உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் இளைஞர்கள் ஆறேழுபேர் மாத்திரம் ஒன்றுகூடி செய்த வேலையல்ல
பின்னணியில் பாரிய மறைகரம் உள்ளது என்கிறார் கர்தினால்
எம்.எம்.இஸ்மதுல் றஹுமான்
சாதாரண முஸ்லிம் இளைஞர்கள் ஆறேழு பேர் சேர்ந்து நாம் ஏதாவது செய்வோம் என நினைத்துச் செய்ததல்ல இந்தக் குண்டுத் தாக்குதல். சிறந்த ஒருங்கிணைப்புடன் ஆறு இடங்களில் மனிதப் படுகொலைகள் நடந்துள்ளன. இதற்குப் பின்னால் முஸ்லிம் இளைஞர்கள் மாத்திரமல்ல அதற்கும் மேலால் சிக்கலான மறைகரம் இருப்பது எனக்கு புரிந்தது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3வது வருட நினைவை முன்னிட்டு இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணியின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்டுவபிட்டிய சாந்த செபஸ்தியன் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட. ஆர்ப்பாட்டம் பேரணி கட்டுவபிட்டி வீதி,கொழும்பு வீதி, பிரதான வீதி, கிறீன்ஸ் வீதி ஊடாக கூட்ட மேடையை வந்தடைந்தது. சர்வ மதத் தலைவர்களும் கலந்துகொண்ட இக்கண்டனக் கூட்டத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எனக்குப் பின்னால் புகைப்படங்களை ஏந்தியுள்ளவர்களைப் பார்த்தேன். அதில் உள்ளவை மிருகங்களல்ல. மனிதர்களே. அவர்கள் யாருக்கு அன்பு செலுத்தினார்களோ யாருடைய வாழ்க்கையை கட்டியெழுப்பினார்களோ அவர்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது கவலையளிக்கக்கூடிய அனுபவம். இவர்களில் பெரும்பாலானவர்கள் வனங்குவதற்காகவும், பிராத்திப்பதற்காகவும் ஈஸ்டர் ஆராதனையில் கலந்துகொள்வதற்கும் தேவஸ்தானத்திற்கும் சிலர் ஈஸ்டர் உணவு அருந்துவதற்காக ஹோட்டல்களுக்கும் சென்றவர்கள். சகலரினதும் உயிர்கள் ஒரு நிமிடத்தில் நாசமாக்கப்பட்டன.
எனக்கு புரிந்தது இதில் ஒரு நாச வேலை இருப்பதாக. ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் (அது ஏழாக திட்டமிடப்பட்டிருந்தது) வெடிப்பு சம்பவம் நடந்தன.
முன்னாள் சட்டமாஅதிபர் தம்புல டி லிவேரா கூறியது போல், அந்த சூழ்ச்சி இவர்களை பயன்படுத்தி செய்த படுகொலையே. இது தொடர்பாக சரியான விசாரணை நடாத்த இடம்கொடுக்காமல் அனைத்தும் கீழே போடப்பட்டன.
விசாரணை உரிய முறையில் நடைபெற்றிருந்தால் இதன் பின்னால் இருந்தவர்கள் யார் என்பது தெரியவந்திருக்கும். ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சிலர் முட்டுக்கட்டை போட்டனர். விசாரணை நடக்கும் போது சாட்சிகள் வெளிப்படும்போது அவர்களை அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றனர். பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர்.
அதனால் உண்மைகள் வெளிவரவில்லை. அவர்கள் ஆரம்பத்திலிருந்தே கூறிவந்தார்கள். அந்தப் பிரிவினரே இதற்கும் பின்னால் இருந்தார்கள். அதற்கு மேல் ஒன்றுமில்லை என்றார்கள். அதற்கு எதிராக இருந்த சகல சாட்சியங்களையும் இவர்கள் அழிக்க முற்பட்டார்கள்.
இது தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையின் சுருக்கத்தை பார்த்தால் இது ஒரு சதித் திட்டத்தின் ஊடாக நடந்திருக்கும் தாக்குதல்; என்பதைப் புரியலாம். இதனை இந்த நாட்டை ஆட்சி செய்பவர்களும் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் அதனை வாசிப்பதில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி அந்தக் குழுவின் மேல் சுமத்தி கையைக் கழுவிக்கொள்ள எத்தனிக்கிறார்கள்.
269 மரணங்களுக்கும் சிந்திய இரத்தத்திற்கும் பலம்வாய்ந்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
நீர்கொழும்பில் இன்று முழு நாட்டிற்கும் உரத்த குரலில் சொல்வது இந்த ஊழல், மோசடி முறையை மாற்றுவோம் என்பதையே.
சட்டம் ஜனாதிபதியின் கீழ் உள்ளது. ஜனாதிபதிக்கு சட்டமியற்ற இயலும். சட்ட மாஅதிபர் ஜனாதிபதிக்கு கீழ்ப்படிபவர். அவர் சொல்வதையே சட்ட மாஅதிபர் செய்கிறார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஏராளம் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்ட சிலதை மாத்திரம் நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்தனர். அதற்காக 6 அமைச்சர்களைக் கொண்ட குழுவை நியமித்தனர். இந்த சந்தர்ப்பத்தில்தான் இதற்கு மேல் அவர்களுடன் வேலை செய்யமுடியாது என்பதை நாம் அறிந்துகொண்டோம். அவர்களுக்கு சார்பானதை மட்டும் அமுல்படுத்த முயற்சி எடுத்தனர். இதற்குப் பின்னால் சதி இருப்பதை இதன் மூலம் தெரிந்துகொண்டோம்.
இந்த இலங்கையில் ஊழல் மோசடி வளர்ந்து எமக்கு வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் வரிசைகள். மக்களின் தேவைகள்,வயிற்றுப்பசி தொடர்பாக அக்கறை இல்லையா? இவர்களின் தொழிலுக்கு அடிவிழுந்தால் எப்படி வாழ்வது? இன்று எத்தனை குடும்பம் பசியால் வாடுகின்றனர். அவர்களின் பசியை அரசியல்வாதிகள் உணர்வதில்லையா?.
இன்று நாம் நீர்கொழும்பில் நடத்தும் ஆர்ப்பாட்டம் இலங்கை முழுவதிலும் ஏற்பட்டுள்ளதில் ஒரு பகுதியாகும். நாம் காலிமுகத்திடல் இளைஞர், யுவதிகளுடன் ஒன்றிணைவோம். இலங்கை எதிர்பார்க்கின்ற துறைசார்ந்த ஒரு குழுவினரே அதனைச் செய்கின்றனர். அப்படி அந்த இளைஞர், யுவதிகள் சிந்திப்பதாயின் எமது நாடு பாதுகாப்பானது. அதனை யாரும் மட்டம்தட்ட முடியாது. இது ஒரு சமயத்திற்கோ, ஒரு இனத்திற்கோ, ஒரு மொழிக்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல. நாம் இலங்கையர்கள். இந்த அழகிய நாட்டின் பிரஜைகள்.
நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நடத்தும் இப்போராட்டம் நியாயம், சாதாரணம் மட்டுமன்றி முழு நாட்டையும் மீட்கும் போராட்டமாகும்.
1948 ல் சுதந்திரம் கிடைத்தாலும் 74 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள் நாட்டை காட்டிக்கொடுத்தார்கள். நாட்டை நாசமான நிலைக்கு கொண்டு சென்றார்கள்.
இது அரசுக்கு எதிராகச் செய்யும் போராட்டம் என்பதை விட முழு நாடும் மீண்டும் சுதந்திரமடைந்து ஊழல் மோசடியிலிருந்து வெளிவருவதற்கான போராட்டமாகவே நான் காண்கிறேன்.
நான் இன்று இரவு றோம் தேசத்திற்குச் செல்கிறேன். தனிமையில் செல்லவில்லை. கட்டுவபிட்டிய சாந்த செபஸ்தியன் தேவஸ்தானம், கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவஸ்தானம், மட்டக்களப்பு சியோன் தேவஸ்தானம் ஆகிய இடங்களில் நடாத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் 35 பேரை அழைத்துச் செல்கிறேன். பாப்பரசரின் அழைப்பின் பேரிலேயே இவர்களை அழைத்துச் சொல்கிறேன். பாப்பரசரை நான் சந்தித்த போது ஈஸ்டர் தாக்குதலின் தற்போதைய நிலைமையை கேட்டறிந்தார். இலங்கை அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் இதனை சர்வதேசத்திற்கு எடுத்துச் செய்வோம் என எனக்கு கூறினார். அதற்கிணங்கவே இவர்களை அழைத்துச் செல்கிறேன்.
எவரும் அரசியலை பாவித்து இன, மத வாதத்தை தூண்ட இடமளிக்காமல் சகோதரத்துவத்துடன் இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம். முழு நாட்டின் நலனைப் பற்றியே சிந்திப்போம்.
சிறு, சிறு குற்றங்களுக்காக கூடுதலானவர்கள் சிறைகளில் உள்ளனர். ஆனால் பெரிய, பெரிய நபர்கள் செய்தவற்றைப் பார்த்தால் அவர்கள் எப்படி மாட மாளிகைகளில் வாழ்வது? இது எமக்கு கேள்விக்குறியே.
கிலோமீட்டர் கணக்கில் நடந்து வந்து இந்த பாரிய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட உங்கள் அனைவர்களுக்கும் எனது நன்றிகள். எமக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டத்தை நாம் கைவிடமாட்டோம். இந்தக் கொலைகளை செய்தவர்கள் யார் என்பதையாவது குறைந்தபட்சம் தெரிந்துகொள்ள வேண்டும். எமக்கு மன்னிப்பு வழங்க முடியும். அது பிரச்சினையல்ல. ஆனால் நேர்மையாக குற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். குற்றப்பரிகாரம் பெற குறித்த நபர் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்.
அநுராதபுரம் ராஜாங்கன சத்தாரத்ன தேரர் இங்கு உரையாற்றுகையில், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். மனித உயிர்களுடன் விளையாட முயல வேண்டாம். இங்கு கத்தோலிக்க பக்தர்கள் பௌத்த, முஸ்லிம் சமயத்தவர்கள் ஒன்றுகூடி உள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இரத்த ஆறு ஓட இருந்த இந்த நாட்டை பாதுகாத்தவர் எனக்கு முன்னாலுள்ள கர்தினாலாகும். அவர் இல்லாவிட்டால் இந்த நாடு இரத்தக் களறியாக மாறியிருக்கும். மோசமான அரசியல்வாதிகளும், ஞானசார தேரர், டான் பிரசாத் போன்றவர்கள் கர்தினாலுக்கு பல்வேறு அவப்பெயர்களைச் சொல்லி அழைத்தார்கள்.
மனதைத் தட்டிக் கேளுங்கள். இங்கே ஏந்தியுள்ள புகைப்படங்களில் உள்ளவர்கள் உங்கள் அம்மா, அப்பா, சகோதரர்களாக இருந்தால் நீங்கள் எடுக்கும் தீர்மானம் என்ன என்பதை கேட்க விரும்புகிறேன்.
கர்தினால் மற்றும் கத்தோலிக்க சபை இந்த தேசத்தில் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார்கள். அதனால் நந்தசேன ராஜபக்சவுக்குச் சொல்கிறேன் நீங்கள்தான் இதன் கொலைகாரன். நீங்கள் எல்லோரும் இதற்கு பொறுப்புக் கூறவேண்டும். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள இவ்வாறு மனிதர்களை கொலை செய்வது உகந்ததா?
என்னிடம் இன, மத, குல, கட்சி, நிற பேதமில்லை. எவருக்கு அசாதாரணம் நடக்கின்றதோ அவர்கள் சார்பாக நான் முன்நிற்பேன். உங்கள் முன் நிற்க இன்று சந்தர்ப்பம் கிடைத்தது.
நீங்கள் எடுத்துச் செல்லும் போராட்டத்தைப் போல் காலி முகத்திடலில் இளைஞர், யுவதிகள் போராடுகின்றனர். அவர்களை சிறையில் அடைக்க முயற்சிகின்றனர். கத்தோலிக்க பிதாக்களை சிஐடி க்கு அழைக்கின்றனர். இது பௌத்தர்களாகிய எமக்கு வெட்கமாகும்.
மகாநாயக்க தேரர்கள் தமது பதவிகளை இள வயதினருக்கு வழங்க வேண்டும். தேசிய ஒற்றுமை முக்கியமாகும். நந்தசேன ராஜபக்சவுக்கு புண்ணியம் கிடைக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவர்களும் ஒன்றாக செயல்படுகின்றனர்.
இவர்களை போகச் சொன்னால் போவதில்லை. வீட்டிற்குப் போனால் இவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று தெரியும். உங்கள் அனைவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு வெற்றிகிடைக்க பிரார்திக்கிறேன் என்றார்.
மௌலவி ஏ.ரி.எம்.சல்மான் இங்கு உரையாற்றுகையில், குற்றம் செய்தவர்கள் அரச குடும்பத்தில் எந்த தரத்தில் இருந்தாலும் பரவியில்லை, அவர்கள் அனைவர்களுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும். இன்று பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி, எதிர்கட்சி என்பன விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் எம்மை ஏமாற்றிக்கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார்கள். எமது சகோதரர்கள் எண்ணெய் வரிசைகளில் நிற்கிறார்கள். பாராளுமன்றத்திலுள்ள 225 பேர்களில் எவராவது எண்ணெய் வரிசையில் நிற்பதை யாராவது கண்டிருக்கின்றீர்களா? ஆனால் அவர்கள் கூறுகிறார்கள் மக்களின் துன்பம் தமக்குத் தெரியும் என்று. வாயால் மட்டும்தான் சொல்கிறார்கள். உள்ளத்தால் சொல்வதில்லை. எம்மை ஏமாற்றுகிறார்கள்.
வானவில் நகரமான நீர்கொழும்பில் கத்தோலிக்க, பௌத்த, முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தார்கள். கர்தினால், நீர்கொழும்பிலுள்ள கத்தோலிக்க பிதாக்கள் மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள் ஒன்றிணைந்து அந்தத் தீ ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள் என்றார்.- Vidivelli