இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள காலப்பகுதி இதுவாகும். இத்தருணத்தில்தான் முஸ்லிம்களாகிய நாம் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்குத் தயாராகி வருகிறோம்.
உண்மையில் முஸ்லிம்கள் பெருநாளைக் கூட சந்தோசமாகக் கொண்டாடுகின்ற நிலைமை இப்போதில்லை. பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம் காரணமாக பெருநாளைக்குத் தேவையான உணவு, உடைகளைக் கூட கொள்வனவு செய்ய முடியாத நிலையிலேயே பல குடும்பங்கள் உள்ளன. முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் உள்ள தனவந்தர்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் உதவியால் இவ்வாறான குடும்பங்களுக்கு ஓரளவு உதவிகள் வழங்கப்படுகின்ற போதிலும் அவை அவர்களது முழுமையான தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவையல்ல என்பதுதான் யதார்த்தமாகும்.
இன்றைய பொருளாதார நெருக்கடியானது மக்களை சகல வழிகளிலும் பாதித்துள்ளது. செலவுகள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ள போதிலும் வருமானம் அதிகரிக்கவில்லை. இதன் காரணமாக குடும்பத் தலைவர்கள் பலத்த நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகளுக்குத் தேவையான பால் மாவைக் கூட வாங்குவதற்கு வசதியற்ற நிலையில் மக்கள் புலம்பித்திரிகின்றனர். பிள்ளைகளின் கல்விச் செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலையில், அவர்களது கல்வி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலை வந்துள்ளதாக பலரும் கவலைப்படுகின்றனர். எதுவித வருமானமுமற்ற அல்லது பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் இதைவிடப் பாரிய சவால்களைச் சந்தித்து வருகின்றன.
இந் நிலையில் இவ்வாறு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவுகின்ற வகையில் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த இக்கட்டான தருணத்தில் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசையாக இருப்பதன் மூலமே இந்த சவாலிலிருந்து வெளிவர முடியும்.
குறிப்பாக எவ்வாறான நெருக்கடிகள் வருகின்ற போதிலும் முஸ்லிம் சமூகம் கல்வியில் மேலும் பின்தங்காதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது நம் அனைவரதும் கடப்பாடாகும். பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு கை கொடுக்கக் கூடிய திட்டங்களை பள்ளிவாசல்கள் தோறும் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
கல்வியில் முன்னேறுவதன் மூலம் மாத்திரமே நம்மால் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியதாகவிருக்கும். அடுத்து வரும் ஓரிரு ஆண்டுகள் நாம் பலத்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என்பதே யதார்த்தமாகும். இதனையே பொருளியல் நிபுணர்கள் பலரும் அழுத்தமாகக் கூறி வருகின்றனர். எனினும் அதன் பின்னர் ஏற்படக் கூடிய சுபீட்சமான எதிர்காலத்தில் நமது பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் அதற்கான தயார்படுத்தல்களை இப்போதே செய்ய வேண்டியது அவசியமாகும்.
அந்தவகையில்தான், முஸ்லிம் சமூகத்திலுள்ள தனவந்தர்கள், சமூக நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் என்பன கூட்டிணைந்து நமது சமூகத்தின் கல்வி எதிர்காலம் குறித்து சீரியசான திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும் என்றும் இதற்காக ஸகாத் பணத்தை தாராளமாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறோம்.
மறுபுறம், நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் இடம்பெற்று வருவதை நாம் அறிவோம். ஆட்சியாளர்களை வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி மக்கள் தினமும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இதில் இன மத வேறுபாடின்றி சகலரும் பங்கேற்றுள்ளனர். முஸ்லிம்களும் இப் போராட்டங்களில் ஒதுங்கியிராது, தமது பங்களிப்புகளை வழங்கி வருவதை காண முடிகிறது.
இந்தப் போராட்டங்களைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம்களுக்கு இரண்டு கடப்பாடுகள் உள்ளன. ஒன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் உள்ள ஊழலும் மோசடியும் நிறைந்த அரசியல் கலாசாரத்திற்கு எதிராகப் போராடுவது. அடுத்தது தேசிய அரசியலில் நிலவும் சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடுவது.
தேசிய அரசியல் சீர்கேடுகளுக்கு எதிராக முஸ்லிம் பகுதிகளில் ஆங்காங்கே போராட்டங்கள் இடம்பெறுகின்ற போதிலும் முஸ்லிம் அரசியல் சீரழிவுகளுக்கு எதிரான போராட்டங்களை போதியளவில் காண முடியவில்லை. முஸ்லிம் சமூகம் இன்று அரசியல், சமூக, கல்வி, கலாசார, பொருளாதார ரீதியாக பின்னடைவுகளைச் சந்தித்திருப்பதற்கு ஊழல், மோசடிமிக்க முஸ்லிம் அரசியல்வாதிகளே பிரதான காரணமாவர். எனவேதான் இந்த மோசமான அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கல்வி கற்ற பொருத்தமான இளம் தலைமுறையொன்றை அரசியல் தலைவர்களாக நாம் நியமிக்காதவரை நமக்கு ஒருபோதும் வெற்றிகிட்டப் போவதில்லை.
ரமழான் மனிதர்களில் மாத்திரமின்றி, சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த வந்த மாதமாகும். அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக நோன்பு நோற்று, அமல்களில் ஈடுபட்டு நம்மில் மாற்றங்களுக்கு வித்திட்டது போன்றே நமது சமூகத்திலும் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும். அதற்கான கொள்கைகளை நமக்குள் வகுத்துச் செயற்பட வேண்டும் என வலியுறுத் விரும்புகிறோம்.
அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.
-Vidivelli