சுதத் அதிகாரி
நிறைவேற்றுக் குழு உறுப்பினர், சமாதானத்துக்கும் நட்புறவுக்குமான இலங்கை அமைப்பு
பலஸ்தீன் நில தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டு சியோனிச இஸ்ரேல் பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றி பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நிலங்களை பலாத்காரமாக கையகப்படுத்தியது. இஸ்ரேல் நிர்வாகம் நிலத்தைக் கையகப்படுத்துவதை எதிர்த்து நசரேத்தில் கடுமையாகப் போராடிய ஆறு பலஸ்தீனர்கள் இந்த துரதிர்ஷ்டமான நாளில் சுட்டுக் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் பலர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து பலஸ்தீனர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ” பலஸ்தீன நிலங்களின் பாதுகாப்புக்கான தேசிய முன்னெடுப்பு” எனும் ஓர் அரசியல் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறு இந்தக் குழு கோரிக்கை விடுத்தது. தமது நிலத்தை இழந்ததனால் ஏராளமான பலஸ்தீனர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலஸ்தீன நில தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த நாளில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த பலஸ்தீனர்கள் பரவலான போராட்டங்களை முன்னெடுத்தனர். 1970 களுக்கு முந்திய கிளர்ச்சிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைப் போலன்றி அதிக அளவிலான பலஸ்தீனர்கள் பங்குகொண்ட நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றுபட்ட போராட்டமாக இது அமைந்திருந்தது. பலஸ்தீன நில தினப் பிரகடனம் பலஸ்தீன மக்களுக்கு மிகுந்த வீரியத்தையும் வெற்றியையும் தந்தது. இஸ்ரேலிய எல்லையின் இருமருங்கிலும் வாழும் அரேபியரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் இது வழியமைத்தது.
அன்றிலிருந்து, இஸ்ரேலிய இராணுவத்தினரால் வீரமிக்க ஆறு போராளிகள் கொல்லப்பட்டதையும் தமது மூதாதையர்களின் சட்டபூர்வமான பூர்வீக நிலத்தைப் பறித்தெடுப்பதன் மூலம் பலஸ்தீன மக்களுக்கு இதுவரை இழைக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான அநீதியையும் உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் மார்ச் 30 ஆம் திகதி ஆண்டுதோறும் பலஸ்தீனர்களால் நினைவுகூரப்படுகிறது. வரலாறு நெடுகிலும் ஒவ்வொரு வருடமும் மார்ச் 30 அன்று நினைவுகூரப்படும் பலஸ்தீன நில தினம் பலஸ்தீனர்களுக்கும் உலகெங்கிலுமுள்ள புலம்பெயர் பலஸ்தீனர்களுக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வு வரலாற்றைக் குறிப்பது மட்டுமல்லாமல் பலஸ்தீனப் புரட்சியைப் பற்றிய பொதுவான நினைவூட்டலையும் வழங்குகிறது.
1967 இல் கிழக்கு ஜெரூஸலம், காஸா, மற்றும் மேற்குக் கரையை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த முதல் நாளிலிருந்தே இஸ்ரேல் மென்மேலும் பலஸ்தீன நிலங்களை கையகப்படுத்தத் தொடங்கியதோடு இஸ்ரேலியப் பிரஜைகளை அதிலே குடியமர்த்தவும் ஆரம்பித்தது. இன்றைய நிலவரப்படி 600,000 இஸ்ரேலியர்கள் 230 க்கும் மேற்பட்ட வீட்டுத் திட்டங்களில் சர்வதேச சட்டத்துக்கு முரணான வகையில் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெய்த்ஸலம் மற்றும் கெரம் நவட் (B’Tselem and Kerem Navot) வெளியிட்ட அண்மைய அறிக்கையின்படி, பறிமுதல் செய்யப்பட்ட பலஸ்தீன நிலங்களில் 20 க்கும் மேற்பட்ட துனாம்களில் (ஒரு துனாம் என்பது 1000 சதுர மீட்டருக்குச் சமம்) இஸ்ரேலியர்களைக் குடியமர்த்தி இஸ்ரேலிய அரசாங்கம் நிர்வகித்து வருகிறது.
1948 இல் ஒன்றரை மில்லியன் பலஸ்தீனர்கள் தமது தாயகத்தில் வாழ்ந்தனர். அதே ஆண்டில் (1948) இஸ்ரேல் பலஸ்தீன நிலத்துக்குள் ஒரு நாடாக நிறுவப்பட்டது. 1976 ஆம் ஆண்டளவில் ஒன்றரை மில்லியன் பலஸ்தீனர்களில் 20 வீதம் மட்டுமே இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்தேர்ச்சியான சோதனைகள், ஊரடங்கு உத்தரவுகள், கைதுகள், தங்கள் வீடுகளில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் விஷேட அனுமதி அட்டைகளைப் பெற்றிருக்க வேண்டியிருப்பது போன்றதான சிரமங்கள், சேரி வாழ்க்கை எனப் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பலஸ்தீன சனத்தொகை கணிப்பீட்டுப் பணியகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி 1948 முதல் பலஸ்தீன நிலப்பரப்பில் 85 வீதத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்தின்படி 55 வீதமான நிலம் 1948 இல் ஏற்கனவே கொடுக்கப்பட்டுமுள்ளது.
வருந்தத்தக்கவகையில், உலகில் வாழும் 13.7 மில்லியன் பலஸ்தீனியர்களில் 6.2 மில்லியன் பேர் பலஸ்தீன எல்லைக்கு வெளியே அகதிகளாக வாழுகின்றனர். சர்வதேச சட்டத்தின்படி அகதிகள் தமது சொந்த பூர்வீக நிலத்துக்கு திரும்ப முடியுமாக இருந்தாலும் இதுவரை பலஸ்தீன அகதிகளுக்கு தமது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத நிலையே காணப்படுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சட்டவிரோத குடியேற்றங்களை நிறுவுவது உட்பட்ட இஸ்ரேலின் பல நடவடிக்கைகள் பலஸ்தீனின் இருப்புக்கு கடுமையான தடையாக மாறியுள்ளதோடு அவர்களின் செயற்பாடுகள் நாட்டில் நீடித்த அமைதிக்கான நம்பிக்கையையும் சிதைப்பதாக அமைந்துள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் பலஸ்தீனர்கள் தாம் பிறந்த இடத்தில் தமது சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் அனுபவிப்பதைத் தடுக்கின்ற தெளிவான சியோனிசக் கொள்கையைக் குறித்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. சர்வதேச ரீதியாக கண்டிக்கப்பட்ட போதிலும் இஸ்ரேல் அரசாங்கம் அதன் சியோனிச விரிவாக்கக் கொள்கையையும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களில் சட்டவிரோத குடியேற்றங்களையும் தொடர்ந்து வருகிறது.
1976 சம்பவத்துக்கு 16 ஆண்டுகளுக்குப் பின்னர் பலஸ்தீன நில தினம் தேசிய பொதுவிடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டது. எதிர்ப்புப் பேரணிகள் மற்றும் பொதுவேலை நிறுத்தங்களை முன்னெடுப்பதனூடாக பலஸ்தீனர்கள் ஆண்டுதோறும் இந்த நாளை நினைவுகூருகின்றனர். அதேநேரம் உலகின் வேறுபல பகுதிகளிலும் பலஸ்தீன நில தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கூட பலஸ்தீனர்கள் இன்றுவரை இந்த நிகழ்வை அனுஷ்டித்து வருகிறார்கள்.
உலகின் 140 க்கும் மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனில் சியோனிச இஸ்ரேலின் நில அபகரிப்புக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு இந்தக் கொள்கையை கடுமையாக நிராகரித்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்துடன் அபகரிக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களில் இஸ்ரேல் நிர்வாகம் புதிய குடியேற்றங்களை நிறுவி வருகின்றது. இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டித்து ஐநாவில் 500 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனாலும் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவும் பின்னூட்டமும் காரணமாக உலகளவிலான கோபத்துக்கும் கண்டனத்துக்கும் மத்தியிலும் சியோனிச இஸ்ரேல் பலஸ்தீனில் நில அபகரிப்பைத் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையிலும் பலஸ்தீனில் இஸ்ரேலின் நில அபகரிப்புக் கொள்கையை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் அமெரிக்கா 40 க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் தனது வீட்டோ அதிகாரத்தை ஐநா சபையில் பயன்படுத்தியுள்ளது. இந்தப் பின்புலத்தில், இஸ்ரேலில் உள்ள சாதாரண மக்கள் ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு அல்லாடி வருகின்றனர். 1967 இல் நிறுவப்பட்ட எல்லைகளுடன் ஐக்கிய நாடுகள் சபையில் பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள இருநாட்டுத் தீர்வை நடைமுறைப்படுத்துவதும் சுதந்திர பலஸ்தீன தேசத்தின் தலைநகராக கிழக்கு ஜெரூஸலத்தை அங்கீகரிப்பதும் பலஸ்தீன அகதிகள் தமது தாயகம் திரும்புவதற்கான உரிமையை ஏற்றுக் கொள்வதுமே தற்போதைய நெருக்கடிகளுக்கான ஒரே தீர்வாக அமைய முடியும். இந்தத் தீர்வு மிகவும் தாமதமானதொன்றாக இருந்தாலும் இதுவே இஸ்ரேல் பலஸ்தீன் மக்களுக்கும் முழு மத்திய கிழக்குக்கும் அமைதியைக் கொண்டுவரும். எனவே சமாதானத்தை விரும்பும் ஜனநாயக சக்திகளும் அரசாங்கங்களும் 1967 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும்.- Vidivelli