ஏ.ஆர்.ஏ.பரீல்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளடங்களாக ஒட்டு மொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த 9 ஆம் திகதி முதல் கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெற்றுவரும் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்தும் வீரியமடைந்தும் வருகிறது.
அமைதியான முறையில் இன, மத, அரசியல் பேதங்களுக்கும் அப்பால் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டத்தை குழப்புவதற்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் ஊடாக பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்றான அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களை சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளைப் பயன்படுத்தி அடக்குவதென்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இதுவரை காலம் இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஆட்சியாளர்கள் நாட்டை நிர்வகித்து வந்தமை நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்தது. நாடு இன்று பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையிலும் இனவாத குழுக்களும், அமைப்புகளும் இனவாதிகளும் தொடர்ந்தும் நாட்டில், இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை உருவாக்க முயற்சிப்பது அபாயகரமானதாகும்.
போராட்டத்தில் இஸ்லாமிய அடைப்படைவாதிகளா?
கடந்த காலங்களில் நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக வன்செயல்களைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்த பொதுபல சேனா அமைப்பு மீண்டும் களத்தில் இறங்கியுள்ளமை மிகவும் பயங்கரமானதாகும். அளுத்கம, திகன, கண்டி மற்றும் அம்பாறை போன்ற பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களின் பின்னணியில் இருந்த இனவாத பெளத்த அமைப்பினை அனைவரும் அறிவார்கள்.
இந்நிலையில் காலி முகத்திடலில் கடந்த 9 ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்களை இஸ்லாமிய அடிப்படைவாத போராட்டமாக பொதுபலசேனா அமைப்பு திசை திருப்புவதற்கு முயன்று வருகிறது. காலி முகத்திடல் போராட்டத்தில் முஸ்லிம்களும் பங்கேற்று வருகிறார்கள்.
எரிவாயு, எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு, மருந்துப்பொருட்களின் தட்டுப்பாடு, பால்மாவுக்கான பற்றாக்குறை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களே இப்போராட்ட களத்தில் இறங்கியுள்ளார்கள். இந்நிலையில் முஸ்லிம்களும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளமையை எவராலும் எதிர்க்க முடியாது.
பொதுபலசேனா அமைப்பு காலி முகத்திடல் மக்கள் போராட்டம் குறித்து ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நியாயப்படுத்துவதற்காகவே களமிறங்கியுள்ளதாக பொதுபல சேனாவின் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
முஸ்லிம்கள் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் மற்றும் அனைத்து பெளத்த மகாநாயக்க தேரர்களை குறி வைத்து எதிர்ப்பினை வெளியிட்டு வருவதை போராட்ட களத்தில் காணக்கூடியதாக இருக்கிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் வேறுபாடுகளின்றி இடம்பெற்று வரும் இளைஞர் யுவதிகளின் போராட்டத்தில் சந்தர்ப்பவாத மத அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், மற்றும் நாட்டின் சிங்கள பெளத்தர்களை எதிர்ப்பவர்கள் தங்களது இலக்கினை நிறைவேற்றிக்கொள்ளவதற்கு போராட்டக்களத்தை பயன்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளதெனவும் பொதுபலசேனாவில் ஊடக செயலாளர் எரந்த கே நவரத்ன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டை ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காகவே காலி முகத்திடல் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஏனைய மக்களுடன் இணைந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். நாடு இன்றுள்ள நிலையில் அதனைக் காப்பாற்றுவதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் இலக்காக இருக்கிறது.
இந்நிலையில் சந்தர்ப்பவாத இனவாத பெளத்த அமைப்பு தனது சுயநலத்துக்காக இன்றைய ஆட்சியாளர்களின் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாக முத்திரை குத்துவது நாட்டை மீண்டும் பாதாளத்தில் தள்ளிவிடுவதற்கு சமமாகும்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இந்நாட்டில் பரப்புவதற்கு பங்களிப்புச் செய்து கொண்டிருக்கும் சலபிவாதிகள், வஹாப்வாதிகள், ஜமா அத்தே இஸ்லாமியின் கொள்கைவாதிகள் காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதை நாம் தற்போது இனம் கண்டுள்ளோம் எனவும் பொதுபல சேனாவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்ட களத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் ஏனைய மக்களுடன் இணைந்து அமைதியான முறையிலே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் எதிராகவேகோஷமெழுப்புகின்றனர். கோத்தாபய வீட்டுக்குப் போ என்றே குரலெழுப்புகின்றனர். இவர்களை எப்படி வஹாப்வாதிகளாக சலப்வாதிகளாக , ஜமாஅத்தே இஸ்லாமிய கொள்கைவாதிகளாக இனங் காணமுடியும். பொதுபலசேனாவின் இவ்வாறான அறிக்கைகள் நாட்டினுள் மீண்டும் பிரச்சினைகளையே உருவாக்கும். நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்.
அரசுக்கெதிரான போராட்டங்களில் மக்கள் இன, மத, அரசியல் பேதமின்றி ஒன்றுபட்டுவிட்டனர். இன மதவாதத்தை தூண்டி குளிர்காய்ந்தவர்களையும் அதிகாரத்தில் இருந்தவர்களையும் மக்கள் இனங்கண்டுவிட்டனர். தாம் இதுவரை காலம் இவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்து விட்டனர். இந்த மாற்றத்தை சகிக்க முடியாத பொதுபலசேனா அமைப்பு மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டுள்ளது.
ஒமல்பே சோபித தேரர்
அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கடந்த 9 ஆம் திகதி முதல் காலி முகத்திடலில் முன்னெடுத்துவரும் போராட்டம் மதத்தையோ,இனத்தையோ முன்னிலைப்படுத்தியதான போராட்டமல்ல என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்; ‘நாட்டின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி இனம், மதம் ஆகியவற்றைத் துறந்து நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் பெளத்த தேரர்கள் என குறிப்பிட்டுக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு சார்பாக செயற்படும் தரப்பினர்கள் கடந்த வாரம் கொழும்பில் போலியான போராட்டங்களை நம்பி சிங்கள, பெளத்த மக்களாணை மீது கை வைக்க வேண்டாம்’ என குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டமை முற்றிலும் வெறுக்கத்தக்கதாகும். அவர்களின் செயற்பாடு பெளத்த அறக்கொள்கைக்கு முரணானதாகும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீதும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் நாட்டு மக்களுக்கு துளியளவும் நம்பிக்கையோ, விருப்பமோ கிடையாது. மக்களின் அதிருப்தியை பெற்றுக்கொண்டு சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என பெளத்த அறக் கொள்கை வலியுறுத்தியுள்ளது. பெளத்த அறக் கொள்கையினை அரச தலைவர்கள் பின்பற்றுவார்களாயின் அவர்கள் எப்போதோ பதவி விலகியிருக்க வேண்டும். மக்களின் அபிலாஷை, மக்களாணைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்றார்.
பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகளே தொடர்ந்தும் இனவாத கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இவ்வாறான அமைப்புகளுக்கு எதிராக தற்போது பெரும்பான்மை சமூகத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை நாட்டில் இன ஒற்றுமைக்கு ஓர் ஆரம்பம் எனலாம்.
கடும்போக்கு நிலையம் (Radical Centre)
‘‘இனவாத சக்திகள் மக்கள் போராட்டத்தை குழப்புவதற்கு முயற்சிக்கின்றன. மக்கள் புரட்சியை அடக்குவதற்கு இனவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சக்திகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவர்களது முயற்சிகளை மக்கள் போராட்டம் தோற்கடித்துள்ளது‘‘ என கடும் போக்கு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாடொன்றில் கடும்போக்கு நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட ஹரேந்திரன் கிருஷ்ணசாமி இவ்வாறு தெரிவித்தார்.
இவ் ஊடக மாநாட்டில் கடும்போக்கு நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கேசால் ஜயசிங்க, ஜயனி அபே சேகர ஆகியோரும் கருத்து வெளியிட்டார்கள்.
இனவாதம், மதவாதம் பலாத்காரமாக பொதுமக்கள் மீது ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக திணிக்கப்பட்டது. இது அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இன்று மக்களால் அத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் போராட்டத்தை சுயநலம் கருதிய பொதுபல சேனா அமைப்பு அடிப்படைவாதிகளின் செயற்பாடு என பிரசாரம் செய்கிறது. இதனை மக்கள் நம்பமாட்டார்கள்.
‘பொதுபலசேனாவில் இப்போது சூழ்ச்சிக்காரர்கள் இல்லை’ என அவ்வமைப்பின் ஊடக செயலாளர் எரந்த கே நவரத்ன முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவின் மூலம் ஏற்கனவே பொதுபலசேனாவில் சூழ்ச்சிக்காரர்கள் இருந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. எரந்த கே நவரத்ன ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுள்ளவர்கள்
இந்நாட்டில் நூற்றாண்டு காலமாக வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் நாட்டுப் பற்றுள்ளவர்கள். இலங்கையின் சுதந்திரத்துக்காக போராடி பங்களிப்புச் செய்தவர்கள்.
தங்களுக்கென்று தனிநாடு கோராதவர்கள் இந்நிலையில் அண்மைக்காலமாக அவர்கள் இலக்கு வைக்கப்பட்டு வருகிறார்கள்.
முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த உரிமைகளுக்கு சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப்பறிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசுக்கெதிரான மக்கள் போராட்டங்களிலும் இனவாதிகளால் முஸ்லிம்கள் சந்தேகக் கண்கொண்டே நோக்கப்படுகிறார்கள்.
என்றாலும் மக்கள் மத்தியில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பான்மை மக்கள் இன,மதவாதிகளைப் புறக்கணித்து வருகிறார்கள். அவர்களுக்கெதிராக குரலெழுப்புகிறார்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, நல்லிணக்கம் வளர்வதற்கு நாம் பிரார்த்திப்போம்.- Vidivelli