல்லுபடியற்றனவாக்கி அவற்றை வங்கிகளில் சமர்ப்பித்துப் புதிய நோட்டுகளைப் பெறுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன் நோக்கம் பணப்பதுக்கலை ஒழித்து வருமான வரிக்கணக்குகளை சீரமைப்பதாகும். பணத்தை பதுக்கி வைத்துக்கொண்டு ஏழைகள்போல் வெளியில் நடமாடிய எத்தனையோ பேர் இந்தத் திட்டத்தினால் பிடிபட்டனர். இப்போது நந்தலால் அவர்கள் குறிவைத்திருப்பது ரூபா நோட்டுகளையல்ல, டொலர் நோட்டுகளை. அதனை இலங்கை அரசாங்கம் செல்லாக்காசாக மாற்ற முடியாது. அது வெளிநாட்டு நாணயம். ஆனால் சட்டத்தின் துணையுடன் அவற்றை பதுக்கியவர்களிடமிருந்து அபகரிக்க முடியும். இங்கேதான் ரணில் அரசாங்கத்திடம் ஒரு கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
அவருடைய அமைச்சர்களும் அவரின் அரசுக்கு ஆதரவு வழங்கும் ஏனைய பிரதிநிதிகளும் நாட்டுக்காகவே அதாவது தேசாபிமானப் பற்றினாலேயே அந்த ஆதரவை வழங்கியுள்ளதாகப் பறைசாற்றுகின்றனர். அவ்வாறானால் ஏன் பிரதமர் அவர்கள் இந்தத் தேசாபிமானிகளை தமது டொலர் இருக்கைகளைப்பற்றிய விபரங்களை வெளிப்படுத்துமாறு கேட்க முடியாது? நாடாளுமன்றத்தின் 225 பிரதிநிதிகளும் தமது டொலர் இருப்புகளைப்பற்றிய விபரங்களை உடனடியாக வெளிப்படுத்த அரசாங்கம் கட்டளை பிறப்பிக்க வேண்டும். அதே போன்று நாட்டிலுள்ள ஏனைய டொலர் பதுக்கிகளின் இருப்புகளையும் அரசாங்க அதிகாரிகளால் கைப்பற்றுவதற்கும் உடனடியாக கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு அபகரிக்கப்படும் டொலர்களால் மட்டும் நாட்டின் பிரச்சினை முற்றாகத் தீர்ந்துவிடப்போவதில்லை. ஆனால் ஊழலையும் மாபியாக்களையும் ஒழிப்பதற்கு இது ஓர் ஆரம்பமாக அமையும். அதைச் செயற்படுத்த இந்த அரசாங்கத்துக்குத் துணிவுண்டா என்பது சந்தேகமே.
அரசியல் அமைப்பிலும் பொருளாதார அமைப்பிலும் மாற்றம் வேண்டும் என்று அறப் போராளிகள் கேட்பதை ரணில் அரசாங்கம் ஆதரிப்பதாயின் அதனைச் செயலிலே காட்டுவதற்கு இது ஓர் அரிய சந்தர்ப்பம். இதையாவது சர்வகட்சி அரசாங்கம் சாதிக்குமா?- Vidivelli