ரம­ழானும் குடும்­பமும்!

0 658

அஷ்ஷெய்க்
அக்ரம் அப்துல் ஸமத்

ரமழான் நன்­மை­க­ளுக்­கு­ரிய மாதம், பாவ மன்­னிப்­புக்­கு­ரிய மாதம், மாற்­றத்­திற்­கு­ரிய மாதம். ரம­ழானின் இந்த அனைத்துப் பயன்­களும் தனி மனித வடி­விலும், குடும்ப வடி­விலும், சமூக வடி­விலும் பெறப்­பட முடி­யு­மா­ன­வையே. நபி­ய­வர்­க­ளது வாழ்வில் இந்த எல்லா வடி­வங்­க­ளுக்கும் வழி­காட்­டல்கள் காணப்­ப­டு­கின்­றன.

அல்­லாஹுத் தஆலா அல்­குர்­ஆனில் கூறு­கிறான். “ஈமான் கொண்­ட­வர்­களே! மனி­தர்­களும் கற்­களும் எரி­பொ­ருட்­களாய் இருக்­கின்ற நரக நெருப்­பி­லி­ருந்து உங்­க­ளையும், உங்கள் குடும்­பத்­தி­ன­ரையும் காப்­பாற்றிக் கொள்­ளுங்கள்.” (தஹ்ரீம்- 6) மற்றோர் இடத்தில், “உங்கள் குடும்­பத்­தி­ன­ருக்கு தொழு­மாறு கட்­ட­ளை­யி­டுங்கள். இந்த விட­யத்தில் மிகுந்த பொறு­மை­யுடன் நடந்து கொள்­ளுங்கள்.” (தாஹா 132) என்­கி­றது அல்­குர்ஆன்.

ஆயிஷா (றழி) அவர்கள் கூறு­கி­றார்கள். “ரம­ழானின் இறுதிப் பத்து நாட்கள் வந்­து­விட்டால் நபி­ய­வர்கள் இரவுப் பொழுதை இபா­தத்­களில் கழிப்­பார்கள். தனது குடும்­பத்­தி­ன­ரையும் அதற்­காக எழுப்பி விடு­வார்கள். இபா­தத்­களில் மிகவும் சீரி­ய­ஸாக முனைப்­போடு ஈடு­ப­டு­வார்கள்.” (முஸ்லிம்)

மேலே கூறப்­பட்ட இரண்டு அல்­குர்ஆன் வச­னங்­களும் ரமழான் காலத்தில் மாத்­தி­ர­மன்றி, பொது­வாக எல்லாக் காலங்­க­ளிலும் குடும்­பத்தின் மீதான கவனம் எவ்­வாறு இருக்க வேண்டும் என்­பது தொடர்பில் பேசு­கின்­றன. ஒருவன் தனக்குத் தானே பொறுப்­பா­னவன். அவ­னுக்கு ஒரு சமூகப் பொறுப்பும் இருக்­கி­றது என்­பது போல், தனது குடும்­பத்­திற்கும் அவன் பொறுப்­பா­னவன் என்­ப­தையும் அந்தப் பொறுப்பு மிகுந்த பொறு­மை­யுடன் சுமக்­கப்­பட வேண்­டிய ஒன்று என்­ப­தையும் இவ்­வ­ச­னங்கள் வலி­யு­றுத்­து­கின்­றன.
அந்தக் குடும்பப் பொறுப்பை, குறிப்­பாக ரமழான் காலத்தில் நபி­ய­வர்கள் எவ்­வாறு நிறை­வேற்­றி­னார்கள் என்­ப­தற்­கான ஓர் உதா­ர­ண­மா­கவே மேற்­கூ­றப்­பட்ட ஹதீஸ் காணப்­ப­டு­கின்­றது.

குடும்பம் ஒரு பொறுப்பு என்­பதை வலி­யு­றுத்தும் மற்­றொரு ஹதீஸைப் பாருங்கள். “நீங்கள் ஒவ்­வொ­ரு­வரும் பொறுப்­பா­ளர்கள். உங்­க­ளது பொறுப்பு பற்றி விசா­ரிக்­கப்­ப­டு­வீர்கள். ஒரு ஆண் தனது குடும்­பத்­திற்குப் பொறுப்­பா­னவன். ஒரு பெண் தனது வீட்­டிற்கும் பிள்­ளை­க­ளுக்கும் பொறுப்­பா­னவள். இந்தப் பொறுப்­புக்கள் பற்றி அவர்கள் விசா­ரிக்­கப்­ப­டு­வார்கள்.” (புஹாரி, முஸ்லிம்)

மேற்­கூ­றப்­பட்ட அல்­குர்ஆன் வச­னங்­களும் ஹதீஸ்­களும் ஓர் உண்­மையைச் சொல்­கின்­றன. ரம­ழானை நாம் தனி மனி­தர்­க­ளாகப் பயன்­ப­டுத்­து­கின்றோம். சமூ­க­மா­கவும் பயன்­ப­டுத்­து­கின்றோம். அதேபோல் அதனைக் குடும்­ப­மா­கவும் பயன்­ப­டுத்த வேண்டும். அவ்­வாறு செய்­வது ஒரு குடும்­பத்தின் மீதான பொறுப்பும் கட­மை­யு­மாகும்.

அடுத்து, குடும்பம் என்­பது தனியே கணவன்- மனைவி, பிள்­ளைகள் என்ற எல்­லையை மாத்­திரம் குறித்து நிற்க மாட்­டாது. மாற்­ற­மாக பெற்றோர், கண­வனின் குடும்­பத்­தினர், மனை­வியின் குடும்­பத்­தினர், அய­ல­வர்கள், நண்­பர்கள் என்ற விரிந்த வட்­டத்­தையே குறித்து நிற்­கின்­றது. மற்­றொரு வகையில் கூறினால், ஒரு குடும்­பத்தின் தொடர்­பு­களும் உற­வு­களும் கணவன், மனைவி, பிள்­ளை­க­ளுடன் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­வை­யல்ல. மாற்­ற­மாக மேற்­கூ­றப்­பட்ட அனைத்து உற­வு­க­ளு­டனும் அவர்கள் அன்­றாடம் தொடர்பு கொள்­கி­றார்கள். குடும்ப வாழ்க்கை இந்த அனைத்து உற­வு­க­ளு­டனும் இணைந்­தது. ரமழான் காலத்தில் சிறந்த பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்ற ஒரு குடும்பம், இந்த அனைத்து தொடர்­பு­க­ளையும் கண்­டிப்­பாக கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ரம­ழானைச் சிறந்த முறையில் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக ஒரு குடும்பம் திட்­ட­மி­டு­கின்­ற­போது, அங்கு வீட்டின் புறத் தோற்றம், கணவன்- மனைவி, பிள்­ளைகள், பிள்­ளை­க­ளது நண்­பர்கள், பெற்­றோர்கள், உற­வி­னர்கள், அய­ல­வர்கள், நண்­பர்கள் போன்ற எல்லாப் பக்­கங்­களும் அந்தத் திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­ப­டு­வது மிகவும் பொருத்­த­மா­ன­தாகும். ஏனெனில், இவற்றைத் தவிர்த்து, ஒரு குடும்ப வாழ்க்கை காணப்­ப­டு­வது சிர­ம­மா­னது.

அடுத்து, ரமழான் மாதத்தில் செய்­யப்­பட வேண்­டிய அமல்கள் தொடர்பில், நோக்­கும்­போது பொது­வாக வலி­யு­றுத்­தப்­படும் விடயம் எது­வெனில், ரமழான் காலத்தில் எல்லா வித­மான செயற்­பா­டு­க­ளுக்கும் பன்­ம­டங்கு நன்­மைகள் கிடைக்­கின்­றன என்­ப­தாகும். இந்தக் கருத்­தைத்தான் கீழ்­வரும் ஹதீஸ் தெளி­வு­ப­டுத்­து­கி­றது. ஸல்­மானுல் பாரிஸி (றழி) அவர்கள் கூறு­கி­றார்கள். ஷஃபான் மாதத்தின் இறுதி நாளில் நபி­ய­வர்கள் எமக்கு மத்­தியில் இவ்­வாறு உரை­யாற்­றி­னார்கள் – “மக்­களே, மகத்­தான ஒரு மாதம் உங்­க­ளிடம் வந்­தி­ருக்­கி­றது. இது பரகத் பொருந்­திய ஒரு மாதம். ஆயிரம் மாதங்­களை விட சிறந்த ஒரு இரவு இந்த மாதத்­தி­லேயே காணப்­ப­டு­கின்­றது. இதன் பகல் பொழு­து­களில் நோன்பு நோற்­பது கட­மை­யாகும். இரவுப் பொழு­து­களில் நின்று வணங்­கு­வது சுன்­னத்­தாகும்.

இதில் எவர் ஒரு நற்­கா­ரி­யத்தைச் செய்­கி­றாரோ, அவர் ஏனைய நாட்­களில் எழு­பது கட­மை­களை நிறை­வேற்­றி­யதைப் போன்­ற­தாகும். இது பொறு­மையின் மாதம். பொறு­மைக்­கு­ரிய கூலி சுவர்க்­க­மாகும். இது துயர் துடைக்கும் மாதம். இது ஒரு முஃமி­னு­டைய ரிஸ்க் அதி­க­ரிக்­கப்­படும் மாதம். இதில் ஒரு­வ­ருக்கு நோன்பு திறக்க உதவி செய்தால் அந்த செயல் அவ­ருக்­கான பாவ மன்­னிப்­பா­கவும் நரக விடு­த­லை­யா­கவும் காணப்­படும். இவ­ருக்கும் நோன்பு நோற்­ற­வரைப் போன்ற கூலி கிடைக்கும். அதே­வேளை நோன்­பா­ளியின் கூலியில் எந்தக் குறை­பாடும் ஏற்­பட மாட்­டாது…” (இப்னு குஸைமா)

மேற்­கூ­றப்­பட்ட ஹதீஸ் வலி­யு­றுத்தும் சில உண்­மை­களைப் பாருங்கள். முதலில் ரமழான் மாதம் வரும் முன்­னரே நபி­ய­வர்கள் அதனை வர­வேற்கும் மான­சீகத் தயார் நிலையை ஸஹா­பாக்­களில் தோற்­று­வித்­தார்கள். இரண்­டா­வது, எந்த நற்­செ­ய­லுக்கும் சாதா­ரண நாட்­களில் அதனை செய்­வதை விடவும் எழு­பது மடங்கு நன்­மைகள் கிடைக்­கின்­றன. எனவே, ரமழான் காலத்தில் ஒரு மனி­த­னது ஒவ்­வொரு அசை­வுக்கும் நன்­மைகள் கிடைப்­ப­தற்­கான வாய்ப்பு காணப்­ப­டு­கி­றது. இது வாழ்வின் எல்லாப் பகு­தி­க­ளு­டனும் சம்­பந்­தப்­பட்­ட­தாகும்.

மூன்­றா­வது, இது பிறர் துயர் துடைக்கும் மாதம் என்­கி­றது. அடுத்த மனி­தர்­க­ளது தேவைகள், கஷ்­டங்­களை அறிந்து, அவற்­றிற்கு பரி­காரம் தேடுதல் இந்த மாதத்தின் மிக முக்­கிய நற்­செ­யல்­களில் ஒன்று மாத்­தி­ர­மன்றி, இந்த மாதத்தின் முக்­கிய நோக்­கங்­களில் ஒன்­று­மாகும்.

நான்­கா­வ­தாக, நோன்பு நோற்றல், இரவில் நின்று வணங்­குதல், லைலதுல் கத்ர் இரவைப் பயன்­ப­டுத்­துதல், பொறு­மையைக் கடை­பி­டித்தல், நோன்பு திறக்க உதவி செய்தல் போன்ற பல நற்­செ­யல்­களை உதா­ர­ண­மாகக் குறிப்­பிட்­டி­ருப்­பதைக் காணலாம். அத்­துடன். இவற்றின் விளை­வு­க­ளாக பரகத் ஏற்­ப­டுதல், சுவர்க்கம் கிடைத்தல், பாவ மன்­னிப்புக் கிடைத்தல், நரக விடு­தலை கிடைத்தல், கூலி பல மடங்­காகக் கிடைத்தல் என பல்­வகைப் பயன்கள் விளை­வு­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ரம­ழானில் மேற்­கொள்­ளப்­படும் நற்­செ­யல்கள் குறித்து பொது­வாக இமாம்கள் முன்­வைக்கும் ஒரு கருத்தை இங்கு சற்று ஞாப­கப்­ப­டுத்திச் செல்­வது பொருத்தம் என நினைக்­கிறேன்.

ரம­ழானில் நேர­டி­யான இபா­தத்­களில் ஈடு­ப­டு­வது சிறந்­ததா? அல்­லது பொது­வான சமூக, தஃவா பணி­களில் ஈடு­ப­டு­வது சிறந்­ததா? என்ற கேள்­விக்குப் பதில் சொல்லும் வகையில் இமாம்கள் அந்தக் கருத்தை முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். அதா­வது ரம­ழானில் பொது­வாக எல்­லா­வி­த­மான நற்­செ­யல்­களும் வர­வேற்­கத்­தக்­க­வையே. நிச்­ச­ய­மாக அவற்­றிற்கு ஏனைய நாட்­களை விடவும் பல மடங்கு நன்­மைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

அந்த வகையில், குடும்ப உற­வுகள், கல்விப் பணி, தஃவாப் பணி, அர­சியல் பணி, சமூகப் பணிகள் என எந்த வகை­யான செய­லாக இருப்­பினும் அவற்­றிற்கு ரம­ழானில் விஷேட நன்­மைகள் உள்­ளன என்­பதில் சந்­தே­க­மில்லை. ஆனால் இவற்றில் மிகச் சிறந்­தது எது எனின், நிச்­ச­ய­மாக நேர­டி­யான வணக்க வழி­பா­டு­க­ளாகும். நபி­ய­வர்­க­ளது வாழ்­விலும் சரி, பின்னர் ஸஹா­பாக்­க­ளு­டைய வாழ்­விலும் சரி, தொடர்ந்த எல்லா ஸாலி­ஹான மனி­தர்­க­ளது வாழ்­விலும் சரி இந்த உண்­மையை அவ­தா­னிக்­கலாம். சில இமாம்கள் தமது ஹதீஸ் மஜ்­லிஸ்­க­ளையும் பிக்ஹு மஜ்­லிஸ்­க­ளையும் இக்­கா­லத்தில் நிறுத்தி வைத்­து­விட்டு இபா­தத்­க­ளுக்­காக நேரம் ஒதுக்­கி­ய­மையைக் காணலாம்.

அந்த வகையில் ரம­ழானில் கூடுதல் முக்­கி­யத்­து­வத்தைப் பெற வேண்­டி­யதும் அதிக நேரங்கள் ஒதுக்­கப்­பட வேண்­டி­யதும் நேர­டி­யான இபா­தத்­க­ளாகும். அதே­நேரம் ஏனைய நற்­செ­யல்­க­ளையும் வழமை போல் செய்­யலாம். ஏனெனில், நபி­ய­வர்­களின் வழி­காட்­டலில் பல மடங்கு கூலியை எல்லா நற்­செ­யல்­களும் பெற்றுத் தரும் என்­பதும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

மேற்­கூ­றப்­பட்ட பின்­பு­லத்­துடன் ரமழான் மாதத்தை சிறந்த முறையில் பயன்­ப­டுத்த நினைக்­கின்ற ஒரு குடும்­பத்தைப் பொறுத்­த­வரை, குடும்பம் என்ற விரிந்த பரப்பு அவர்­க­ளது கவ­னத்தில் இருக்க வேண்டும் என்­பது போல், ரம­ழா­னுக்­கான செயற்­பா­டு­களில் முக்­கி­யத்­துவம் அளிக்க வேண்­டி­யவை எவை என்­பதும் அவர்­க­ளது கவ­னத்தில் காணப்­பட வேண்­டி­ய­தாகும்.

அந்த வகையில் ஒரு குடும்பம் ரம­ழானில் கவனம் செலுத்த வேண்­டிய விட­யங்கள் குறித்த சில ஆலோ­ச­னைகள் கீழே வழங்­கப்­ப­டு­கின்­றன.
1. முதலில் வீட்டின் உற்­புறத் தோற்­றத்தில் ரமழான் களையை ஏற்­ப­டுத்­துங்கள். ரம­ழானை ஞாப­கப்­ப­டுத்தும் வாச­கங்கள், துஆக்கள் போன்­றன வீட்டுச் சுவர்­களை அலங்­க­ரிக்­கலாம். கிரா­அத்கள், பாடல்கள் என்­பன வீட்டுக் கணி­னி­களில் ஒலித்துக் கொண்­டி­ருக்­கலாம்.

2. குடும்­பத்­தினர் அனை­வரும் ஒன்­று­கூடும், ஒரு வீட்டு மஜ்­லிஸை நாளாந்தம், அல்­லது இரண்டு நாட்­க­ளுக்கு ஒரு தடவை அல்­லது குறைந்­த­பட்சம் வாராந்தம் அமைத்துக் கொள்­ளுங்கள். அதிலே எல்­லோரும் இணைந்து அல்­குர்­ஆனை ஓதவும், ரம­ழானின் சிறப்­புக்­க­ளையும் சட்­டங்­க­ளையும் கற்றுக் கொள்­ளவும் சந்­தர்ப்பம் எடுத்துக் கொள்­ளுங்கள். இந்த நிகழ்வில் பிள்­ளை­க­ளுக்­கான இடம் மிகவும் முக்­கி­ய­மா­னது. அவர்­க­ளது தரத்­திற்கு ஏற்ப, சில பாடங்­களை நடத்­தவும், கதைகள் சம்­ப­வங்­களைச் சொல்­லவும் அவர்கள் பொறுப்­ப­ளிக்­கப்­படல் வேண்டும். வீட்டில் மனை­வியோ அல்­லது வளர்ந்த ஒரு பிள்­ளையோ சபைக்குத் தலைமை தாங்­கலாம்.

3. மேற்­சொன்ன அதே ஒழுங்­கிலோ அல்­லது வேறு­வ­டி­விலோ, வீட்டில் சிறிய பிள்­ளை­க­ளுக்கு கதை சொல்லும் நேரம் ஒன்று ஒதுக்­கப்­ப­டலாம். இதில் அய­ல­வர்­களின் பிள்­ளை­களும் பங்கு கொள்­ளலாம். வீட்டில் வளர்ந்த ஒருவர், அல்­லது ஒரு முதி­யவர், அல்­லது பொறுத்தம் எனக் கருதும் எவரும் இதனை நடாத்தி வைக்­கலாம். நபி­மார்­க­ளது வர­லா­றுகள், ஸஹா­பாக்­க­ளது கதைகள், வர­லாற்று நிகழ்­வுகள் என்­பன இங்கு இடம்­பெ­றலாம்.

4. ரம­ழானில் தொலைக்­காட்­சியை தவிர்ந்து கொள்­வது நல்­ல­துதான். ஆனால் பார்த்தல் ஊடாக ஒரு விட­யத்தைக் கற்றுக் கொள்ளும் ஆர்­வத்­தையும் சந்­தர்ப்­பத்­தையும் இதனால் தடை செய்து விடக்­கூ­டாது. எனவே, தொலைக்­காட்­சிக்குப் பதி­லாக சீடீ க்கள் மூலமோ வேறு வகை­யிலோ பய­னுள்ள விட­யங்­களை பிள்­ளைகள் பார்ப்­ப­தற்கு வாய்ப்­ப­ளிக்­கப்­படல் வேண்டும். வர­லாற்றுக் கார்­டூன்கள், கல்வி நிகழ்ச்­சிகள் போன்­றன தற்­பொ­ழுது சந்­தையில் நிறை­யவே கிடைக்­கின்­றன. பார்த்தல் மட்­டுமே பிள்­ளை­க­ளது வேலை­யாக அமைந்து விடாமல் பெற்றோர் கவ­ன­மாக இருத்தல் வேண்டும்.

5. அல்­குர்ஆன் ஓதுதல், மனனம், ஹதீஸ், துஆக்கள் மனனம் போன்ற பல விட­யங்­களில் வீட்­டுக்­குள்ளே போட்டி நிகழ்ச்­சி­களை அறி­விப்புச் செய்­யுங்கள். வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு நல்ல பரி­சில்­களை வழங்­குங்கள். தோல்வி கண்­ட­வர்­க­ளையும் கவ­னிக்க மறந்து விடா­தீர்கள்.

6. உங்கள் சிறிய பிள்­ளை­களை நோன்பு கால எல்லா நிகழ்ச்­சி­க­ளிலும் பங்கு கொள்ளச் செய்­யுங்கள். ஸஹர் நேரம், நோன்பு திறக்கும் நேரம் என்­பன அவர்கள் நோன்பு நோற்­க­வில்லை என்­ப­தற்­காக வில­கி­யி­ருப்­ப­தற்­கான சந்­தர்ப்­பங்கள் அல்ல, அவர்­க­ளையும் இணைத்துக் கொள்­ளுங்கள்.

7. உங்கள் சிறிய பிள்­ளை­களை கொஞ்சம் கொஞ்­ச­மாக நோன்பு நோற்கப் பழக்­குங்கள். முதலில் காலை 10 மணி வரை, அடுத்து ழுஹர் வரை பின்னர் அஸர் வரை இறு­தி­யாக முழு நோன்­பையும் நோற்கப் பழக்­கலாம். அவர்கள் முழு­மை­யான நோன்பு நோற்ற நாளைக் கொண்­டா­டுங்கள். குடும்­பத்­தினர் எல்­லோரும் ஒரு சுற்­றுலாச் சென்று நோன்பு திறக்­கலாம். அல்­லது இர­வு­ணவை உண­வ­கத்தில் பெறலாம். அல்­லது பிள்­ளையின் நண்­பர்கள் எல்­லோ­ரையும் அழைத்து வீட்டில் ஒரு இப்தார் செய்­யலாம்.

8. பொது­வாக வீடு­க­ளிலும் பள்­ளி­வா­யல்­க­ளிலும் வளர்ந்­த­வர்­க­ளுக்­குத்தான் இப்தார் செய்­வார்கள். நீங்கள் சிறிய பிள்­ளை­க­ளுக்கு மாத்­திரம் ஓர் இப்தார் நிகழ்ச்சி செய்­யுங்கள். உங்கள் பிள்­ளை­களின் நண்­பர்கள் அதில் முக்­கியம். அய­ல­வர்­களின் பிள்­ளைகள், உற­வி­னர்­களின் பிள்­ளைகள் எல்­லோ­ரையும் பங்கு கொள்ளச் செய்­யுங்கள். நோன்பு நோற்­றவர் நோக்­கா­தவர் என்று வேறு­ப­டுத்­தா­தீர்கள். அழைப்­பாளர் பட்­டியல் தயா­ரித்தல், அழைப்பை மேற்­கொள்ளல் அனைத்­தையும் பிள்­ளை­களே மேற்­கொள்­ளலாம். மாத்­தி­ர­மல்ல இப்தார் உணவு வகைகள், நிகழ்ச்­சி­களைக் கூட அவர்­களே தீர்­மா­னித்து செய்ய சந்­தர்ப்­ப­ம­ளி­யுங்கள்.

9. குடும்­பத்தில் ஆண்கள் தொழு­கை­களை முடிந்­த­வரை பள்­ளி­வா­ய­லி­லேயே மேற்­கொள்­ளுங்கள். பெண்கள் வீட்டில் ஜமா­அத்­தாகத் தொழுங்கள். தொழு­கையின் பின்னர் உரிய துஆக்­களை திக்ர்­களை பிள்­ளை­க­ளுக்குக் கற்றுக் கொடுங்கள். தொழு­கையின் பின்னர் ஒரு சிறிய காதி­ராவை -உப­தேசம்- அமைத்துக் கொள்­வது சிறந்­தது. சுன்­னத்­தான தொழு­கை­க­ளையும் உட­னுக்­குடன் நிறை­வேற்ற வைத்தல் சிறந்­தது. ஆண்கள் வீட்டில் இருக்கும் நிலை ஏற்­பட்டால் அவர்­களும் இந்த கூட்­டான இபா­தத்தில் பங்கு கொள்­ளலாம்.

10. தராவீஹ் தொழு­கையை பள்­ளி­வா­யலில் நிறை­வேற்­று­வது நல்­லது. குடும்­பத்­தினர் இணைந்து பள்­ளிக்குச் சென்று நிறை­வேற்றி விட்டு வரு­வது ஒரு நல்ல மாறு­த­லாக இருக்கும். இய­லா­த­போது வீட்டில் ஜமா­அத்­தாக நிறை­வேற்­று­வது மிகவும் சிறந்­தது. இதிலே உற­வி­னர்­களும் அய­ல­வர்­களும் இணைந்து கொள்­வார்கள் எனின், இங்கும் சிறிய உரை­களும் உப­தே­சங்­களும் இடம்­பெ­றலாம்.

11. ஸஹர் வேளையில் குடும்­பத்­துடன் குறைந்­த­பட்சம் இரண்டு ரக்­அத்­துக்களே னும் ஜமா­அத்­துடன் தொழு­வதை பழக்­க­மாக்கிக் கொள்­ளுங்கள். பிள்­ளை­களின் பங்கு கொள்ளல் இதில் முக்­கி­ய­மா­னது. ஆனால் நிர்ப்­பந்­தித்து வற்­பு­றுத்தி ஈடு­பட வைப்­பதைத் தவிர்ந்து கொள்­ளுங்கள்.

12. ஸதகா ரம­ழானில் ஒரு உயர்ந்த வணக்­க­மாகும். நபி­ய­வர்கள் வீசு­கின்ற காற்றை விடவும் வேகமாய் ஸதகா செய்­துள்­ளார்கள். ரம­ழானின் ஒவ்­வொரு தினமும் கழி­கின்­ற­பொ­ழுது ஸதகா என்ற இபா­தத்தும் அன்­றைய நாளில் ஒரு முக்­கிய இபா­தத்­தாக அமை­வதில் அவ­தா­ன­மாக இருங்கள். தினமும் குறைந்­தது ஒரு­வ­ரை­யேனும் உங்­க­ளுடன் நோன்பு திறக்க இணைத்துக் கொள்­வது பற்றி சிந்­திக்­கலாம். இதுவே நீங்கள் ஒரே மாதத்தில் அறு­பது நோன்­பு­களை நோற்ற நன்­மையைப் பெற்றுத் தரும். நோன்பு கால உண­வு­களில் அய­ல­வ­ருக்­கான பங்கை மறந்து விடா­தீர்கள். உங்கள் பிள்­ளை­க­ளிடம் பொறுப்­ப­ளித்தால் உற்­சா­கத்­துடன் அவர்கள் விநி­யோ­கித்­து­விட்டு வரு­வார்கள்.

13. வீட்டில் ஒவ்­வொ­ரு­வரும் ஓர் உண்­டி­யலை வைத்து தினமும் இய­லு­மான ஒரு தொகையை சேமித்து வரலாம். ரம­ழானின் இறு­தியில் ஒரு ஏழைக்­கு­ரிய பெருநாள் ஆடை­யா­கவும் அது மாறலாம். அல்­லது பெரு­நாள்­தின கொண்­டாட்­டத்­திற்கே அது உத­வலாம்.

14. குறைந்­த­பட்சம் வாரத்தில் ஒரு நாள் குடும்­பத்­துடன் ஏதா­வது ஒரு வீட்டை தரி­சிக்கச் செல்­லுங்கள். அது அய­ல­வ­ராக அல்­லது உற­வி­ன­ராக அல்­லது நண்­ப­ராக இருக்­கலாம். ஒரு தட­வையில் ஒரு வீடு மட்டும் என்று அமைத்துக் கொள்­வது இந்த நடை­மு­றையை தொடர்ந்தும் செய்ய உதவும். இது இரவு நேரங்­களில் அமைதல் சிறந்­தது. ஆனால், பள்­ளி­வாயல் இபாத்கள் இதனால் பாதிப்­பு­றாமல் பார்த்துக் கொள்­ளுங்கள்.

15. முடிந்­த­வரை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி குடும்­பத்­துடன் ஒன்றாய் அமை­வது சிறந்­தது. வீட்டில் எல்­லோரும் அமர்ந்து துஆக்­களைக் கேட்டு, திக்ர்­களில் ஈடு­பட்டு நோன்பு திறக்­கலாம். கண­வன்மார் இந்த நிகழ்வில் கலந்து கொள்­வதில் கூடுதல் அக்­கறை கொள்­ளுங்கள். தொழில், தஃவா கார­ணங்கள் குடும்­பத்­து­ட­னான இந்த அமர்வின் முக்­கி­யத்­து­வத்தை மறக்­க­டிக்­கா­தி­ருக்­கட்டும்.

16. இறுதிப் பத்து என்­பது ரம­ழானின் மிக விஷே­ட­மான காலப் பகுதி. ஆயிரம் மாதங்­களை விட சிறந்த ஒரு இரவு அதில் இருக்­கி­றது. அத­னால்தான் இஃதிகாப் எனும் அமல் விஷே­ட­மாக இந்தக் காலப் பகு­தியில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த பத்து நாட்­க­ளையும் குடும்­பத்­த­வர்கள் சிறந்த முறையில் பயன்­ப­டுத்திக் கொள்ள வாய்ப்­பேற்­ப­டுத்­துங்கள். ஆண்கள் குறைந்­த­பட்சம் இரவு வேளை­களில் பள்­ளி­வா­யலில் இஃதிகாப் இருப்­பது நல்­லது. பெண்கள் வீடு­களில் தமது படுக்­கை­ய­றை­களில் அல்­லது அதற்காய் ஒதுக்­கப்­பட்ட அறை­களில் இஃதிகாப் இருக்­கலாம். வீட்டில் பெண்கள் தொடர்ந்து இஃதிகாப் இருப்­பதில் சிர­மங்கள் இருக்கும். அப்­போது விட்டு, விட்டு இருக்­கலாம். இஃதி­காபில் பிள்­ளை­க­ளையும் இணைத்துக் கொள்­ளுங்கள். அந்த அமலின் சிறப்பை அவர்­க­ளுக்குச் சொல்லிக் கொடுங்கள். லைலதுல் கத்ரைப் பற்றிக் கற்றுக் கொடுங்கள். அல்­குர்­ஆனை கூட்­டாக ஓதுங்கள். கூட்­டாக இரவுத் தொழு­கையில் ஈடு­ப­டுங்கள். திக்ர்­களை அதிகம் செய்­யுங்கள். லைலதுல் கத்­ரி­னு­டைய விஷேட துஆக்­களை எழுதி குறித்த அறைச் சுவர்­களில் ஒட்டி விடுங்கள்.

17. ஸகாதுல் பித்ர் ஒரு கட­மை­யான இபாதத் அதனை தவ­றாது நிறை­வேற்­றுங்கள். ஒவ்­வொ­ரு­வ­ருக்­கா­கவும் அந்த கடமை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். முடிந்தவரை பணமாகக் கொடுத்து வசதி குறைந்த ஒருவருடைய பாரத்தைக் குறைக்க முயலுங்கள்.

18. ரம­ழானில் வீட்டில் மனை­வியின் பணி­களில் கண­வன்மார் பங்­கெ­டுப்­ப­தற்கு முயற்சி செய்­யுங்கள். சமை­ய­ல­றை­யிலும் சரி ஏனைய வீட்டு வேலைகளிலும் சரி இருவரும் இணைந்து வேலைகளைச் செய்வதற்கான சந்தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சமயங்களில் கண்டிப்பாக நீங்கள் பல விடயங்களையும் பேசிக் கொள்வீர்கள். சமையல் பணிகள், வீட்டு வேலைகளின் நுட்பங்கள் பற்றி மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது வேலை பற்றிய விடயங்களையும் மனைவியிடம் கூறுங்கள். இது ரமழானில் மனைவிக்கு இபா­தத்­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான வாய்ப்பை அதி­க­ரிப்­பது மாத்­தி­ர­மன்றி கணவன் மனை­விக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்­வையும் அன்­பையும் அதி­க­ரிக்­கின்ற விட­ய­மா­கவும் இருக்கின்றது.

19. பெருநாள் தினம் ரமழானுக்கான பரிசு. எனவே புதிய ஆடைகள், விதம்விதமான உணவுகளை குடும்பத்தினர்க்குப் பெற்றுக் கொடுப்பதில் கணவன்மார் தாராளமாய் நடந்து கொள்ளலாம். குறிப்பாக பிள்ளைகளின் பெருநாள் தின சந்தோசம் ஆடைகளிலும் உணவு வகைகளிலும்; அதிகம் தங்கியிருக்கிறது. உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி பெற்றோருக்காகவும் ஆடைகள் வாங்குவது நல்லது. இயலுமானால் யாரேனும் ஒரு வசதியற்றவருக்காகவும் வாங்கிக் கொடுங்கள். பெருநாள் தின சமையலை, உறவினர்கள் அயலவர்கள் என பல வீடுகள் இணைந்து மேற்கொள்வது பற்றி சிந்தியுங்கள். நாம் பெருநாள் கொண்டாடினோம் என்பது அப்போதுதான் மறக்காதிருக்கும்.

இவை சில ஆலோசனைகள் மட்டுமே. சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இவை பயனுள்ளதாய் அமையட்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.