இலங்கையின் பிரபல மூத்த தமிழ் கல்விமான் பேராசிரியர் சோ.சந்திரசேகரமின் மறைவு இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவரது மறைவு தமிழ் சமூகத்தில் நிரப்ப முடியாத பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகை என பேராசிரியர் சோ.சந்திரசேகரமின் மறைவையொட்டி அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மலையகத் தமிழராய் பிறந்து, கல்வியிலே உச்சம்தொட்டு, முழு இலங்கை நாட்டு மக்களினதும் அபிமானத்தை வென்ற மூத்த கல்விமான் பேராசிரியர் சோ.சந்திரசேகரம். பல்கலைகழகங்களிலே எண்ணற்ற கல்விமான்களை உருவாக்கிய இவர், கணக்கிட முடியாத அளவில் ஆய்வுக்கட்டுரைகள், மேடைப் பேச்சுக்கள், சிறப்புரைகள், கலந்துரையாடல்கள், பத்திரிகை ஆக்கங்கள், நூல்கள் என கல்விக்காக அள்ளி வழங்கியுள்ளார்.
அரசாங்கத்திலும், சமுதாய அமைப்புகளிலும் பல்வேறு பதவிகளை அலங்கரித்து பாரிய சேவைகளை குறிப்பாக தமிழ் மக்களுக்கும், பொதுவாக முழு நாட்டுக்கும் செய்துள்ளார். எத்தகைய உயர் பதவிகளை வகித்தபோதிலும், எந்தவித பகட்டும், ஆடம்பரமும் இல்லாமல் எல்லோருடனும் நட்போடு பழகும் பண்பாளர். தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து கலை இலக்கியத்துக்கும் தொண்டாற்றியுள்ளார்.
முஸ்லிம்களின் உயர்கல்வி பற்றி அதிக அக்றையோடு செயற்பட்ட பேராசிரியர், முஸ்லிகளின் கல்வி தொடர்பான நிகழ்வுகளில் தவறாது பங்குபற்றி ஆக்கபூர்வமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். காலத்துக்கேற்ற வகையில் பொருத்தமான ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வழிகாட்டியுள்ளார்.
தமிழ் முஸ்லிம் நல்லுறவின் பாலமாக இருந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரம், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் செயற்பாடுகளிலும் பங்குபற்றி உதவியுள்ளதை நன்றியோடு நினைவு கூறுகிறோம்.
ஈடுசெய்ய முடியாத இழப்பான பேராசிரியரின் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்ப அங்கத்தவர்களுக்கும், தமிழ் சமூகத்துக்கும், நாட்டு மக்களுக்கும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது.-Vidivelli