பயங்கரவாதத்துக்கு எதிராக வளைகுடா நாடுகள் ஒற்றுமைப்பட வேண்டும்

சவூதி மன்னர் சல்மான் கோரிக்கை

0 750

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒற்றுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று சவூதி அரேபிய மன்னர் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.

ரியாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான வளைகுடா அரபு உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சவூதி மன்னர் சல்மான் இங்கு மேலும் உரையாற்றுகையில் “ஈரானிய நடப்பாட்சி எப்போதும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்து வருகின்றது. இது நமது நாட்டினுடைய நலன்களைப் பராமரிக்கவும், பிராந்தியத்திலும், உலகிலும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க எமது பங்காளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய தருணம். ஈரானிய அணுசக்தித் திட்டத்திற்கும், ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டங்களை தடுப்பதற்கும் உத்தரவாதம் வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

குறித்த மாநாட்டிற்கு சவூதி மன்னர் தலைமை தாங்கியதுடன், முடிக்குரிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மான், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்த உச்சி மாநாட்டில் கட்டார் அமீர்  கலந்து கொள்ளாத போதும், அந்நாட்டு வெளி விவகார இராஜங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

கட்டார் தீவிரவாதத்திற்கு துணை போவதாக குற்றம்சுமத்தப்பட்ட நிலையில், கடந்த வருடம் நடுப் பகுதியிலிருந்து, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியாக அதனை புறக்கணித்து வருகின்றன. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை கட்டார் வன்மையாக மறுத்து வருகின்றது.

இதனிடையே, கடந்த ஒக்டோபர் மாதம் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட விவகாரத்தில் சவூதி அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ள நிலையில் ஆறு நாடுகளின் வளைகுடா ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றுள்ளது. குறித்த மாநாட்டில் எரிபொருள் அரசியல், யெமன் போர் உள்ளிட்ட பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் ஈரானின் பிராந்திய நடவடிக்கைகள்,, கட்டார் விவகாரங்கள் என்பன குறித்து ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.